மஞ்சு விஷ்ணு அவ்வப்போது வித்தியாசமான படங்களில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இம்முறை ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ப்ரியா ஆனந்த் நடித்த அரிமா நம்பி எனும் படத்தை தெலுங்கில் டைனமைட் என்ற பெயரில் இயக்குநர் தேவ கட்டா இயக்கியுள்ளார்.
சிவாஜி (விஷ்ணு) ஒரு யதார்த்த இளைஞன், அனாமிகா(ப்ரணிதா) ஒரு நவ நாகரீக யுவதி. இருவரும் ஒரு எதிர்பாராத தருணத்தில் சந்திக்கிறார்கள். அவனின் செயல்பாடுகளால் அவளும், அவளால் அவனும் ஈர்க்கப்படுகிறார்கள்.அனாமிகா தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு சிவாஜியை அழைக்கிறாள். அவனும் செல்கிறான். அங்கே வருகிறது எதிர்பாராத திருப்பம். யாரோ முகம் தெரியாதவர்களால் அனாமிகா கடத்தப்படுகிறாள்.
இதை போலீஸில் சொல்கிறான் சிவாஜி, பின் தான் தெரிகிறது கடத்தலில் போலீஸின் பங்கும் இருக்கிறது என்று. அனாமிகா ஏன் கடத்தப்பட்டாள்?? சிவாஜி என்ன ஆனான்? போலீஸ் என்ன செய்தது? என்ற கேள்விகளுக்கு விடையாக ஆக்ஷன் த்ரில்லர் திரைக்கதை நீள்கிறது.
படத்தின் பெரும் பலம் அதன் திரைக்கதை, அவ்வளவு நேர்த்தியாக முடுச்சுகள் விழுவதும் அவிழ்வதும் படத்தின் விறுவிறுப்பு தன்மையை தக்கவைக்கிறது.முக்கியமாக விஷ்ணு அழகாக அளவாக நடித்திருக்கிறார். முறுக்கேறிய உடலும், கோபமான பார்வையும் என படம் நெடுக கவனத்தை ஈர்க்கிறார். அடுத்ததாக வில்லனாக வரும் ஜே.டி சக்கரவர்த்தி, அவருக்கு இது போன்ற கதாபாத்திரம் பண்ணுவது மிகச்சுலபம் போல் அசால்டாக நடிக்கிறார். தன் காதலியை மிரட்டுவதாகட்டும் சிவாஜியிடம் பேரம் பேசிவதாகட்டும். மிரட்டுகிறார் மனிதர்.
சண்டைக்காட்சிகள் படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன, யதார்த்தமான சண்டை காட்சிகள் படத்தின் ஆன்மா என்றே சொல்லலாம். நிச்சயம் விஜயன் மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. படத்தின் பலவீனம் என்று பார்த்தால், முதல் பத்து நிமிடங்க்களை மூலக்கதைக்குள் நுழைய எடுத்துக்கொள்ளும் நேரம். அது போக இரண்டாம் பாதியில் வேண்டும் என்றே திணிக்கப்பட்ட பாடல்கள். இதை கொஞ்சம் கவனித்திருந்தால். படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.
முதல் பாதியில் புயல் வேகத்தில் செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் பாடலின் இடையூறால் கொஞ்சம் வேகம் மட்டுப்படுகிறது.இருப்பினும் டோலிவுட்டில் தற்சமயத்தில் இப்படி ஒரு ஆக்ஷன் படம் வந்ததில்லை என்று சொல்லலாம்.
டைனமைட் -பெரும் சப்தத்துடன் வெடிக்கும்.