மிஷன் சாப்டர் 1
விமர்சனம்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - விஜய்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - அருண் விஜய், எமி ஜாக்சன்
வெளியான தேதி - 12 ஜனவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடம்
ரேட்டிங் - 3/5
ஒரே ஒரு சிறைச்சாலையைச் சுற்றி நடக்கும் கதை, அதுவும் லண்டனில் உள்ள ஒரு சிறை. அந்த ஒரே இடத்தை வைத்து முடிந்தவரையில் பரபரப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய். குறைவான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அது தெரியாத அளவிற்கு திரைக்கதையில் அடுத்து என்ன என்ற நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
தனது மகளுக்கு தலையில் முக்கிய ஆபரேஷன் செய்வதற்காக லண்டன் செல்கிறார் அருண் விஜய். ஆபரேஷனுக்கான பணத்தை ஹவாலா மூலம் பெற கையில் ஆதாரம் ஒன்றை வைத்திருக்கிறார். அதை சிலர் பறிக்கும் முயற்சியில் நடந்த சண்டையில் சிக்கி அருண் விஜய் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அந்த சிறையிலிருந்து சில முஸ்லிம் தீவிரவாதிகளைத் தப்பிக்க வைத்து, இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டை சீர்குலைக்க அந்த மிஷனின் தலைவன் பரத் பொபன்னா முயற்சிக்கிறார். தீவிரவாதிகளின் தப்பிக்கும் முயற்சியை சிறைக்குள் இருந்தபடியே அருண் விஜய் எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆக்ஷன் படக் கதையைக் கையில் எடுததிருக்கிறார் விஜய். ஒரே இடத்தில் நடக்கும் ஆக்ஷன் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வரும். தமிழ் சினிமாவில் அதிகம் வந்ததில்லை. இந்தப் படத்தில் அடுத்து இப்படித்தான் நடக்கும் என்ற யூகம் நமக்குள் எழுந்தாலும் படம் விறுவிறுப்பாகவே நகர்கிறது.
மனைவியை இழந்து, மகளுக்கும் உடல்நலனில் பிரச்சனை வந்து மகளையாவது காப்பாற்ற வேண்டும் என லண்டன் செல்கிறார் அருண்விஜய். அமைதியாக இருக்கும் அவருக்குள் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது என ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுகிறார் இயக்குனர். அந்த பிளாஷ்பேக்கை சரியான சமயத்தில் திரைக்கதையில் ஓபன் செய்கிறார். துடிப்பான ஆக்ஷன் ஹீரோவாக கதைக்கேற்றபடியும், கதாபாத்திரத்திற்கேற்றபடியும் பொருந்திப் போகிறார் அருண் விஜய். சில காட்சிகள் அதிகமான ஹீரோயிசத்துடனும் அமைந்திருக்கிறது.
'2.0' படத்தில் பார்த்த எமி ஜாக்சனா இது என கொஞ்சம் அதிர்ச்சியடைய வைக்கிறார். தோற்றத்தில் வயது கூடியிருப்பது தெரிகிறது. இருந்தாலும் அந்த லண்டன் சிறையின் தலைமை அதிகாரியாக அதிகாரத் தோரணையை சரியாகவே காட்டியிருக்கிறார் எமி.
அருண் விஜய்க்கு உதவி செய்யும் சிங் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அபி ஹாசன். அவரா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். தீவிரவாதக் குழுவின் தலைவனாக பரத் பொபன்னா உட்கார்ந்த இடத்திலிருந்தே மிரட்டுகிறார். அருண் விஜய்க்கு உதவி செய்யும் மருத்துவமனை நர்ஸ் ஆக நிமிஷா சஜயன், அருண் விஜய் மகளாக பேபி இயல் ஆகியோரும் குறைவாக வந்தாலும் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். ஒரே இடத்தில் காட்சிகள் நகர்கிறது என்ற குறையைச் சொல்ல முடியாதபடி விறுவிறுப்பை பின்னணி இசையில் சேர்த்திருக்கிறார். சந்துப் கே விஜய், ஒரே சிறைச்சாலையை விதவிதமான கோணங்களில் படமாக்கியிருக்கிறார். தொய்வில்லாத படத்தொகுப்பைத் தந்திருக்கிறார் எடிட்டர் ஆண்டனி.
பழைய டைப் கதையாக இருப்பது, அடுத்து இப்படித்தான் காட்சிகள் நகரும் என யூகிக்க முடிவது படத்தின் குறை. இடைவேளைக்குப் பின் சில பல புதிய காட்சிகளை யோசித்திருக்கலாம். இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நகர்வது தெரியாத அளவிற்கு போரடிக்காமல் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
மிஷன் சாப்டர் 1 - சக்ஸஸ்
மிஷன் சாப்டர் 1 தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
மிஷன் சாப்டர் 1
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்