தேவி +2
விமர்சனம்
நடிப்பு - பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, நந்திதா ஸ்வேதா
தயாரிப்பு - ஜி.வி.பிலிம்ஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் - விஜய்
இசை - சாம் சிஎஸ்
வெளியான தேதி - 31 மே 2019
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
தமிழ் சினிமாவில் சீக்கிரமே இந்த இரண்டாம் பாகங்களுக்குத் தடை விதித்தால் நல்லது. அப்படியாவது முதல் பாகத்தின் மதிப்பாவது இரண்டாம் பாகம் வந்த பிறகு கொஞ்சம் குறையாமல் இருக்கும்.
பிரபுதேவாவுக்கு தமிழ் சினிமாவில் நடிகராக மீண்டும் ஒரு ரீ-என்ட்ரியைக் கொடுத்த படம் தேவி. இந்த தேவி + 2 ரீ-எக்சிட் கொடுத்துவிடும் போலிருக்கிறது. முதல் பாகம் என்றால் ஒரு பேய், இரண்டாம் பாகம் என்றால் இரண்டு போய் போலிருக்கிறது.
அதனால்தான் பாகம் 2 என்பதற்குப் பதிலாக +2 என வைத்திருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதில் காட்டிய கவனத்தை படத்தின் கதையில் இயக்குனர் விஜய் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முதல் பாகத்தில் அப்பாவி கிராமத்துப் பெண் தமன்னாவைப் பிடித்த நடிகை தமன்னா பேய், அவரது ஆசை தீர்ந்ததும் அவரை விட்டு வெளியேறியது. எங்கே மீண்டும் அந்த நடிகைப் பேய், தன் மனைவிக்குள் வந்துவிடுமோ என பயப்படுகிறார் கணவர் பிரபுதேவா. ஒரு ஜோதிடரிடம் கேட்க நான்கு பக்கமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதிக்குப் போய்விட்டால் பேய் வராது என்கிறார். அதனால், அலுவலக வேலையை மொரிஷியஸ் தீவுக்கு மாற்றிக் கொண்டு அங்கு போகிறார். போன இடத்தில் தங்கள் காதல் நிறைவேறாத இரண்டு ஆண் பேய்கள் பிரபுதேவாவுக்குள் புகுந்து கொள்கின்றன. அந்த பேய்களிடம் தமன்னா அக்ரிமென்ட் போட்டு அந்த பேய்களுக்கும் உதவி, கணவனையும் எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த தேவி +2.
பேய் என்றாலே அது ஆக்ஷன் பேயாக, பயமுறுத்தும் பேயகாத்தான் இருக்கும். இந்தப் படத்தில் வரும் இரண்டு பேய்களுமே காதல் தோல்விப் பேய்களாகத்தான் இருக்கிறது. இரண்டுமே அவர்களது மனம் கவர்ந்தவர்களிடம் சென்று காதலிப்பதாகச் சொல்லி துரத்துகின்றன. அதில் ஒரு பேய் தமிழ் பேசும் பேய், இரண்டாவது பேய் தெலுங்கு பேசும் பேய். இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வசதியாக இருக்கட்டுமே என்று அப்படி அமைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்த இரண்டு பேய்களாக நந்திதா, டிம்பிள் ஆகியோரைக் காதலிப்பவராக பிரபுதேவா, அடுத்து மனைவி தமன்னாவை காதலிப்பவராக பிரபுதேவா. காதலிப்பதைத் தவிர படத்தில் அவருக்கு வேறு வேலை இல்லை.
முதல் பாகத்தில் பார்த்த அதே அப்பாவி தமன்னா, அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே ஞாபகம் வைத்திருக்கிறார் போலிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்திலும் அதே அப்பாவித்தனத்துடன் நடித்துள்ளார். பேய்களிடம் இருந்து கணவரைக் காப்பாற்ற பாடுபடுகிறார்.
தமன்னாவுக்கு உதவும் மொரிஷியஸ் வக்கீலாக கோவை சரளா. அங்கு இருக்கும் தமிழராக இருந்தாலும் நீட்டி முழக்கி பேசுவதை அவர் விடமாட்டார் போலிருக்கிறது. எப்போதுதான் சாதாரணமாக பேசி நடிக்கப் போகிறாரோ ?.
நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். இருவருக்கும் பெரிதாக எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆர்ஜே பாலாஜி கிளைமாக்சுக்கு முன்பாக வந்து தலைகாட்டிவிட்டுப் போகிறார். அஜ்மல்தான் படத்தின் வில்லன்.
விக்ரம் வேதா என்ற ஒரே ஒரு படத்தை அடையாளமாக வைத்துக் கொண்டு சாம் சிஎஸ் இன்னும் எத்தனை படங்களை நகர்த்தப் போகிறாரோ. பிரபுதேவா படம் என்றால் ஒரு பாடலையாவது ஹிட்டாக்க வேண்டாமா ?.
அடுத்தடுத்து தொடர்ந்து படங்களை இயக்குவது சிறப்பல்ல, நல்ல தரமான படங்களைக் கொடுப்பதே சிறப்பு என இயக்குனர் விஜய் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்.
தேவி + 2 - பெயரில் மட்டுமே பிளஸ்.
பட குழுவினர்
தேவி +2
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்