கண்ணப்பா
விமர்சனம்
தயாரிப்பு : 24 பிரேம்ஸ் பேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : முகேஷ் குமார் சிங்
நடிகர்கள் : விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், மதுபாலா, சம்பத் ராம், ஐஸ்வர்யா, தேவராஜ்
வெளியான தேதி : 27.06.2025
நேரம் : 3 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் : 3/5
கதைக்களம்
பசுமையான வனப் பகுதியில் ஐந்து பிரிவுகளாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களில் ஒரு பிரிவுக்கு சரத்குமார் தலைவராக இருக்கிறார். அவருடைய மகன் விஷ்ணு மஞ்சு. அதேபோல் மோகன் பாபு, மதுபாலா, சம்பத் ராம், தேவராஜ் ஆகியோர் மற்ற பிரிவுகளுக்கு தலைவர்களாக இருக்கின்றனர். குழந்தை பருவம் முதல் கடவுள் இல்லை என நம்பும் விஷ்ணு மஞ்சு, வில் வித்தையில் சிறந்து விளங்குவதுடன் சிறந்த போர் வீரனாகவும் இருக்கிறார். வனத்தில் மதுபாலாவின் மகள் ப்ரீத்தி முகுந்தனை பார்த்தவுடன் விஷ்ணு மஞ்சு அவரை காதலிக்க தொடங்குகிறார்.
இந்த சூழ்நிலையில் அங்கு இருக்கக்கூடிய வாயு லிங்கத்தை எடுத்துச் செல்வதற்காக அரக்கர் தலைவன் அர்பித் ரங்காவின் சகோதரர் தனது படையுடன் வருகிறார். அவரை விஷ்ணு மஞ்சு கொன்றுவிடுகிறார். இந்த தகவல் அறிந்த அரக்கர் இன தலைவர் அர்பித் ரங்கா இவர்கள் மீது படை எடுத்து வருகிறார். பெரும் படையுடன் வரும் அவரை விஷ்ணு மஞ்சு எப்படி எதிர்கொண்டார்? வாயு லிங்கத்தை அங்கிருந்து எடுத்தார்களா? இதில் கண்ணப்பா யார்? என்பதே படத்தின் மீதி கதை.
பஞ்சபூதங்களில் வாயுத்தலமாகவும், வாயு லிங்கமாகவும் இருக்கக்கூடிய ஸ்ரீ காளஹஸ்தியின் தொன்மையான வரலாறு பற்றியும், 63 நாயன்மார்களில் பக்திக்கு உதாரணமாக திகழும் கண்ணப்பரின் பக்தியைப் பற்றியும் இப்படம் அழகாக எடுத்துரைக்கிறது. திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என மூன்று யுகங்களில் நடந்த சம்பவங்களை அடிக்கோல் காட்டி கதையை சொல்லி இருக்கிறார் கதாசிரியர். துவாபர யுகத்தில் அர்ஜுனன், சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக தவம் மேற்கொண்டபோது வராகத்தை அம்பு எய்து வதைத்தது. நீயா நானா என இருவரும் யுத்தம் செய்த போது அர்ஜுனனுக்கு தன்னுடைய தரிசனத்தை காட்டியவர் ஈசன். அதே அர்ஜுனன் கலியுகத்தில் தின்னா என்ற பெயரில் அவதரித்து கடவுள் என்று யாரும் இல்லை என நாத்திகனாக வளர்ந்து அதன் பிறகு சிவபெருமானுடைய ஸ்பரிசத்தினால் சிவ பக்தனாக மாறி, தன்னுடைய இரண்டு கண்களை அந்த திரிநேத்திரனுக்கு வழங்கி கண்ணப்பராக மாறிய பக்தனின் கதையை வரலாற்றுப் பின்னணியுடன் பிரம்மாண்டமாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த கண்ணப்பா.
இது போன்ற இதிகாச புராணங்களை படமாக எடுக்கும் பொழுது அந்த கதையை மட்டும் அப்படியே சொன்னால் அது ஒரு ஸ்டேட்மென்ட் போல இருக்கும் என்பதால் சினிமாவுக்கு ஏற்ற வகையில் கமர்ஷியல் கலந்து வரலாற்றுப் பின்னணியுடன் அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். அதேநேரம் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக சினிமாத்தனம் இல்லாமல், விஷ்ணு மஞ்சு எழுதிய கதையை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் முகேஷ் குமார் சிங்.
கதை நாயகனாக , கண்ணப்பாவாக நடித்துள்ள விஷ்ணு மஞ்சு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து இருக்கிறார். கடவுள் இல்லை அது வெறும் கல் என கூறும்போது நாத்திகனாகவும், சிவபெருமானின் அருள் கிடைத்து அவர்தான் உலகம் என சொல்லும் போது உண்மையான ஆத்திகனாகவும் மாறி நிற்கிறார் விஷ்ணு மஞ்சு. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்துடன் மோதி, தான் ஒரு ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவ பக்தையான அவருக்கு கடவுள் இல்லை என்று சொல்லும் விஷ்ணு மஞ்சு கணவராக வந்த பிறகு அவரை எப்படி எதிர்கொள்கிறார் என்ற காட்சிகளில் மிளிர்கிறார் பிரீத்தி.
சிவனாகவும் பார்வதியாகவும் நடித்துள்ள அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் இருவரும் சிவ சக்தியாகவே காட்சி தருகின்றனர். அதோடு சிவனின் தூதுவர் காலபைரவராக வரும் பிரபாஸ் சொல்லும் வசனங்கள் பக்திக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. சிவனின் மற்றொரு அவதாரமாக வரும் மோகன்லால் தனது அனுபவ நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக நடித்துள்ள சரத்குமார், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வாயுலிங்கத்திற்கு பூஜை செய்யும் பரம்பரை அர்ச்சகராக வரும் மோகன் பாபு அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இவர்களோடு மதுபாலா, சம்பத் ராம், தேவராஜ், அர்பித் ரங்கா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சரியாக படத்திற்கு கொடுத்துள்ளனர்.
ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது. குறிப்பாக நியூசிலாந்து நாட்டில் 700 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக காட்சிகளை படம்பிடித்து காட்டியிருக்கிறார். ஸ்டீபன் தேவசியின் இசை படத்திற்கு ஆகப் பொருத்தமாக அமைந்துள்ளது. பாடல்களும் பின்னணி செய்யும் நம்மை கதையோடு பயணிக்க வைக்கிறது.
பிளஸ் & மைனஸ்
சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடும்படியாக இருக்கக்கூடிய 63 நாயன்மார்களில் முக்கியமாக சொல்லப்படக்கூடிய கண்ணப்ப நாயனாரின் கதையை அழகான திரைப்படமாக எடுத்துள்ள இயக்குனருக்கு முதலில் பாராட்டுக்கள். இதிகாச புராணத்திற்கு உண்மைக்கு நெருக்கமாக திரைக்கதை எழுதியுள்ள விஷ்ணு மஞ்சுவுக்கு வாழ்த்துக்கள். இந்த கதையை அனைத்து தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் பிரம்மாண்டம் சேர்த்து ஸ்ரீ காளஹஸ்தி வரலாற்றை சொல்லி இருப்பது சிறப்பான ஒன்று. இது போன்ற படங்களுக்கு நீளம் என்பதை வரையறை செய்வது மிகுந்த கடினம். அதையும் மீறி மூன்று மணி நேரத்திற்குள் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து 15 முதல் 20 நிமிடங்கள் குறைத்திருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். கண்ணப்பர் கதையை கடைசி அரை மணி நேரத்தில் மட்டும் சொல்லிவிட்டு அதற்கு முன்பாக மற்ற புனைவு கதைகளில் கவனம் செலுத்தி இருப்பதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்த கண்ணப்பாவை கண்ணார ரசிக்கலாம்.
கண்ணப்பா - அப்பப்பா.. சிவமப்பா...