2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஐங்கரன் இன்டர்நேஷனல்
இயக்கம் - கார்த்திக் நரேன்
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - அதர்வா, ரகுமான், சரத்குமார், துஷ்யந்த், அம்மு அபிராமி
வெளியான தேதி - 22 நவம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

2016ல் வெளிவந்த 'துருவங்கள் பதினாறு' படம் மூலம் இளம் இயக்குனராக அறிமுகமாகி, யார் இவர் ? என ஆச்சரியப்பட வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அதற்கடுத்து அவர் இயக்கிய 'நரகாசூரன்' படம் முடிந்து ஆறு வருடங்களாகியும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கடுத்து அவர் இயக்கிய 'மாபியா - சாப்டர் 1, மாறன்' ஆகிய படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. இந்த 'நிறங்கள் மூன்று' படமும் முடிந்து சில வருடங்களாகிவிட்டது. சிக்கல்களைக் கடந்து இப்போது வெளியிட்டுள்ளனர்.

மூன்று கதாபாத்திரங்கள், அந்த கதாபாத்திரங்கள் சந்திக்கும் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் தனித்தனியாக திரைக்கதையாக நகர்ந்து பின் ஒன்று சேர்ந்து முடிவுக்கு வருகிறது. திரைக்கதையாக சுவாரசியமாக நகர்ந்தாலும் அழுத்தமான காட்சிகள், நெகிழ்வான காட்சிகள் இல்லாமல் அப்படியே நகர்ந்து போகிறது படம்.

பள்ளியில் 12ம் வகுப்பு படிப்பவர் துஷ்யந்த். அவருடைய ஆசிரியர் ரகுமானின் மகளான அம்மு அபிராமியைக் காதலிக்கிறார். ஒரு நாள் அதிகாலையில் டியூஷனுக்குச் சென்ற அம்மு அபிராமி காணாமல் போகிறார். அம்மு எங்கே போனார் என துஷ்யந்த், ரகுமான் தனித்தனியே தேட ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம், சினிமாவில் இயக்குனராகத் துடிக்கும் அதர்வாவின் கதையைத் திருடி பிரபல இயக்குனர் படமெடுக்க முயற்சிக்கிறார். அதைத் தடுக்க அதர்வாவும் அவரது நண்பர்களும் முயற்சிக்கிறார்கள் என ஒரு கதை போகிறது. மற்றொரு பக்கம் லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டரான சரத்குமாருக்கும், அமைச்சரின் மகன்களுக்கும் இடையிலான மோதல் என ஒரு கதை நகர்கிறது. துஷ்யந்த், ரகுமான், அதர்வா, சரத்குமார் ஆகியோரது தனித் தனி கதை எப்படி கடைசியில் இணைகிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனாக அதர்வா. ஆனால், கண்ட கண்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி எப்போதும் போதையில் இருப்பவராக அவரைக் காட்டுவது தேவையற்ற ஒன்றாக இருக்கிறது. இந்த யு டியுப் யுகத்தில் சினிமா இயக்குனர் கனவில் பலர் இருக்கிறார்கள். போதையில் இருந்தால்தான் விதவிதமான கற்பனைகள் கிடைக்கும் என வசனத்தையும் வைத்து இளம் சமுதாயத்தை தவறான வழியில் செல்ல ஆலோசனை தருகிறார் கார்த்திக் நரேன். அதற்குக் கடுமையான கண்டனங்கள். அதர்வா சம்பந்தப்பட்ட போதைக் காட்சிகள், பிரபல இயக்குனரிடம் அதர்வா வெறுப்பாக உள்ள காட்சிகளை இயக்குனர் கார்த்திக் நரேன் ரசித்து ரசித்து எடுத்தது போலத் தெரிகிறது. யார் மீதுள்ள கோபமோ ?.

மாணவர்களுக்குப் பிடித்தமான நல்ல ஆசிரியராகக் காட்டப்படுகிறார் ரகுமான். மகளைக் காணாமல் தவிக்கும், அமைதியின் மறு உருவமாக வந்து போகிறார். வெளித்தோற்றத்தை, நடவடிக்கைகளை வைத்து ஒருவரை நம்பக் கூடாது என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் ஒரு உதாரணம்.

லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டராக சரத்குமார். தன்னிடம் அதிகாரத் திமிரைக் காட்டும் அமைச்சருக்கும், அவரது மகன்களுக்கும் சரியான பாடம் புகட்ட நினைக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களை விட சரத்குமாருக்கான காட்சிகள் குறைவுதான். இருந்தாலும் அவர் வரும் காட்சிகளில் தனது அனுபவ முத்திரையைப் பதிக்கிறார்.

துஷ்யந்த்தின் தோழியாக, ரகுமானின் மகளாக அம்மு அபிராமி. வழக்கம் போலே யதார்த்தமாக நடித்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் இவர் மட்டும்தான்.

ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை, டிஜோ டோமி ஒளிப்பதிவு படத்திற்குரிய தரத்தின் நிறத்தை சரியாகக் கொடுத்திருக்கிறது.

அதர்வா சம்பந்தப்பட்ட போதைக் காட்சிகளை அவ்வளவு டீடெயிலாகக் காட்டுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. படம் விறுவிறுப்பாக நகராமல் நின்று நிதானமாக நகர்கிறது. கடந்த சில வருடங்களில் திரைக்கதை எப்படி மாறிவிட்டது என்பதை இயக்குனர் கார்த்திக் நரேன் அப்டேட் செய்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட விதத்தில் ஒரு பாதிப்புக்குள்ளானவை. ஆனால், அவர்களில் யார் மீதும் நமக்கு ஒரு அனுதாபம் வராமல் போவதுதான் இந்தப் படத்தின் மைனஸ். ஏதோ ஒரு கதாபாத்திரத்தை மிக அனுதாபத்துடன் உருவாக்கி, அதை நம்மைத் தொடர வைத்து, அதைச் சுற்றி திரைக்கதை நகர்ந்திருந்தால் நமக்குள் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

நிறங்கள் மூன்று - நிறைவில்லாமல்…

 

நிறங்கள் மூன்று தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நிறங்கள் மூன்று

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓