ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்,jurassic world rebirth
Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு: ப்ராங்க் மார்ஷல், பேட்ரிக் க்ரோலே
இயக்கம்: கரேத் எட்வர்ட்ஸ்
நடிப்பு: ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹெர்ஷாலா அலி, ஜொனாதன் பெய்லி, ரூபர்ட் பிரெண்ட், மானுவல் கார்சியா-ருல்போ, லூனா பிளேஸ், டேவிட் இயாகோனோ
இசை: ஜான்வில்லியம்
வெளியான தேதி: ஜூலை 4, 2025
நேரம்: 2 மணிநேரம் 13 நிமிடம்
ரேட்டிங்: 3.25 / 5

எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் ஒன்று ஜூராசிக் பார்க். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய அந்த படம் 1993ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. அதை தொடர்ந்து ஜூராசிக் பார்க் அடுத்தடுத்த 5 பாகங்கள் உருவாகின. இப்போது 7வது பாகமாக 'ஜூராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த்' தமிழிலும் வெளியாகி உள்ளது. இது 3டி படமும் கூட.

நிலத்தில் வாழ்பவை, நீரில் வாழ்பவை, வானத்தில் பறப்பவை என 3 விதமான டைனோசர்ஸ் இருக்கும் ஒரு தீவுக்குள் ஒரு டீம் செல்கிறது. இந்த 3 வகை டைனோசரிடம் இருந்து ரத்தமாதிரி சேகரித்து அதைக்கொண்டு இதய நோய்க்கு மருத்து உருவாக்கும் ஒரு சர்வதேச மருந்து நிறுவனத்துக்காக இவர்கள் பணியாற்றுகிறார்கள். வெற்றிகரமாக 3 ரத்த மாதிரிகளை இவர்கள் சேகரித்தார்களா? அங்கே டைனோசர்ஸ் பிடியில் சிக்கி எத்தனை பேர் ரத்தம் கக்கி செத்தார்கள் என்பது இந்த பாகத்தின் திரைக்கதை.

அயன்மேன், கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ், பிளாக்விடோ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்கார்லெட் ஜோஹான்ஸ்சன்தான் இந்த பட ஹீரோயின். இன்னும் சொல்லப்போனால் இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஆக்ஷன் படம். அவர் தலைமையில்தான் படகில் ஈக்குவேடார் அருகே உள்ள அந்த தீவுக்கு ஒரு டாக்டர், வில்லத்தனமான மருந்து கம்பெனி நிர்வாகி, பாதுகாப்பு குழு என அந்த டீம் செல்கிறது. இவர்களுடன் டைனோசர்ஸ் தாக்கியதால் படகை இழந்த 4 பேர் குடும்பமும் இவர்களுடன் அந்த தீவில் தத்தளிக்கிறார்கள். இவர்கள் டைனோசர்ஸ் பிடியில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

இயக்குனர் கரேத் எட்வர்ட்ஸ் படம் முழுக்க விஷூவல் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கடலில் வாழும் திமிங்கலம் போன்ற டைனோசர்ஸ், அதன் பிடியில் சிக்கி தவிக்கும் குழு. அடுத்து நிலத்தில் வாழும் தாவரம் உண்ணும் மிக பிரமாண்டமான டைனோசர்ஸ், அதன் காதல், கடைசியாக பறந்து, பறந்து அடிக்கும் மாமிசம் சாப்பிடும் இன்னொருவகை டைனோசர்ஸ், கிளைமாக்சில் வரும் மலை மாதிரியான ராட்சத கொடூர டைனோசர் என பல வித டைனோசர்களை காண்பித்து, இவை கலப்பினத்தால் உருவானவை, அந்த தீவு அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என கதையும் விடுகிறார்.

இந்த டைனோசர்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கும் காட்சிகள், அதனிடம் இருந்து தப்பித்து ஓடும் காட்சிகள் படத்துக்கு பிளஸ். குறிப்பாக, அசைவ டைனோசர் அட்டகாசங்கள் செம திரில்லிங். சைவ டைனோசர்ஸ், ஒரு குட்டி ஆகியவை அழகு. இதில் ஹீரோயின் புரியும் சாகசங்கள், சக நண்பர்களின் தியாகங்கள், டைனோசர்ஸ் துரத்த பயந்து பதுங்கி தவிக்கும் காட்சிகள் செம. அதிலும் ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட சாகச சீன்கள், எஸ்கேப் சீன்கள் வாவ். அந்த குடும்பம் சம்பந்தப்பட்ட சீன்களில் சென்டிமென்ட் அதிகம். நதி, மலை, கடல், காடு சீன்கள், அதில் டைனோசர்களுடன் போராடுகிற டீமின் உணர்வுகள் என படம் முழுக்க வியப்பும், திரில்லரும் சேர்ந்தே வருகின்றன.

ஜான் மெத்தல்சனின் ஒளிப்பதிவு, ஜான்வில்லியம் இசை படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. கிளைமாக்சில் ஒரு பாழடைந்த லேப்பில் சிக்கிக்கொண்டு இந்த டீம் படும் பாடும், அவர்களை துரத்தும் டைனோசர்ஸ் கோபமும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே சாத்தியம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த பாகத்தை ரசிக்கலாம். 3டி காட்சிகளில் பெரிய சிறப்பில்லை. கதையில் பெரிய திருப்பங்கள் இல்லை, கிளைமாக்ஸ் பழைய பாகங்களை நினைவுப்படுத்துகிறது என்றாலும், படத்தின் காட்சியமைப்பு, திரைக்கதை, பிரமாண்டம், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, அந்த உலகம் தருகிற ஆச்சரியம், அது தருகிற உணர்வு ஆகியவை டைனோர்ஸ் அளவுக்கு பெரிது.

ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் - அனுபவம்... அட்டகாசம்...!

 

பட குழுவினர்

ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓