மதுரவீரன்
விமர்சனம்
நடிப்பு - சண்முகப்பாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி
இயக்கம் - பி.ஜி. முத்தையா
இசை - சந்தோஷ் தயாநிதி
தயாரிப்பு - வி ஸ்டுடியோஸ்
ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்திய படம். அதனாலும், சாதி ரீதியாலும் பிரிந்து நிற்கும் மக்களை ஒன்றிணைக்க கிராமத்து இளைஞன் போராடுவதுதான் மதுர வீரன் படத்தின் கதை.
சுற்று வட்டார கிராமத்து மக்களும் பாராட்டும் பெரிய மனிதர் சமுத்திரக்கனி. அப்படிப்பட்டவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அதன்பின் ஊரை விட்டு மலேசியாவிற்குப் போன சமுத்திரக்கனியின் மகன், இருபது வருடங்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்து பல வருடங்களாக நடக்காமல் போன ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த முயற்சிகள் எடுக்கிறார். அப்பா சமுத்திரக்கனியைக் கொன்றது யார் என்று கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். இரண்டிலும் அவர் வெற்றி பெற்று வீரன் ஆனாரா என்பதுதான் மதுர வீரன்.
மண் மணம் வீசும் மதுர வீரன் எனத் தலைப்பு. கிராமத்து மனிதர்களாக திரையில் தெரியக் கூடிய நட்சத்திரத் தேர்வு. அழகான, யதார்த்தமான கிராமத்து லொகேஷன்கள் என பார்த்துப் பார்த்து செய்த இயக்குனர் பி.ஜி.முத்தையா அழுத்தமான கதையையும், திரைக்கதையையும் உருவாக்கத் தவறிவிட்டார்.
மதுர வீரன் ஆக டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முகப்பாண்டியன் சண்டைக் காட்சிகளில் மட்டும் அதிரடி காட்டுகிறார். அவர் அடித்தால் ஐம்பது பேர் வீழ்வார்கள் என்பதை மட்டும் நம்ப முடிகிறது. அந்த அளவிற்கு கம்பீரமாக இருக்கிறார். ஆனால், மற்ற காட்சிகளில் நடக்கிறார், வேட்டியை மடித்துக் கட்டுகிறார், எந்த எக்ஸ்பிரஷனும் இல்லாமல் வசனத்தை ஒப்புவிக்கிறார். அம்மாவிடம் பேசினாலும், காதலியிடம் பேசினாலும், எதிரியிடம் பேசினாலும் ஒரே மாதிரி பேசுகிறார். “அப்பா விஜயகாந்த் நடிச்ச பல நல்ல படங்களைத் திரும்பத் திரும்ப பாருங்க பாஸ், ரத்தம் கொதிக்கிற மாதிரி நடிப்பு தானா வந்துடும்.”
படத்தின் நாயகியாக கேரளத்து அறிமுகம் மீனாட்சி. நான்கு பெண்களுடன் சேர்ந்து நடந்து வந்தால் அதில் யார் கதாநாயகி எனத் தெரியவில்லை. படத்தில் மேக்கப்பே இல்லாமல் இருக்கிறார். நாயகனுக்கு முறைப் பெண்ணாக மீனாட்சி இருந்தாலும் படத்தில் இடைவேளை வரை காதல் காட்சிகளே இல்லை. மொத்தத்தில் நாயகிக்கு படத்தில் காட்சிகளும் குறைவு.
படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் வந்தாலும் சமுத்திரக்கனி அவருடைய கதாபாத்திரத்தை மனதில் பதிய வைக்கிறார். ஆரம்ப வில்லனாக வேலராமமூர்த்தி. இதுவரை நடித்துள்ள படங்களில் யதார்த்தமாக நடித்தவர், இந்தப் படத்தில் நாடகத்தில் நடித்தது போல் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் தேனப்பனும் படத்தில் முக்கிய வில்லன். அதிகார சாதியை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் மைம் கோபி. சமுத்திரக்கனியின் மைத்துனர் ஆக மாரிமுத்து. சண்முகப்பாண்டியன் நண்பனாக பாலசரவணன், கொஞ்சம் சிரிக்கிற மாதிரி காமெடி பண்ணுங்க பாஸ். ராஜேந்திரன் வரும் காட்சிகள் நகைச்சுவை என்றால் சாரி இயக்குனர், இன்னும் நன்றாக யோசியுங்கள்.
சந்தோஷ் தயாநிதி இசையில் காட்டேரி நெருங்காம... பாடல் திருவிழாக்களில் அதிகம் ஒலிக்கலாம். கொம்புல கொம்புல..., என்ன நடக்குது நாட்டுல..., உன் நெஞ்சுக்குள்ள... ஆகிய பாடல்களையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். பின்னணி இசையில் இன்னும் உழைக்க வேண்டும்.
எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள பி.ஜி. முத்தையா கடந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை கதையில் திணித்தது போல இருக்கிறது. அதிலும் விஜய் பேசும் வீடியோவை எல்லாம் போட்டிருப்பதன் காரணம் புரிகிறது. படத்தின் ஆரம்பம் முதலே காட்சிகள் ஒரு கோர்வையாக இல்லாமல், தொடர்பும் இல்லாமல் நகர்கிறது. கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் அதைச் சரியாக செய்திருக்கிறார். அதை முதலில் இருந்தே செய்திருக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மக்களையும் உணர்வுபூர்வமாய் உருக வைத்த ஒரு விவகாரம். அதைப் படமாக எடுக்கும் போது அப்படியே பிரதிபலித்திருக்க வேண்டும். முத்தையா மிஸ் செய்துவிட்டார்.
ஜல்லிக்கட்டு - சேர்த்து, கோர்த்து கட்டவில்லை.