கள்வன்
விமர்சனம்
தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் - பிவி ஷங்கர்
இசை - ஜிவி பிரகாஷ்குமார், ரெவா
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், இவானா, தீனா, பாரதிராஜா
வெளியான தேதி - 4 ஏப்ரல் 2024
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
காடும், காடு சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கிய கதைகள் சினிமாவில் வருவது அபூர்வம். அதற்கான கதைகள் கிடைக்க வேண்டும், களங்கள் சரியாக அமைய வேண்டும். காடு சார்ந்த கதைகள் என்று வரும் படங்கள் கூட கடத்தல் கதைகளாகத்தான் வரும். அதிலிருந்து மாறுபட்டு ஒரு படத்தைக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல. இந்தப் படத்தில் அறிமுக இயக்குனர் பிவி ஷங்கர் காடு சார்ந்த பகுதியின் வாழ்வியலைக் கொஞ்சம் பதிவு செய்திருக்கிறார்.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள இருட்டிபாளையம் கிராமத்தில் அனாதையாக வளர்ந்தவர் ஜிவி பிரகாஷ்குமார், அவரது நண்பர் தீனா. இருவரும் வீடுகளில் புகுந்து திருட்டுக்களைச் செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடித்து வாழ்க்கையைக் கடத்துபவர்கள். பக்கத்து ஊரில் திருடச் சென்ற போது அங்கு ஒரு வீட்டிலுள்ள இவானாவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் ஜிவி பிரகாஷ்குமார். திருடனை எப்படி காதலிப்பது என மறுக்கிறார் இவானா. இதனிடையே, ஒரு முதியோர் இல்லத்திற்கு சுண்ணாம்பு அடிக்கப் போகிறார்கள் ஜிவியும், தினாவும். அங்கு ஆதரவில்லாமல் இருக்கும் பாரதிராஜா மீது பாசம் கொள்கிறார்கள். அவரைத் தத்தெடுத்து தன் ஊருக்கு அழைத்து வருகிறார் ஜிவி. அவரைப் பார்த்துக் கொள்ள அல்ல, யானை மிதித்துக் கொல்ல வைக்கவே அவரை அழைத்து வருகிறார். யானை மிதித்து இறப்பவர்களுக்கு அரசு கொடுக்கும் நிதியுதவியைப் பெறவே அந்தத் திட்டம். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கதையாகப் பார்த்தால் உணர்வுபூர்வமாக அமைய வேண்டிய ஒரு படம். ஆனால், அப்படியான திரைக்கதையுடன் படத்தை நகர்த்தாமல் படத்தின் கிளைமாக்சுக்கு முன்பாக மட்டுமே சென்டிமென்ட்டை நுழைத்திருக்கிறார்கள். அதுவரையில் காட்டுக்குள் கண்ணை கட்டி விட்டது போல திரைக்கதை எங்கெங்கோ சுற்றி, நகர்ந்து போகிறது.
ஒவ்வொரு படமும் தனக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் நடிக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார். பெரும்பாலும் புதுமுக இயக்குனர்களையும், வளரும் இயக்குனர்களையும் அதிகம் நம்பி தன்னை ஒப்படைக்கிறார். ஆனால், அவர்கள் ஜிவியின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்திலும் கெம்பா என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து இளைஞனாகவே மாறியிருக்கிறார். அதற்கான உடல்மொழி, நடிப்பு என நிறைவாகவே நடித்திருக்கிறார். ஆனால், அழுத்தமில்லாத காட்சிகள் அவருக்கான பெயரைக் கொடுக்காமல் போகிறது.
'லவ் டுடே' படத்திற்குப் பிறகு இவானாவிற்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு 'இளமாறன், எல்ஜிஎம்' என அவரது தேர்வு தவறாகவே போய் உள்ளது. அந்த வரிசையில் இந்தப் படமும் சேர்ந்துள்ளது. நர்ஸ் பயிற்சி படிக்கும் மாணவியாக நடித்துள்ளார். ஓரிரு காட்சிகளைத் தவிர அவருக்கான வாய்ப்புகளும் குறைவுதான். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ரவுடியை, திருடனை, கடத்தல்காரனை, கைதியை படித்த கதாநாயகிகள் காதலிக்கப் போகிறார்கள் என்பதைக் காட்டுவார்களோ ?. காதலுக்காக குடிசை வீட்டிலும் போய் வாழத் தயாராக இருக்கும் பெண்கள் இந்த ஆண்ட்ராய்டு போன் காலத்திலும் இருக்கிறார்களா என்ன ?.
டிவியில் காமெடி செய்பவர்கள் சினிமாவிலும் காமெடி செய்து சிரிக்க வைப்பார்கள் என்ற எண்ணம் சந்தானத்துடன் போய்விட்டது. அதன் பின்பு வருபவர்களுக்கு டிவி வேறு சினிமா வேறு என்பது புரிகிறதா என்பதே தெரியவில்லை. நடிகராக ஓகே, ஆனால், காமெடி செய்ய முயற்சித்து தோற்றுப் போகிறார் தீனா.
ஆதரவற்ற முதியோராக பாரதிராஜா. அவரது வயதும் தோற்றமும் அவரது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. கிராமத்துக்குள் நுழைந்த புலியை அவரது பார்வையாலேயே அடக்கும் காட்சியில் ஹீரோவின் கதாபாத்திரம் காலியாகிவிட்டது.
நடிக்கும் படங்களிலாவது ஒன்றிரண்டு அருமையான ஹிட்களைக் கொடுக்கும்படி ஜிவி இசையமைத்தால் அவருக்கு நல்லது. இப்படத்திற்கான பின்னணி இசையை ரெவா அமைத்திருக்கிறார். இயக்குனரே ஒளிப்பதிவாளர் அவரது சொந்த ஊர் என்பதால் பல களங்களைக் காட்டியிருக்கிறார்.
ஒரு வரிக் கதையை யோசித்த அளவிற்கு இரண்டரை மணி நேரத் திரைக்கதையை காட்டில் ஒரு ரிசார்ட் எடுத்து இரண்டு மாதம் தங்கிருந்தாவது யோசித்திருக்கலாம்.
கள்வன் - 'கல்'வன்…
கள்வன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கள்வன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
ஜி.வி.பிரகாஷ் குமார்
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.