2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் நிறுவனம்
இயக்கம் : சண்முக பிரியன்
நடிகர்கள் : விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், ரியோ ராஜ்
வெளியான தேதி : 27.06.2025
நேரம் : 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

கதைக்களம்
தேனியில் துணிக்கடை வைத்திருக்கும் கஜராஜ் மகன் விக்ரம் பிரபுவுக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் இருக்கிறது. நீண்ட தேடலுக்கு பிறகு கோவைக்கு பெண் பார்க்க குடும்பத்துடன் ஒரு பஸ்ஸில் செல்கின்றனர். அங்கு சுஷ்மிதா பட்டை பெண் பார்த்துவிட்டு புறப்படும் போது பேருந்து பழுதாகி விடுகிறது. அது கிராமம் என்பதால் ஆட்களை அழைத்து வந்து பேருந்தை ரிப்பேர் செய்கின்றனர். ஆனால் ரிப்பேர் செய்ய முடியவில்லை. இதனால் இரண்டு நாட்கள் பெண் பார்க்க வந்த வீட்டிலேயே தங்கும் சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. இதனால் காலவரையின்றி அங்கேயே தங்க வேண்டி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டிலேயே திருமணத்தை முன்கூட்டியே முடித்து விடலாம் என யோசித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது விக்ரம் பிரபுவுக்கு பார்த்த பெண் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? விக்ரம் பிரபுவுக்கு கல்யாணம் நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

டைட்டிலைப் பார்த்தவுடன் ஏதோ லவ் மேரேஜ் சப்ஜெக்ட்டை பற்றி படம் எடுத்துள்ளார் என்று தியேட்டருக்கு சென்றால் அங்கு நாம் எதிர்பார்த்ததற்கு நேர் மாறான விஷயத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். பெண் பார்ப்பது, கல்யாணம் போன்ற விஷயங்களில் எப்போதுமே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அந்த காமெடியை ஒரு கதையாக வைத்து அழகான படத்தை ரசிக்கும் படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சண்முக பிரியன். பெண் பார்க்க போன இடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் தங்கும் படி நேர்ந்தால் அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதையும், நீண்ட நாட்களாக கல்யாணமாகாத ஒருவருக்கு கல்யாணம் கூடி வரும் போது பெண் ஓடிவிட்டால் அவருடைய மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எல்லாம் அழகாக திரைக்கதை அமைத்து சொல்லி இருக்கிறார்.

இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோவாக விக்ரம் பிரபு அமைந்து விட்டார். அவருடைய எதார்த்த நடிப்பு மற்றும் அனைத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளும் பண்பு ஆகியவை அந்த கேரக்டரை தாங்கி பிடிக்கிறது.

ஹீரோயினாக நடித்துள்ள சுஷ்மிதா பட் காட்சிகளில் அழகு பதுமையாக வந்து செல்கிறார். அவருக்கு டயலாக் மிகவும் குறைவாக இருக்கிறது. அதே நேரம் அவருடைய சகோதரியாக நடித்துள்ள மீனாட்சி தினேஷ் டயலாக் பேசி தள்ளுகிறார். திரையிலும் அழகாக தெரிகிறார்.

எதிர்பாராத கேமியோ ரோலில் ரியோ ராஜ் வந்து அசத்துகிறார். அதேபோல் சத்யராஜ் ஒரே ஒரு காட்சியில் வந்து அதிரடி காட்டுகிறார். இவர்களை தவிர அருள் தாஸ் நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மாமாக்களின் டார்ச்சரை அந்த கேரக்டர் மூலம் திரையில் அழகாக நடித்து காட்டி இருக்கிறார். இவர்களோடு படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்து படத்தை ரசிக்கும்படியாக மாற்றி இருக்கிறார். அவருக்கு பக்க பலமாக தன்னுடைய இசையின் மூலம் வேறு ஒரு பரிமாணத்தை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். பாடல்கள், பின்னணி இசையை பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.

பிளஸ் & மைனஸ்
இதுபோல லைட் ஹார்ட்டட் பிலிம் எப்போதுமே ரசிகர்களை கவரும். அதுவும் கல்யாணத்தை முன்னிறுத்தி அதன்மூலம் காமெடி புகுத்தி சுவாரசியமாக சொல்லி இருப்பதால் ரசிக்கும்படியாக உள்ளது. ஒரே ஒரு வீட்டில் முழு படத்தையும் எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர். இருபதுக்கு மேற்பட்ட நடிகர்களை ஒவ்வொரு காட்சியிலும் புகுத்தி அந்த டயர்டை ரசிகர்களுக்கு வரவிடாமல் பார்த்து இருக்கிறார். படம் தொடங்கிய முதல் அரை மணி நேரம் சுவாரஸ்யமாக கதை நகர்கிறது. அதன் பிறகு ஒரு தேக்கநிலை ஏற்பட்டு இன்டெர்வல் வரை லாக் ஆகி நிற்கிறது. இடைவேளைக்கு பிறகு மீண்டும் வேகம் எடுத்து விறுவிறுவென இரண்டாம் பாதி நகர்கிறது. இந்த லவ் மேரேஜை வெற்றிகரமாக எண்டு கார்டில் சுபத்துடன் நடத்தி முடித்துள்ளார் சண்முக பிரியன். இந்த ஜென் Z காலத்தில் 80ஸ் ஸ்டோரி.

லவ் மேரேஜ் - ஆஹா கல்யாணம்

 

லவ் மேரேஜ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

லவ் மேரேஜ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓