சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்,Chennai City Gangsters
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பி டி ஜி யுனிவர்சல்
இயக்கம் - விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ்
நடிகர்கள் - வைபவ், அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், மணிகண்டா ராஜேஷ், ஜான்விஜய், சுனில் ரெட்டி, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, ஹூசைனி, சூர்யா கணபதி, பிபின்
இசை - இமான்
வெளியான தேதி - 20.06.2025
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் 2.5/5

கதைக்களம்

லிவிங்ஸ்டனின் பீட்சா கடையில் வேலை பார்க்கும் வைபவ், அவரின் மகளான அதுல்யாவை காதலிக்கிறார். இந்த நிலையில் ஹூசைனி, இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக, லிவிங்ஸ்டன்னிடம் சொல்லி தனது வீட்டில் கொள்ளை அடித்துவிட்டு சில காலம் பணம், நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி சொல்கிறார். உடனே லிவிங்ஸ்டன் தன்னிடம் வேலை பார்க்கும் வைபவ் மற்றும் மணிகண்ட ராஜேஷை வைத்து அந்த கொள்ளையை நடத்துகிறார். கொள்ளையடித்த பணத்தை வைபவ், ராஜேஷ் தொலைத்து விடுகின்றனர். எனவே பணத்திற்காக ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போடுகின்றனர். அதற்காக அவர்கள் செய்தது என்ன? வங்கிக் கொள்ளையில் யார் சிக்கியது? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

90களில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'அமரன்' படத்தை இயக்கிய ராஜேஸ்வரின் மகன் விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அவரது உறவினர் அருண் கேசவ் ஆகியோர் இணைந்து இரட்டை இயக்குனர்களாக இந்த படத்தை எடுத்துள்ளனர். விளம்பரப் படத்தை இயக்கி அனுபவம் பெற்ற இவர்கள் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள், இருப்பினும் ஒரு விளம்பர படத்தை பார்த்த திருப்தி மட்டுமே ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர். வங்கி கொள்ளை என்ற கான்செப்ட்டை எடுத்துக் கொண்டு அதில் ஏராளமான நகைச்சுவை நடிகர்களை வைத்துக் கொண்டு ஒரு காமெடியான படத்தை கொடுத்திருக்கலாம். பலவீனமான திரைக்கதை காரணமாக பல காட்சிகளில் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவில்லை.

ஹீரோவாக நடித்துள்ள வைபவ் அப்பாவியான முகத்துடன் வழக்கம்போல் அதே நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளார் தன்னுடைய கேரக்டருக்கு தேவையான விஷயங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்தால் மட்டுமே திரைத்துறையில் ஹீரோவாக தொடர்ந்து அவர் பயணிக்க முடியும் என்பதை அவர் மனதில் வைத்துக் கொள்வது நல்லது. ஹீரோயினாக நடித்துள்ள அதுல்யா ரவி வழக்கமான கதாநாயகி போல் வந்து செல்கிறார். திரையில் அழகாக தெரிந்தாலும் அவருக்கான ஸ்கோப் படத்தில் குறைவுதான். அப்பாவாக வரும் லிவிங்ஸ்டன் அவரின் நண்பராக வரும் ஹூசைனி ஆகியோர் நடிப்பு எதார்த்தமாக இருந்தது.

கொள்ளையர்களாக களமிறங்கும் ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி ஆகியோர் ரசிகர்களுக்கு காமெடியை தருவதற்கு பதிலாக எரிச்சலை கொடுத்துள்ளனர். போதாக்குறைக்கு அவர்களுடன் ரெடின் சேர்ந்து கொண்டு வழக்கமான முக பாவங்கள் மூலம் இரிடேட் செய்கிறார். மணிகண்டா ராஜேஷ் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிபின் மற்றும் கான்ஸ்டபிள் ஆக வரும் சாம்ஸ் செய்யும் வேலைகள் எல்லாம் குழந்தைத்தனமாக இருக்கின்றன.

இமான் இசையில் பாடல்கள் சுமாராக உள்ளன, பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் எபோர்ட் போட்டு இருக்கலாம். டிஜோ டோமி ஒளிப்பதிவில் படம் கிளாசியாக உள்ளது.

பிளஸ் & மைனஸ்

வங்கி கொள்ளை என்ற ஒரு வரி கதையில் ஏராளமான படங்கள் வந்துள்ளன. அதில் இந்த படம் எப்படி மாறுபட்டு தெரியப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. பலவீனமான திரைக்கதை மற்றும் காமெடிக்கு தேவையான வசனங்கள் இல்லாமல் படம் முழுவதும் தேக்க நிலை காணப்படுகிறது.

இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு ஒரு அருமையான காமெடி படத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு ஏற்ற திரைக்கதை, வசனங்கள் இல்லாததால் காமெடிக்கு பதிலாக படம் கடியாக மாறி உள்ளது. இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இந்த படம் எப்போது முடியும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்திவிடுகிறது. இது போன்ற கதைகளில் கொள்ளையடிக்கும் பணம் இறுதியில் யாருக்கு போகும் என்ற அதே டெம்ப்ளேட் விஷயமும் இதில் வந்து பெரும் ஏமாற்றத்தை தந்து விடுகிறது.

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் - சிரிப்பு (காட்டாத) ரவுடி

 

பட குழுவினர்

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓