3BHK,3BHK

3BHK - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : சாந்தி டாக்கீஸ்
இயக்கம் : ஸ்ரீகணேஷ்
நடிப்பு : சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா
இசை : அம்ரித் ராம்நாத்
வெளியான தேதி : ஜூலை 4, 2025
நேரம் : 2 மணிநேரம் 20 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கும் சரத்குமார், தேவயானி ஜோடி. இவர்களின் மகன் சித்தார்த், மகள் மீதாவும் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள், அவமானங்களை சந்திக்கிறார்கள். 3 பெட்ரூம் கொண்ட ஒரு பிளாட்டை வாங்க வேண்டும் என்பது அவர்களின் கனவு. அதற்காக ஏகப்பட்ட பிளான் போடுகிறார்கள். அதெல்லாம் வொர்க் அவுட் ஆனதா? அவர்கள் கனவு பலித்ததா என்பது 3BHK படக்கதை. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கிறார். அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய 3BHK வீடு என்ற கதையை தழுவி படம் எடுக்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டின் கஷ்டங்கள், சொந்த வீடு கனவு பின்னணியில் இப்போதைக்கு இப்படியொரு அழுத்தமான கதை தமிழில் வந்தது இல்லை. அடிக்கடி வீடு மாறும் அவலம், ஹவுஸ் ஓனர்களின் தொல்லைகள், புது பிளாட் வாங்குவதில் இருக்கும் பொருளாதார பிரச்னைகள், நடுத்தர , ஏழை குடும்பங்களின் செலவுகள் என ஆரம்பத்தில் அழகாக நகர்கிறது திரைக்கதை. இடைவேளைக்குபின் ஐடி வேலை, பெண்கள் மீதான குடும்ப அழுத்தம் என இன்னும் பல விஷயங்களை பேசுகிறது.

ஐயா படத்துக்குபின் எதார்த்தமாக, அழுத்தமாக நடித்து இருக்கிறார் சரத்குமார். தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக வேலை பார்ப்பவர் ஆபீசுக்கு புதிதாக வந்திருக்கும் கம்யூட்டர் பார்த்து மிரள்வது, மகன் குறைவான மார்க் வாங்கும்போது பதறுவது, பணத்தை மிச்சம் பிடிக்க பல்வேறு விஷயங்களை செய்வது, அப்பா பாசம் என நடிப்பில் மிளிர்கிறார். தேவயானி சிறந்த நடிகை என்றாலும், அவரை ஏனோ இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. அதேபோல், யோகி பாபுவும் சில சீன்கள் வந்து போகிறார். பாம்பே ஜெயஸ்ரீ மகன் அம்ரித் ராம்நாத் இசை, பாடல்கள் ஓகே.

இந்த வயதிலும் அப்படியே ஸ்கூல் பையனாக மாறி இருக்கிறார் சித்தார்த். அந்த போர்ஷன் படத்துக்கு பெரிய பிளஸ். குறிப்பாக, சித்தார்த், அவர் தோழி சைத்ரா சம்பந்தப்பட்ட சீன்கள், வடக்கி வெப்சீரியல் புகழ் சதீஷ் நட்பு சம்பந்தப்பட்ட சீன்கள் ரசிக்க வைக்கிறது. இன்ஜினியரிங் கல்லுாரி காட்சிகள் நச். என்ன இடைவேளைக்குபின் அவர் நடிப்பிலும் செயற்கை தனம். ஐடி படித்து விட்டு, நல்ல வேலையில் இருந்துவிட்டு பட்டறையில் வேலை பார்ப்பதெல்லாம் பக்கா சினிமாதனம்.

சித்தார்த் தங்கையாக நடித்துள்ள குட் நைட் மீதா ரகுநாத் பல நிஜ தங்கைகளை நினைவுப்படுத்துகிறார். அவர் குரல், குறும்புதனம், பாசம், அந்த மேனரிசம் கொள்ளை அழகு. அவரை இடைவேளைக்குபின் வேறு மாதிரி காண்பித்து, நாடகத்தன்மையை கொண்டு வந்து இருக்கிறார் இயக்குனர்.

சித்தார்த் பள்ளி தோழியாக, பிற்பாதியில் இன்னொருவராக வரும் கன்னட நடிகை சைத்ரா நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார். அவரின் குளோசப் காட்சிகள், அந்த ஐஸ்கீரிம் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அந்த கிளைமாக்ஸ் கொண்டாட்டம் நல்லதொரு பீலிங். வீடு வாங்க நினைக்கும்போகும் வரும் திருப்பங்கள், பொருளாதார பிரச்னைகளில் ஸ்ரீகணேஷ் ஸ்கிரிப்ட் பக்கா.

வாடகை வீட்டின் சிக்கல், சரத்குமார் குடும்பத்தினர் போராட்டம், அவர்கள் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள் என சீரியசாக நகரும் கதை, 2ம் பாதியில் தடம் மாறுவது பெரிய மைனஸ் ஆக இருக்கிறது. சித்தார்த்தின் ஐடி வேலை, தங்கையின் குடும்ப பிரச்னை என கதைக்கு சம்பந்தம் இல்லாமல் வேறு விஷயத்தை தொடுவது கதையின் தீவிரதன்மையை குறைக்கிறது. முதற்பாதியில் எதார்த்தம் என்றால், பிற்பாதியில் நாடக பாணி அதிகம் தென்படுகிறது. கிளைமாக்சும் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம். சரத்குமார், தேவயானி கெட்அப் தவமாய் தவமிருந்து ராஜ்கிரண், சரண்யாவை நினைவுபடுத்துகிறது. சரஸ்வதி மேனன், தலைவாசல் காட்சிகள் போரடிக்கிறது.

சரியாக படிக்காமல் சித்தார்த் திட்டுவாங்குவது, ஹவுஸ் ஓனர் ரவுசு, பில்டர்களின் பிஸினஸ், மழையில் தத்தளிக்கும் வீடு, கேம்பஸ் இன்டர்வியூ, ஐடி வேலையின் இன்னொரு முகம், சித்தார்த் காதல் காட்சிகள் என மனதிற்கு நெருக்கமான காட்சிகள் இருந்தாலும், ஒரு கட்டத்தில் கதையை வேறு திசைக்கு கொண்டு சென்று விடுகிறார் இயக்குனர். பிற்பாதி காட்சிகளில் வரும் சினிமாதனம் போராடிக்கிறது. படத்தின் நீளமும் அதிகம். ஒரு கட்டத்தில் இவ்வளவு சம்பாதித்தும் இன்னும் இவங்களால் வீடு வாங்க முடியலையா என்று பார்வையாளர்களுக்கு எழும் கேள்வி, கதையின் வீரியத்தை குறைக்கிறது. வீடு வாங்கும் கதையில் பல விஷயங்களை திணித்து இருப்பது அயர்ச்சி. ஆனாலும் 3பிஹெச்கே பார்ப்பவர்களுக்கு தங்களின் வீடு மாறிய அனுபவங்கள், அவமானங்கள், சொந்த வீடு கட்டிய அல்லது வாங்கிய நினைவுகள் மனதில் வந்து போகும்.

3BHK - புது வீடு இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்

 

3BHK தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

3BHK

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓