
டி என் ஏ
விமர்சனம்
தயாரிப்பு - ஒலிம்பியா மூவிஸ்
இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்
நடிகர்கள் - அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சேத்தன், போஸ் வெங்கட், சுப்பிரமணிய சிவா, ரித்திகா, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், செல்வராஜ்
இசை - ஜிப்ரான்
வெளியான தேதி - 20.06.2025
நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம் 52 நொடி
ரேட்டிங் -2.75/5
கதைக்களம்
பெரிய இடத்துப் பையனான அதர்வா காதல் தோல்வியால் மனம் உடைந்து குடிக்கு அடிமையாகி, பின்னர் அதில் இருந்து மீண்டு வருகிறார். அதேபோல் நடுத்தர குடும்பத்து பெண்ணான நிமிஷா சஜயன், இம்மெச்சூரிட்டி குணத்துடன் இருப்பதால் பல ஆண்களால் புறக்கணிக்கப்படுகிறார். இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்துக்கு பிறகு தாய்மை அடையும் நிமிஷா, பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை மர்மமான முறையில் கடத்தப்படுகிறது. அதன் பின்னணி என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
குழந்தை கடத்தல் குறித்து ஏராளமான படங்கள் வெளிவந்திருந்தாலும் அதிலிருந்து ஒரு வித்தியாசமான ஐடியாவை தேர்வு செய்து அதற்கு ஏற்றார் போல் ஸ்கிரீன்பிளே எழுதி ரசிக்கும்படியான படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். வயதுக்கு ஏற்ற மனவளர்ச்சி இல்லாத பெண்ணாக நிமிஷா சஜயனையும், காதல் தோல்வியால் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி பின்னர் அதிலிருந்து மீண்டு வருபவராக அதர்வாவையும் அழகாக தேர்வு செய்து அந்த கேரக்டரில் பொறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
ஒரு சிறு குறையோடு இருக்கும் பெண் என்றாலும் தன்னுடைய குழந்தையை சரியாக அடையாளம் காணும் திறமையை பெற்றவர் என்பதை மிகச் சரியாக திரையில் காட்டி இருக்கிறார். இன்றைய மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை டி என் ஏ மூலம் எடுத்துக்காட்டி இருக்கிறார். முதல் பாதியை சற்று மெதுவாக நகர்த்திருந்தாலும் இரண்டாம் பாதியில் பரபரவென ஆக்சன் பேக்கேஜ் ஆக எமோஷன் உடன் கலந்து கொடுத்திருக்கிறார்.
நீண்ட நாட்களாக வெற்றியை சுவைக்காமல் இருந்த அதர்வாவுக்கு இந்த படம் மல்கோவா மாம்பழம் போல் அமைந்துவிட்டது. ஆனந்த் என்ற கேரக்டரில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய அவர் படங்களின் நடிப்பிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டு தெரிகிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தனது நடிப்பால் படத்தை இழுத்துச் சென்றுள்ளார் அதர்வா. அதேபோல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை தனதாக்கிக் கொள்ளும் ஒரு சில நடிகைகளில் நிமிஷா சஜயனும் ஒருவர். இதில் திவ்யா எனும் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் தனது முகபாவம் வழியாக அசத்தியிருக்கிறார். குழந்தைக்காக கதறும் காட்சிகளில் எமோஷன் மூலம் ரசிகர்களுடன் கனெக்ட் செய்கிறார்.
மொத்த கதையையும் இவர்கள் இருவரும் தாங்கிப் பிடிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் இயக்குனர் பாலாஜி சக்திவேல், கதையின் ஓட்டத்திற்கு ஏற்றார் போல் ஓடி இருக்கிறார். அதர்வாவின் அப்பாவாக வரும் சேத்தன், நிமிஷா சஜயன் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர், நண்பராக வரும் ரமேஷ் திலக், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் செல்வராஜ் ஆகிய அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து உள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது. பார்த்திபனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
பிளஸ் & மைனஸ்
குழந்தை கடத்தல், நரபலி, போலீஸ் விசாரணை என வழக்கமான பிளாட்டில் கதை நகர்ந்தாலும், இரண்டாம் பாதியை வேறு ஒரு நாட் மூலம் நகர்த்தி இருப்பது சிறப்பு. முதல் பாதியில் போதைக்கு அடிமையானவராக அதர்வாவை அளவுக்கு அதிகமாக காட்டி முகம் சுளிக்க வைத்துள்ளார். முதல் பாதியில் பல இடங்களில் காட்சிகள் ஸ்லோ ஆகி நின்றாலும், இரண்டாம் பாதியில் தனது திரைக்கதையால் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் இயக்குனர். தாயின் ஏக்கம், தந்தையின் தவிப்பு, உறவின் பாசம் என ரசிகர்களுக்கு நல்ல கன்டன்ட்டை கொடுத்திருக்கிறார். திவ்யா அண்ட் ஆனந்த் என்பதை குறிக்கும் வகையில் 'டிஎன்ஏ' என்ன டைட்டில் வைத்திருப்பது கதைக்கும் நியாயம் சேர்த்து உள்ளது.
டி என் ஏ- டிபரன்ட் நியூ அட்டெம்ப்ட்