பிரேக்பாஸ்ட்,Breakfast
Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு: கிரிஜா வரதராஜ்
இயக்கம்: ஏ.ஆர்.காந்திகிருஷ்ணா
நடிப்பு: ராணவ், ரோஸ்மின், கஸ்துாரி, சம்பத், அர்ச்சனா,கிர்த்திக்மோகன், அமிதா
ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி: ஏப்ரல் 24, 2025
நேரம்: 2 மணி 22 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

லவ் மேரேஜ் செய்த இளம் தம்பதிகளான கிர்த்திக்மோகன், அமிதா இடையே ஈகோ சண்டை. டைவர்ஸ்க்காக கோர்ட் செல்கிறார்கள். ''முதல்ல நீங்க மனநல மருத்துவர் கஸ்துாரியிடம் கவுன்சலிங் போங்க, அப்புறம் பார்க்கலாம்'' என்று பரிந்துரை செய்கிறார் நீதிபதி. எப்படியாவது டைவர்ஸ் வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கஸ்துாரியிடம் போய் அவர்கள் பேசுகிறார்கள். அப்போது கஸ்துாரி ஒரு காதல் கதை சொல்கிறார். அதில் தொழிலதிபரான ரோஸ்மின், கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ராணவ்வை காதலித்து திருமணம் செய்கிறார். அவர்கள் வாழ்விலும் ஏகப்பட்ட பிரச்னைகள், சண்டைகள். அவர்கள் பிரிந்தார்களா? அந்த கதைக்கும், இந்த தம்பதிகளுக்கும் என்ன தொடர்பு. டைவர்ஸ் அப்ளை செய்த இவர்கள் இணைந்தார்களா என்பதுதான் 'செல்லமே, ஆனந்த தாண்டவம்' படங்களை இயக்கிய ஏ.ஆர்.காந்திகிருஷ்ணா சற்றே இடைவேளைக்குபின் கொடுத்திருக்கும் படம்.

ஒரே படத்தில் இரண்டு காதல் கதைகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இரண்டிலும் உருக, உருக காதலித்து திருமணம் செய்தவர்கள், ஒரு கட்டத்தில் அடித்துக்கொள்கிறார்கள். கிர்த்திக்மோகன், அமிதா காதல் கதை விறுவிறுப்பாக இருக்கிறது. இரண்டு பேரின் நடிப்பு, சண்டைகள் ரசிக்கும்படி இருக்கிறது. அமிதாவின் கோபம், சின்ன, சின்ன எக்ஸ்பிரஷன் இன்னும் அழகு. இன்றைய காலகட்டத்தில் காதலித்து திருமணம் செய்பவர்களின் மனநிலை, பிரச்னைகள், சண்டை, தீர்வை சொல்கிறது அந்த கதை.

கஸ்துாரி சொல்லும் காதல் கதைதான் படத்தில் அதிக நேரம் வருகிறது. அதிலும் காதல் போர்ஷன் கியூட். குறிப்பாக, அதில் ஹீரோயினாக வரும் ரோஸ்மின் கியூட். பாடல் காட்சிகளில் இன்னும் அழகு. திருமணம் செய்துவிட்டு கோபத்தில் அவர் எடுக்கிற முடிவுகளும், நடிப்பும் படத்துக்கு பிளஸ். ராணவ் அறிமுக காட்சி தொடங்கி, கடைசி வரை நடிப்பிலும், டான்சிலும் கவர்கிறார். எமோஷனில் மட்டும் இன்னும் தேற வேண்டும்.

இந்த இரண்டு காதல் அழகு என்றாலும், இந்த காதலுக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட், எமோஷன், குடும்ப பிரச்னைகள் படத்தின் மைனஸ். அதெல்லாம் 20, 30 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்ட சினிமாவை பிரதிபலிக்கிறது. ராணவ் அம்மாவாக வரும் அர்ச்சனா, அப்பா ரங்கநாதனும் நடித்து தள்ளுகிறார்கள். ஹீரோயின் அப்பாவாக வரும் சம்பத் நடிப்பிலும் டன் கணக்கில் செயற்கை. அப்புறம், அந்த குடும்ப பிரச்னை, அப்பா பாசம், ஹீரோயின் எடுக்கிற முடிவு படத்துடன் செட்டாகவில்லை. சில சமயம் சீரியல் பீலிங் வந்துவிடுகிறது. இடைவேளைக்குபின் படம் இன்னும் தொய்வடைகிறது . கஸ்துாரி கேரக்டரும், அவர் கேரக்டர் டுவிஸ்ட்டும் ஓகே.

பாடல் காட்சிகளை கலர்புல்லாக, ரசிக்க வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம். ஜி.வி.பிரகாஷ் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை ஓரளவு காப்பாற்றி இருக்கிறது. பனிப்பொழிவு பின்னணியில், மலை பின்னணியில் உள்ள பாடல்கள் செம. ஆனாலும், திரைக்கதையில் ஏற்பட்ட ஓட்டைகள் காரணமாக பிரேக்பாஸ்ட்டை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
இளைஞர்களுக்கு, காதலர்களுக்கு அட்வைஸ் என்ற பெயரில் அந்தகால பாணியில் படம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். இளைஞர்களுக்கும் செட்டாகாது, பெரியவர்களையும் திருப்தி அடைய வைக்காது. ஹீரோயின் கோபம் எல்லை மீறி சில இடங்களில் எரிச்சலை தருகிறது. படத்தில் காதலை விட சண்டைகள் அதிகம் இருப்பதும் பெரிய மைனஸ்.

இரண்டு இளமையான காதல் ஜோடிகள் இருந்தும், அந்த கால திரைக்கதை, அந்த கால சீன்களால் படத்தை போரடிக்க வைக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ்க்கு முந்தைய டிவிஸ்ட் படத்துக்கு பிளஸ். ஆனால், அடுத்து வரும் சீன்கள் கதையுடன் இணையாமல் செயற்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட கதைக்கு கிளைமாக்ஸ் டச்சிங் ஆக, ரொம்பவே உருக்கமாக இருக்க வேண்டும். அதுவும் கிளைமாக்சில் மிஸ்சிங்.

பிரேக்பாஸ்ட் - கதையில் பாஸ்ட் இல்லை. ஏகப்பட்ட பிரேக்

 

பட குழுவினர்

பிரேக்பாஸ்ட்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓