டியர்,Dear

டியர் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - நட்மக் புரொக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்
இயக்கம் - ஆனந்த் ரவிச்சந்திரன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியான தேதி - 11 ஏப்ரல் 2024
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

2023ல் தான் குறட்டை விடும் கதாநாயகனைப் பற்றிய படமாக 'குட்நைட்' படத்தைப் பார்த்தோம். அதையே கொஞ்சம் மாற்றி யோசித்து குறட்டை விடும் கதாநாயகி பற்றிய படமாக இந்த 'டியர்' படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலேயே கதாநாயகிக்குக் குறட்டை என்பதைச் சொல்லிவிடுவதாலும், 'குட்நைட்' படம் நமக்கு இன்னும் மறக்காததாலும் படத்தை ரசிப்பதில் ஆரம்பத்திலேயே ஒரு அழற்சி வந்துவிடுகிறது. மாத்தி யோசித்த இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் புதிதாக எதையாவது யோசித்திருக்கலாம்.

டிவி சானலில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். தற்போது உள்ள டிவி சானலை விட பெரிய சேனல் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, நாட்டின் நிதியமைச்சரை பேட்டி எடுப்பதுதான் அவரது லட்சியம். இருந்தாலும் அவரது அம்மா ரோகினி, அண்ணன் காளி வெங்கட் ஆகியோர் கட்டாயப்படுத்தி ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்த்து திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யாவுக்கு நன்றாக குறட்டை விடும் பழக்கம் இருப்பது ஜிவிக்குத் தெரிய வர அதிர்ச்சி அடைகிறார். எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை கட்டாயமாக வைத்திருப்பவர் ஜிவி. சரியாகத் தூங்க முடியாததால் அவருக்குக் கிடைத்த பெரிய சேனல் வேலையில் ஒரு சிக்கல் ஏற்பட்டு, துரத்தி விடுகிறார்கள். அந்த கோபத்தில் விவகாரத்து செய்ய முடிவெடுக்கிறார். இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நகைச்சுவைப் படமாகவும் இல்லாமல் சீரியஸான படமாகவும் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக நகர்ந்து போகிறது படம். இடைவேளைக்குப் பின் மெயின் கதையான ஜிவி - ஐஸ்வர்யா பிரிவை விட்டுவிட்டு, வீட்டை விட்டு எப்போதோ ஓடிப் போன ஜிவியின் அப்பாவை கதைக்குள் இழுத்து வந்திருக்கிறார்கள். சமீபகாலப் படங்களில் இப்படியான கிளைக் கதைகள்தான் மெயின் கதையின் சுவாரசியத்தைக் கெடுப்பதாக அமைந்து வருகின்றன.

'ரெபல், கள்வன்' படங்களுக்குப் பிறகு இந்தப் படத்திலும் அதே முகத் தோற்றத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ்குமார். தூங்கி எழுந்து வந்தது போலவே படம் முழுவதும் வந்து போகிறார். உடனடியாக நல்ல ஹேர்ஸ்டைலிஸ்ட், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டைத் தேட வேண்டியது ஜிவிக்கு நல்லது. எந்த சேனலில் இப்படியான தோற்றத்தில் உள்ளவர்களை செய்தி வாசிக்க வைக்கிறார்கள் என்பது இயக்குனருக்குத்தான் தெரியும். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து செய்தியை படித்துவிட்டுப் போகிறார் ஜிவி.

ஜிவிக்கு அக்கா போலவே இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த ஒரு காட்சியிலுமே அவர்களுக்கான 'கெமிஸ்ட்ரி' செட் ஆகவேயில்லை. இப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்குமா என யாருமே போட்டோஷுட் செய்யும் போது கூட யோசிக்கவில்லையா. அதிலும், ஜிவியை 'டேய்' எனச் சொல்லி ஐஸ்வர்யா கூப்பிடுவதையாவது தவிர்த்திருக்கலாம். அது ஏதோ தம்பியை அதட்டிச் சொல்வது போலவே இருக்கிறது.

'மிஸ்டர் பர்பெக்ட்' ஆக இருப்பவர் காளி வெங்கட். மனைவியை அடிமையாகவே வைத்திருக்கிறார். அவரது மனைவியைப் பார்த்தால் ஐயோ பாவமாக இருக்கிறது. ஜிவியின் அம்மாவாக ரோகினி, அப்பாவாக தலைவாசல் விஜய். இவர்களது கதாபாத்திரத்தை வைத்து கடைசியில் கொஞ்சம் அட்வைஸ் செய்கிறார்கள். ஐஸ்வர்யாவின் அம்மாவாக கீதா கைலாசம், அப்பாவாக இளவரசு, வழக்கம் போல யதார்த்தமான நடிப்பு.

முந்தைய ஜிவியின் படங்களுக்கு சொன்னது போலத்தான் இந்தப் படத்திற்கும், தான் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கும் போதாவது இரண்டு, மூன்று சூப்பர்ஹிட் பாடல்களை யோசிப்பது இசையமைப்பாளர் ஜிவிக்கு அவசியத் தேவை.

இரண்டே கால் மணி நேரப் படத்தில் கால் மணி நேரப் படம் மட்டும் அழுத்தமான கதையாக இருந்தால் போதுமா ?. தூக்கத்தைத் தொலைத்து கொஞ்சம் யோசியுங்கள் புதிய இயக்குனர்களே.

டியர் - டிஸ்டன்ஸ்…

 

டியர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டியர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓