1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு, சுமன்
தயாரிப்பு - டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - விஜய்
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி - 12 எப்ரல் 2019
நேரம் - 1 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்களை ஒரு பேய் எப்படி எல்லாம் பயமுறுத்துகிறது என்று படம் எடுத்தால் அது பேய் படம். ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்களை ஒரு தீவிரவாதக் கும்பல் எப்படி கொலை செய்ய முயற்சிக்கிறது என்றால் அதுதான் வாட்ச்மேன்.

இயக்குனர் விஜய் ஒரு படத்தை இயக்கினாலே அது எந்த ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழும். இந்த வாட்ச்மேன் படத்தைப் பார்க்கும் போதும் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்திலிருந்துதான் கதையைக் காப்பியடித்திருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது.

லிஸ்ட் ஆப் ட்ரேப்ட் மூவீஸ் என்று கூகுளில் தேடினால் ஐஎம்டிபி இணையதளமே 200 படங்களை பட்டியலிட்டுக் காட்டுகிறது. அவற்றில் எந்தப் படம் வாட்ச்மேன் ஆக மாறியிருக்கும் என்பது சீக்கிரமே சமூகவலைத்தளங்களில் வந்துவிடும்.

வட்டிக்காக கடன் வாங்கிய 3 லட்ச ரூபாயை மறுநாள் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எந்த வேலைக்கும் போகாத ஜி.வி.பிரகாஷ்குமார். மறுநாள்தான் அவருக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடக்க உள்ளது. அதனால் வேறு வழியில்லாமல் ஒரு வீட்டிற்குள் திருடச் செல்கிறார். முன்னாள் டிஐஜி ஆன சுமன் வீடு அது. அவரைக் கொல்ல அசாமிலிருந்து தப்பித்து வந்த தீவிரவாதிகள் சிலர் வீட்டுக்குள் நுழைகிறார்கள். சுமனின் வீட்டு நாய் ப்ரூனோ தன் முதலாளிக்கான பிரச்சினையைத் தெரிந்து ஜி.வி.பிரகாஷை வீட்டிற்குள் துரத்தி விடுகிறது. ஜி.வி.பிரகாஷ், சுமன், நாய் ப்ரூனோ எப்படி தீவிரவாதிகளை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஒன்றரை மணி நேரப் படத்தில் ஒரு 10 நிமிடக் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் இருளில் மூழ்கியுள்ள அந்த வீட்டிற்குள்தான் நடக்கிறது. பெரிய வீடு, பல அறைகள் கையில் மிஷின் கன் உள்ளிட்ட வகையறாக்கள். ஆனாலும் சுமன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை குறி பார்த்து சுடத் தெரியாத தீவிரவாதிகள் என வழக்கமான காதுல பூ வைக்கும் சினிமாத்தனமான காட்சிகள் படத்தில் நிறைய உண்டு. இயக்குனர் விஜய், இந்த மாதிரியான படத்தை ரசிகர்கள் எப்படியும் ரசிப்பார்கள் என்று அதீத நம்பிக்கையில் படத்தை இயக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

வேலை, வெட்டி இல்லாத ஜி.வி.பிரகாஷ்குமார், அவருக்கு ஒரு காதலி. எதற்கு 3 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கினார் என்பதும் நமக்குத் தெரியாது. முன்பின் திருடிய அனுபவம் இருக்கிறதா என்றும் தெரியாது. போகிற வழியில் ஒரு வீட்டில் யாருமில்லை என்று கேள்விப்பட்டதுமே எந்த முன்யோசனையும் இல்லாமல் அந்த வீட்டில் திருட நுழைகிறார். இந்தக் காலத்தில் தெருவுக்குத் தெரு சிசிடிவி காமிராக்கள் உள்ளன. கதையை நேரடியாகச் சொல்லாமல் இப்போது, காலையில் என மாறி மாறி சொல்லி தேவையற்ற குழப்பத்தையும் திரைக்கதையில் வைத்துள்ளார் இயக்குனர்.

ஜி.வி.பிரகாஷ் எப்படி கதைகளைத் தேர்வு செய்கிறார் என்றே தெரியவில்லை. சமீப காலங்களில் அவர் நடித்த படங்கள் ஒன்று கூட ரசிகர்களைக் கவரும் விதத்தில் இல்லை என்பதே உண்மை. நட்புக்காக நடித்தால் எல்லாம் சினிமாவில் நிலைக்க முடியாது. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பது இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் அவருக்குத் தெரியவில்லை என்றால் இசையமைப்பதை மட்டும் தொடராம், தப்பில்லை.

ஜி.வி.பிரகாஷ் காதலியாக சம்யுக்தா ஹெக்டே. சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். சராசரியான ஒரு காதலி கதாபாத்திரம். முன்னாள் டிஐஜி ஆக சுமன், வட்டி குமார் ஆக சில்வா, ஜிவி நண்பனாக யோகி பாபு, தீவிரவாதிகளின் தலைவனாக ராஜ் அருண் கிடைத்த காட்சிகளில் தங்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் கூடுதலாக உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி. ஒளிப்பதிவாளர்கள் நீரவ்ஷா, சரவணன் ராமசாமி இருளிலும் லைட்டிங்குகள் மூலம் படத்திற்கு ஒரு கலரைக் கொடுக்கிறார்கள்.

படத்தில் எந்த விதத்திலும் நம்மை கனெக்ட் செய்து பார்க்க முடியவில்லை. ஜஸ்ட் லைக் தட் ஹீரோ திருடச் செல்வார் என்பதெல்லாம் சினிமாத்தனமானவை. அதிலும் கிளைமாக்சில் சீரியசாக நடக்கும் அந்தக் காட்சியில் ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.

காப்பி படங்களாக இருந்தாலும் இதற்கு முன் சில நெகிழவான படங்களைக் கொடுத்த இயக்குனர் விஜய்யை இந்தப் படத்தில் பார்க்கவே முடியவில்லை.

வாட்ச்மேன் - வாட் மேன்? மிஸ்டர் விஜய்....

 

பட குழுவினர்

வாட்ச்மேன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓