பிளாஸ்ட்
விமர்சனம்
தயாரிப்பு : ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட்
இயக்கம் : சுபாஷ் கே ராஜ்
நடிப்பு : அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், அருண் சிதம்பரம், ஜான் கொக்கன்
ஒளிப்பதிவு : அருண் ராதாகிருஷ்ணன்
இசை : ரவி பஸ்ரூர்
வெளியான தேதி : மே 28, 2026
நேரம் : 2 மணிநேரம் 24 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு சுரங்க ஒப்பந்தத்தை எடுக்கிறார் வில்லன் ஜான் கொக்கன். அதற்கு ஆயிரம் கோடி லஞ்சம் கேட்கிறார் மந்திரி தேனப்பன். அதை வில்லன் பவன், அருண் சிதம்பரம் மூலமாக கொடுக்க பிளான் பண்ணுகிறார். அந்த பணம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தில் அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் குடும்பம் சிக்குகிறது. பணம் செல்வது தடைபடுகிறது. சாதாரண ஹெட்மாஸ்டர் குடும்பம் தானே என நினைத்து அந்த குடும்பத்தை அழிக்க நினைக்கிறது வில்லன் டீம். உண்மையில் அவர்கள் கராத்தே மாஸ்டர் குடும்பத்தினர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதை பக்கா ஆக் ஷன் பின்னணியில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சுபாஷ் கே ராஜ்
அர்ஜூன் குடும்பத்தினர் அப்பாவிகள் என நினைத்து அணி அணியாக வரும் வில்லன்களை அப்பா அர்ஜூன், அம்மா அபிராமி, மகள் பிரீத்தி முகுந்தன் ஆகியோர் எப்படி ஆக் ஷனுக்கு மாறி அழிக்கிறார்கள் என்பது பிளாஸ்ட் கதையின் முக்கியமான விஷயம். வழக்கமாக தனது படங்களில் அர்ஜூன் சண்டை போட்டு வில்லன்களை அழிப்பார். பலரை கொன்று தனது குடும்பத்தை காப்பாற்றுவார். பிளாஸ்ட் படத்தை அவருடன் மனைவி, மகளும் என குடும்பத்தினரும் ஆக்ஷனில் களம் இறங்கி இருப்பது புதுசு.
அர்ஜூன் பற்றி சொல்ல தேவையில்லை சண்டைகாட்சிகளில் பொறி பறக்க வைத்து விட்டு, அப்பா பாசம் காட்சிகளிலும் அமர்களம் பண்ணி இருக்கிறார்.
இதுவரை கவர்ச்சியாக, யூத் புல்லாக நடித்து வந்த பிரீத்தி முகுந்தன் இதில் ஹோம்லி ஆக வருகிறார். அதேசமயம் தனது பாலியல் சீண்டல் கொடுக்கும் ஐடி மானேஜரை காரில் அடித்து துவைக்கும் சீனில், மெடிக்கலில் தன் செயினை பறிக்க நினைக்கும் வில்லனை சுளுக்கு எடுக்கும் சீனில், வீட்டிற்குள் என்ட்ரி ஆகும் வில்லன் டீமை கொன்று குவிக்கும் சீனில் கை தட்டல் வாங்குகிறார். இடைவேளைக்குபின் அப்பா அர்ஜூனுடன் இணைந்து போடுகிற சண்டை காட்சிகளும் அமர்களம். பிரீத்தி முகுந்தனுக்கு நல்ல பெயர் கிடைக்கும். முதலில் அப்பாவியாக, பாசக்கார அம்மாவாக வரும் அபிராமியும் ஆக் ஷனில் வெளுத்து வாங்குகிறார். இந்த இரண்டு பேரின் கேரக்டர், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துக்கு பிளஸ்.
மெயின் வில்லனாக தொழிலதிபர் ஆக வருகிறார் ஜான் கொக்கன். அவர் நடிப்பில் புதுமை இல்லை. பவன், அருண் சிதம்பரம் என மற்ற வில்லன்களும் அவ்வப்போது சவுண்ட் விடுகிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் திலீபன் மனதில் நிற்கிறார்.
ஆக் ஷன் படம் என்றாலும் இடைவேளை வரை, ஒன்றிரண்டு ஆக் ஷன்களுடன் அமைதியாக செல்கிறது. அதிலும் அந்த இண்டர்வெல் பிளாக் செம்ம.
அதுக்குபின் ஆக் ஷன் மட்டுமே. அடித்து கொண்டே இருக்கிறார்கள். அது ஒரு கட்டத்தில் போரடிக்கிறது. வில்லன் கேங்கில் பலர் செத்து கொண்டே இருக்கிறார்கள். வில்லன் டீம் பலரை கொன்று கொண்டே இருக்கிறார்கள். போலீஸ் துறை இருக்கிறதா என கேள்வி வருகிறது. சில சமயம் சண்டை காட்சிகள் திணிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் மைனஸ்.
கேஜிஎப் ரவி பஸ்ரூர் இசை அமைத்து இருக்கிறார். பாடல்கள் இல்லை. ஆனால் சண்டை காட்சிகளுக்கு அவர் இசை பிளஸ். அது சண்டை வீரியத்தை கூட்டுகிறது. சில இடங்களில் சவுண்ட் வால்யூமை குறைத்து இருக்கலாம். படத்தின் இன்னொரு ஹீரோ பைட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு. ஒவ்வொரு காட்சிகளையும் மிரட்டலாக எடுத்து இருக்கிறார். அதேபோல் கேமராமேன் அருண் வொர்க்கும் ரசிக்க வைக்கிறது
வில்லன் சீன், அரசியல்வாதி சீன், சுரங்க சீன் இழுக்கிறது. கிளைமாக்ச்சும் டக்கென வந்து விடுகிறது. போலீஸ் விஷயங்களில் ஏகப்பட்ட கேள்விகள். கதையை இன்னும் அழுத்தமாக உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கலாம்.
ஆனாலும் வீட்டில் உள்ள பெண்களும் வீரமாக இருக்கணும். தற்காப்புகலைகளை கற்று இருக்க வேண்டும். பிரச்னை வந்தால் யாரையும் நம்பால அதிரடியில் இறங்கி வம்பு இழுப்பவர்களுக்கு பாடம் கற்று தரணும். பாலியல் சீண்டல் வந்தால் பறந்து உதைக்க வேண்டும் என்ற கருவும், குடும்ப கதையில் ஆக் ஷனை புதுமையாக கொண்டு வந்த விதமும் படத்தை ரசிக்க வைக்கிறது. குடும்பத்துடன் குறிப்பாக வீட்டு பெண்கள், பெண் குழந்தைகளுடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
பிளாஸ்ட் - உண்மையில் அதிரடி சண்டை காட்சியில் அனல் தெறிக்கிறது
Subscription



























