கேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியன் கதாநாயகராக களம் இறங்கி இருக்கும் சகாப்தம் சரித்திரம் படைக்குமா...? பார்ப்போம்...!
கதைப்படி, சகா எனும் ஹீரோ சண்முகபாண்டியன், கிராமத்து அப்பாவுக்கு அடங்கிய நல்ல பிள்ளை. நண்பர் நண்டு ஜெகனுடன் கில்லி தாண்டு, கோலி விளையாடியபடி அப்பாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளையும் பார்த்து கொண்டிருக்கும் சகா - சண்முகபாண்டியனுக்கு, மலேசியாவில் இருந்து பந்தாவாக திரும்பும் நண்பர் பவர்ஸ்டார் சீனிவாசனை பார்த்ததும் மலேசியா போய் வேலைபார்த்து சம்பாதிக்கும் ஆசை உதிக்கிறது.
இந்நிலையில், விவசாயம் நொடித்ததால் வேலை வெட்டி இல்லாதிருக்கும் புருஷன் ரஞ்சித்தை, வசதியான வட்டி பார்ட்டி போஸ் வெங்கட்டின் பண உதவியால் மலேசியாவுக்கு அனுப்பிவிட்டு, பயணம் போன ஆம்பளையிடமிருந்து பணமும் வராமல், தகவல் ஏதும் வராமல் தவிக்கிறார் தேவயானி.! தான் கொடுத்த பணத்திற்கு ஈடாக தேவயானியை அடைய துடிக்கும் போஸ் வெங்கட்டிமிருந்து, அவரை காபந்து செய்யும் சகா, தேவயானியிடம் மலேசியா போன உங்கள் வீட்டுக்காரரையும் தேடி கண்டுபிடித்து உங்களிடம் சேர்க்கிறேன்... என சவால் விட்டு உறுதி கூறி நண்பர் நண்டு ஜெகனுடன் மலேசியாவிற்கு பிளைட் ஏறுகிறார்.
மலேசியா போய் இறங்கியதும் சகா-சண்முகபாண்டியனும், அவரது சகா நண்டு ஜெகனும் மலேசியா போலீஸால் ஏர்போர்ட்டிலேயே சுற்றி வளைக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுகின்றனர். அய்யய்யோ அப்புறம்.? அப்புறமென்ன...? சகாக்களின் பாஸ்போர்ட் ஒரிஜினல், விசா-ஒர்க் பர்மிட் இத்யாதி, இத்யாதிகள்... டூப்ளிக்கேட் என்று எச்சரிக்கப்பட்டு மலேசியா ஏர்போர்ட்டில் பணிபுரியும் தமிழ் அதிகாரி தலைவாசல் விஜய்யின் உதவியால் ஊர் நண்பர் பவர் சீனியிடம் சேர்பிக்கப்படுகின்றனர் நண்பர்கள் இருவரும்.
பைவ் ஸ்டார் ஓட்டல் முதலாளி... என ஊரில் புருடா விட்டு பில்-டப் கொடுத்துப்போன பவர், அங்கு பைவ் ஸ்டார் எனும் பெயர் உடைய கையேந்தி பவனில் பரோட்டா மாஸ்டராக இருக்கிறார். ஆனாலும் வேறு வழி இல்லாமல் அவர் வாயிலாக புரோக்கர் சிங்கம் புலியை தேடிப்பிடித்து வேலை தேடும் இவர்களுக்கு, எதிர்பாராமல் ஒரு டிடக்டீவ் ஏஜென்சியில் துப்பறியும் நிபுணர் வேலை கிடைக்கிறது. அடடே அப்புறம்.? அப்புறமும் என்ன...? மலேசியன் போலீசுக்கே துப்புக் கொடுக்கும் அந்த டிடக்டீவ் ஏஜென்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே சகா, போதை மருந்து விற்கும் கும்பலில் தொடங்கி, காலாவதி மருந்தை காசாக்கும் கும்பல் வரை சட்டத்திற்கு புறம்பான சகலரையும், மலேசியாவில் நடக்கும் ஒட்டுமொத்த அக்கிரமங்களுக்கும் காரணமான அத்தனை பேரையும் மலேசியா போலீஸில் பிடித்து கொடுத்து புகழ் தேடுகிறார். கூடவே அவர்களிடம் அடிமையாக சிக்கிய தன் ஊர்க்காரரான தேவயானியின் ஆத்துக்காரர் ரஞ்சித் உள்ளிட்ட தமிழர்களையும், இந்தியர்களையும், க்ளைமாக்ஸில் கெஸ்ட் ரோலில் வரும் கேப்டனின் உதவியுடன் காப்பாற்றி சகாவும், நண்பர்களும் இந்தியா திரும்புவது தான் சகாப்தம் படத்தின் மொத்த கதையும்.
இதில் ஹீரோ சகாவிற்கு இந்தியாவில் கிராமத்தில் முறைப்பெண்ணுடன் ஒரு காதல், மலேசியாவில் டிடக்டீவ் ஏஜென்சியில் சகாவின் சாதனைகளை ஆஹா ஓஹோ எனப் புகழும் பெண் அதிகாரியுடன் ஒரு லவ்... ஆகவே அவருடன் இரண்டு, இவருடன் இரண்டு... ஆக நான்கு டூயட் பாடல்கள் என கலந்து கட்டி சகாப்தத்தை கலர்புல் சப்தமாக்கியிருக்கின்றனர்!
சகாவாக சண்முகபாண்டியன் நடை, உடை, பாவனை, பார்வையில் ஒரு சில சீன்களில் அப்பா விஜயகாந்தை பிரதிபலித்தாலும், ''குருவி தலையில் பனங்காய் வைத்த கதை''யாக இம்மாம் பெரிய ரோலில், சில-பல இடங்களில் அப்பாவியாக விழிக்கும் சண்முகபாண்டியனை பார்க்க சற்றே பாவமாக இருக்கிறது. கேப்டன் விஜயகாந்தின் மகன் என்பதால் நடித்தே ஆக வேண்டுமா.? என்ன.? என நாம் கேட்கவரவில்லை... நடிப்பில் நல்முத்திரை பதித்த கேப்டனின் வாரிசு, எடுத்த எடுப்பிலேயே இப்படி ஆக்ஷ்ன் கோதாவில் குதிக்காமல், ஆரம்பத்தில் அப்பா அசத்திய ''வைதேகி காத்திருந்தாள்'', ''அம்மன் கோவில் கிழக்காலே'' மாதிரி நல்ல கதையம்சம் உடைய காதல் சப்ஜெக்டுகளை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே... அவர் வயதிற்கும் இளமை ததும்பும் முகஅமைப்பிற்கும்.? என்பது தான் நம் ஆதங்கம்!
அதேநேரம் தன் அப்பா பாத்திரத்தில் படத்தில் வரும் கேரக்டரிடம் சண்முபாண்டியன் பேசும் பன்ச் டயலாக்குகள், நம்பிக்கை வசனங்கள்... எல்லாம் கேப்டனுக்கு, சண்முகபாண்டியன் தரும் உறுதிமொழிகள் மாதிரி பக்காவாக படமாக்கப்பட்டிருப்பது சகாப்தம் படத்தின் பெரும் ப்ளஸ்!
க்ளைமாக்ஸ் பைட்டில் கெஸ்ட் ரோலில் வரும் விஜயகாந்த், 25 வருடத்திற்கு முன் நான் என்னையே பார்த்தது மாதிரி இருக்கு, உன்னை பார்ப்பது... என உருகுவதும், இளைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் சேர்த்து அட்வைஸ் வைப்பதும் கூட நச் என்று படமாக்கப்பட்டிருக்கிறது.
நாயகியாக நேகா ஹின்ச், சுப்ரா அய்யப்பா இருவரும் சில சீன்களில் சகாவிற்கு அக்கா மாதிரி தெரிந்தாலும், கவர்ச்சியில் குறை வைக்காதது ஆறுதல். நண்பர் நண்டு ஜெகன் சில இடங்களில் நச், பல இடங்களில் ப்ச்!.
பிற நட்சத்திரங்கள் சுரேஷ், ரஞ்சித், தேவயானி, சிங்கம் புலி, பவர் சீனிவாசன், தலைவாசல் விஜய், சௌரவ் சக்கரவர்த்தி, சண்முகராஜன், ராஜேந்திரநாத், போஸ் வெங்கட், முத்துக்காளை, ரேகா சுரேஷ், பாங்காக் கிச்சா, மலேசிய நட்சத்திரங்கள் ஆலி, டீனா, நீகா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட முயன்றிருக்கின்றனர். அதிலும் சென்டிமென்ட் டச் செய்யும் தேவயானியும், கெஸ்ட் ரோலில் வரும் விஜயகாந்த்தும் சற்று கூடுதலாகவே ரசிகர்களை கவருகின்றனர்.
''விவசாயிகள் விதை நெல்லை ஆக்கி திண்பது தான் பஞ்சம்... அதுமாதிரி கஷ்டம் எனக்கு இல்லை...'' உள்ளிட்ட வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அதேநேரம், முன்பாதியில் சகா சண்முகப்பாண்டியனின் மாமா சண்முகராஜனால் ஹீரோவுக்கு பாஸ்போர்ட், ஒர்க்பர்மிட் உள்ளிட்ட எல்லாம் ஈஸியாக ஏற்பாடு செய்யப்படுவது மாதிரி ஒருகாட்சியில் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் பின்பாதி படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனின் போர்ஜரி நண்பரால், சகாக்களின் பாஸ்போர்ட், ஒர்க்பர்மிட் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டதால் தான் அது போலியானது என்பது மாதிரி மற்றொரு காட்சியில் டயலாக் வைக்கப்படிருப்பது காமெடி.
தமிழ் சினிமாவில் நல்ல ஹைட்டும் - வெயிட்டும் உடைய ஹீரோ சண்முகபாண்டியன், அடுத்தடுத்த படங்களிலாவது காஸ்ட்டியூம்களில் மேலும் கவனம் செலுத்துவது நல்லது.
நவீன் கிருஷ்ணாவின் கதை-திரைக்கதை, ரா.வேலுமணியின் வசனம், எஸ்.பி.அகமதுவின் படத்தொகுப்பு, கார்த்திக் ராஜாவின் இசை, எஸ்.கே.பூபதியின் ஔிப்பதிவு, சுரேந்தரனின் இயக்கம் உள்ளிட்டவைகளில் சற்றே பழைய வாடை அடித்தாலும் அவை சகாப்தத்திற்கு பெரிய ப்ளஸாகவே தெரிகிறது. ஆனாலும் அப்பா மாதிரியே ஆக்ஷனில் சாதிக்க வேண்டும் என்ற சண்முகபாண்டியனின் ஆசை ஓ.கே. ஆனால், அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது... என்பதை அவர் உணர வேண்டும். அதுவரை கேப்டனின் தீவிர ரசிகர்களும், தே.மு.தி.க.,வினரும் சகாப்தம் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்பது பிராப்தம்! ஏன் அது நிர்ப்பந்தமாகவும் கூட இருக்கலாம். ஆனால் பிற ரசிகர்களுக்கு ''சகாப்தம்'' சாதாரண சப்தம் என்ற அளவிலேயே இருப்பது பலவீனம். ''சகாப்தம்'' - ''சாதாரணம்!!''