"புதுப்புது அர்த்தங்கள்" ரஹ்மான், சற்று பெரிய இடைவெளிக்குப் பின் கதாநாயகராக நடிக்க., அவருடன் டெல்லி கணேஷ் தவிர்த்து, பிரகாஷ், சந்தோஷ்கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா, பிரதீப், அஞ்சனா, ஷரத்குமார் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, கார்த்திக் நரேனின் எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் மெய்யாலுமே சரியான சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் படமாக வந்திருக்கிறது துருவங்கள் பதினாறு.
நைட் நோஸ்டால் ஜியா பிலிமோடைன்மெண்ட் தயாரிப்பில், வீனஸ் இன்போ டைன்மெண்ட் இணைத் தயாரிப்பாளராக இடம் பெற, சக்தி சரவணன் லைன் புரடியூஸராக பங்கு பெற உருவான இத்திரைப்படத்தை ட்ரீம் பேக்டரி பட நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புடன் வாங்கி வெளியிட்டிருக்கிறது.
ஒரு விபத்து, ஒரு மிஸ்ஸிங்கேஸ் மற்றும் ஒரு தற்கொலை பற்றிய விசாரணையையும் அது மூன்றுக்கும் இடையேயான முடிச்சையுமே கருவாகக் கொண்டு உருவாகி வந்திருக்கும் இப்படக்கதைப்படி, ஊட்டி பகுதியில் ஒரு அடை மழை நள்ளிரவில், நடுரோட்டில் ஒரு வாலிபர் துப்பாக்கியால் தற்கொலை செய்துக்கொண்டு கிடக்கிறார். அதே நாளில் அதே ஏரியாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தோழியுடன் வசித்து வந்த இளம் பெண் ஒருவரும் மாயமாகி இருக்கிறார். அவரது அறை முழுதும் இரத்தம் தெறித்துக் கிடக்கிறது. ஆனால், அது அந்த இளம் பெண்ணின் இரத்தம் இல்லை... அதே நாளில் அதே பகுதியில், அதே நேரத்தில் மூன்று இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து, சாலையை கடக்க முயலும் வாலிபர் ஒருவர் மீது காரை ஏற்றி விட்டு அதில் அடிபட்டு பிணமானவனை தங்களது கார் டிக்கியிலேயே தூக்கி போட்டுக் கொண்டு போய், வீட்டில் நிறுத்திவிட்டு திரும்ப வந்து பார்த்தால் பிணத்தை காணாது திகைக்கின்றனர். தினுசு, தினுசான ஆங்கிளில் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் டிபரன்ட்டாக படமாக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையேயான சம்பந்தம் என்ன..? என்பதும், அதை தன் காலை இழந்து கடமை தவறாத போலீஸ் இன்ஸ் தீபக் எனும் ரஹ்மான் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்...? என்பதையும், கொலையாளி யார்.? என்பதையும் செம சஸ்பென்ஸ், கிரைம், திரில்லராக சுமார் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் ரசிகனுக்கு சொல்லி முடிக்கிறது துருவங்கள் பதினாறு படத்தின் ஒட்டு மொத்தகதையும், களமும்.
ரஹ்மான், கதாநாயகராக, சற்றே புதிரான, போலீஸ் இன்ஸ்ஸாக நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக ஸ்டைலாக, கலக்கலாக நடித்திருக்கிறார். டப்பிங் வாய்ஸாக தரப்படும் அவரது சொந்தக் குரல்தான் ஆங்காங்கே இதுடப்பிங் படமோ? எனும் சந்தேகத்தை கிளப்புகிறது. மற்றபடி, ரஹ்மானும், இப்படமும் ஹாசம்.
புத்திசாலி புதிய கான்ஸ்டபிள் கெளதமாக ரஹ்மானுக்கு உதவும் பிரகாஷ், பாபியன் - சந்தோஷ்கிருஷ்ணா, மெல்வின் -கார்த்திகேயன், மனோ - ப்ரவீன், ஸ்ருதி-யாஷிகா, பிரேம் - பாலா ஹாசன், க்ருஷ் - வினோத் வர்மா, ஹெட் கான்ஸ்டபிள் ராஜன் - பிரதீப், வைஷ்ணவி - அஞ்சனா, நியுஸ் பேப்பர் பாய் - ஷரத்குமார் உள்ளிட்ட புதுமுகங்கள் அனைவரும் அசத்தலாய் நடித்திருக்கின்றனர். இவர்களுடன், ஒரேமகனை விபத்தில் இழந்த விஷயத்தை மனைவியிடம் எவ்வாறு சொல்வது என புலம்பிய படியே செல்லும் வயதான தகப்பனாக டெல்லி கணேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சில் நிற்கிறார்.
ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும், டி.ஐ.யும் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு... என்றாலும், பேஷ், பேஷ் என்று சொல்லுமளவிற்கு சிறப்பாய் இருக்கிறது. அதே மாதிரி சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு அடை மழை இருட்டிலும், மிரட்டலாக மிளிர்ந்திருப்பது படத்திற்கு பெரிய ப்ளஸ் !
ஜேக்ஸ் பிஜாய்யின் கதைக்கு தேவையான அளவில் திகிலூட்டும் பின்ணணி இசை இப்படத்திற்கு மேலும் மிரட்டலை கூட்டி ரசிகனை ஈர்க்கிறது.
முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அடுத்தது என்ன..? அடுத்து என்ன..? தற்கொலையாக ஜோடிக்கப்பட்ட கொலைக்கும், அந்த மழை இரவு நேர விபத்திற்கும், பெண் கடத்தலுக்கும், யார் தான் காரணம்..? என்ற தேடலை ரசிகனுக்குள்ளேயும் புகுத்தி கச்சிதமாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன், என்பது இப்படத்திற்கு பெரும்பலம். அந்த பலத்திற்கு முன் சஸ்பென்ஸ் வேண்டுமென்பதற்காக படமாக்கப்பட்டிருக்கும் வழக்கமான க்ளைமாக்ஸ், உள்ளிட்ட குறைகள்.., சிற்சில லாஜிக் மீறல்கள்.. உள்ளிட்டவை பெரிய பலவீனமாக தெரியவில்லை. ஆகவே, நிஜமாகவே ரசிகனை வசீகரிக்கும் சஸ்பென்ஸ், க்ரைம்0 ,திரில்லிங் மூவியாக ஜொலிக்கிறது "துருவங்கள் பதினாறு" திரைப்படம்... என்றால்... மிகையல்ல!
ஆகமொத்தத்தில், "செம க்ரைம், த்ரில்லர் ஜோரு - துருவங்கள் பதினாறு - திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டப் போகுது பாரு!"