2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : விஜே கம்பைன்ஸ், தாஸ் பிக்சர்ஸ், கேப்டன் சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் : யு.அன்பு
நடிகர்கள் : சண்முக பாண்டியன், யாமினி சந்தர், கஸ்தூரிராஜா, முனீஸ் காந்த், கருடன் ராம், ரிஷி, யூகி சேது, அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, லோகு
வெளியான தேதி : 13.06.2025
நேரம் : 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

கதைக்களம்
பொள்ளாச்சி அருகே மகன் சண்முக பாண்டியன், மகளுடன் வசிக்கும் கஸ்தூரிராஜா, ஒரு யானையை வளர்த்து வருகிறார். அந்த யானை, சண்முக பாண்டியனிடம் மிகுந்த பாசமாய் உள்ளது. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த லோகு, கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்காக அவரை அவமானப்படுத்துகிறார். இதனால் அவரது கடனை அடைப்பதற்காக சண்முக பாண்டியன் நண்பர்கள் உதவியுடன் யானையை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். இதனால் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு, அந்த யானை வனத்துறையிடம் சென்று விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? யானையை சண்முக பாண்டியன் மீட்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.

தமிழ் சினிமாவில் யானை சென்டிமென்ட் என்பது தேவர் பிலிம்ஸ் காலம் தொடங்கி கும்கி வரை வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அந்த வகையில் அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள இந்த படமும் யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இந்த படம் 5 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பிலேயே இருந்தது. ஐந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது. ஒரு வழியாக (மருமகன்) சண்முக பாண்டியனுக்காக, (மாமா) எல்கே சுதீஷ் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.

இந்த கதையும் ராஜ பீமா படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. யானையுடன் சண்முக பாண்டியனை வைத்து கதையை தயார் செய்த இயக்குனர் அன்பு, திரைக்கதையை சரியாக யோசிக்க வில்லை. படத்தின் வேகம் மதம் பிடித்த யானை போன்று இல்லாவிட்டாலும், கோவில் யானை போல் நடந்தாவது செல்ல வேண்டும். ஆனால் ஆமை வேகத்தில் நகர்வது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. முதல் பாதியில் யானை காணாமல் போய்விடுகிறது என்ற கதையைச் சொல்லி மீதமுள்ள ஒன்றரை மணி நேரமும் அதற்கான தேடுதல் வேட்டையிலேயே காட்சிகளை கடத்தி இருக்கிறார் இயக்குனர்.

படத்தில் சண்முக பாண்டியன் தவிர வேறு யாருக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக கேரக்டர் இல்லை. கதையின் ஒரு பகுதி ஒரிசாவில் நடப்பதாக சொல்லிவிட்டு, அதற்கான காட்சிகள் ஒன்று கூட இல்லாமல் இருப்பது பெரும் சோகம்.

சண்முக பாண்டியன் கொடுத்த வேலையை ஓரளவிற்கு சரியாக செய்திருக்கிறார். அவருடைய உயரமும், உடல்வாகும் கதைக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. மேலும் அப்பா விஜயகாந்த் போல் கண்களும், புருவங்களும் இருப்பது பெரிய பிளஸ். இருப்பினும் எமோஷன் காட்சிகளில் இன்னும் நடிப்பு பழக வேண்டும். கதாநாயகி யாமினி சந்தர் பத்தோடு பதினொன்றாக வந்து செல்கிறார். இவர்கள் இருவருக்கும் காதல் காட்சிகளோ, டூயட் பாடலோ கிடையாது. ஏன்! இருவரும் தனியாக இருப்பது போல் ஒரு காட்சி கூட இல்லை.

அப்பாவாக நடித்துள்ள கஸ்தூரிராஜா கிராமத்து பெரியவராக வெள்ளந்தியான நடிப்பை தந்துள்ளார். தனது செல்ல பிள்ளையை பறிகொடுத்து விட்டு கதறும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். வில்லனாக வரும் கருடன் ராம், வில்லத்தனத்தில் மிரட்டுவதற்கு பதிலாக ஹாரர் படத்தில் வரும் சாமியார் போல் வந்து செல்கிறார். அவருக்கு துணையாக வரும் ரிஷி மற்றும் லோகு உள்ளிட்டோர் ஒரு சில காட்சிகள் வந்து செல்கின்றனர். வனத்துறை அதிகாரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு சொல்லிக் கொள்ளும் படியாக காட்சிகள் கிடையாது.

இவற்றோடு தொழில்நுட்பம் மூலம் ரமணா பட விஜயகாந்த்தை ரீ கிரியேட் செய்து, அவருடன் யூகி சேதுவையும் வைத்து ரமணா பட காட்சிகளை நினைவுபடுத்தி உள்ளனர். மேலும் விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடலான பொட்டு வச்ச தங்க குடம் பாடல் இதிலும் ஒலிக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு அந்தப் பாடலில் லப்பர் பந்து பட காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

படத்திற்கு இளையராஜா இசை என்று சொன்னால்தான் தெரிகிறது. சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக இருந்தாலும், காடுகளையும் யானையையும் வைத்துக் கொண்டு இன்னும் பிரம்மாண்டமாக காட்டி இருக்கலாம்.

பிளஸ் & மைனஸ்
விஜயகாந்தை மக்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக மகனை நடிக்க வைத்து விட்டு அப்பாவை நம்பி படம் எடுத்துள்ளார் இயக்குனர். டைட்டில் கார்டில் தொடங்கி கிளைமாக்ஸ் காட்சி வரை பல இடங்களில் விஜயகாந்த் ரெபரன்ஸ் வருகிறது. ஒரு போட்டோ கடையில் கூட விஜயகாந்தின் படம் காட்டப்படுகிறது. இவையெல்லாம் அவரது ரசிகர்களுக்கு பெரிய பிளஸ் என்றாலும், கதைக்கு பலவீனமாக உள்ளது. யானைக்கும், சண்முக பாண்டியனுக்கும் உள்ள பிணைப்பை திரையில் ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. முதல் பாதி படம் எப்போது முடியும் என்று எண்ணும் அளவிற்கு திரைக்கதையில் தேக்கம். அதேபோல் ஒரிசா என்று பெயரளவில் சொல்லப்படுகிறது தவிர அதற்கான ஒரு ரெபரன்ஸும் திரைக்கதையில் புகுத்தாதது பெரிய மைனஸ். கிளைமாக்ஸ் காட்சியும் எப்போது முடியும் என்று எண்ணும் அளவுக்கு நீண்டு கொண்டே போகிறது.

படைதலைவன் - கம்பீரம் குறைவு

 

படை தலைவன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

படை தலைவன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓