குட் நைட்,Good Night
Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - விநாயக் சந்திரசேகரன்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக்
வெளியான தேதி - 12 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

நம்மிடமும், நம்மைச் சுற்றியும் உள்ள சிறு சிறு பிரச்சினைகள் கூட நமது வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஒரு சிறிய விஷயம்தானே என்று நினைப்போம், ஆனால், அது உளவியல் ரீதியாக எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். நமது அன்றாட வாழ்க்கையில் நம்மில் பலரிடமும் இருக்கும் குறைகளில் ஒன்று 'குறட்டை' விடுவது. அதை வைத்து ஒரு இரண்டரை மணி நேரப் படத்தை சுவாரசியமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

'குறட்டை' விடும் பழக்கம் கொண்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஐ.டி. இளைஞனின் பிரச்சினைதான் படத்தின் கதை என்று ஒரு வரியில் சொன்னாலும் அதை சுவாரசியமான திரைக்கதை, துணை கதாபாத்திரங்கள், அதற்கான பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, தினசரி வாழ்க்கையில் கடந்து போகும் சில பல பிரச்சினைகள் என ஒரு யதார்த்தமான குடும்பத்தையும், சில மனிதர்களையும் நம் கண் முன் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

ஐ.டி.யில் வேலை பார்க்கும் இளைஞர் மணிகண்டன். அவருக்கு நன்றாக, சத்தமாக குறட்டை விடும் பழக்கம் உண்டு. அதனால் ஒரு காதல் கூட சொல்லாமலேயே முடிந்து போகிறது. இந்நிலையில் அவருக்கு மீதா ரகுநாத் உடன் பழக்கமாகி, காதலாக மாறி, கல்யாணத்தில் முடிகிறது. திருமணம் செய்து கொள்ளும் வரை மீதாவிடம் தனது குறட்டையைப் பற்றி அவர் சொல்லாமல் மறைத்துவிடுகிறார். முதலிரவன்றே அவரது குறட்டையால் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதனால், ஒரே வீட்டில் பக்கத்து பக்கத்து அறையில் தூங்க ஆரம்பிக்கிறார்கள் இருவரும். இந்த குறட்டை பிரச்சினைக்கு எப்படியாவது முடிவு கட்ட நினைக்கிறார் மணிகண்டன். அது முடியாமல் போக இருவருக்குள்ளும் விரிசல் அதிகமாகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் அம்மா, அக்கா, மாமா, தங்கை ஆகியோருடன் இருக்கும், ஐ.டி.யில் ஆங்கிலம் சரியாகத் தெரியாமல் வேலை பார்க்கும் மோகன் கதாபாத்திரத்தில் மணிகண்டன். எந்த இடத்திலும் அவர் படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாதபடி அப்படியே மோகனாகவே மாறியிருக்கிறார். தூங்கும் போது குறட்டை விடுவது கூட நடிப்பு என்று சொல்ல முடியாதபடி அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறது. மீதாவுடனான சந்திப்பு, பின்னர் காதல், திருமணமான பின் தன்னால் மனைவி கஷ்டப்படக் கூடாது என்ற நினைப்பு என படம் முழுவதும் அவரின் நடிப்பு அவ்வளவு இயல்பாக உள்ளது.

அமைதியின் திருவுருமாய் மீதா ரகுநாத். அதிர்ந்து கூட பேசாமல், மென்மையாகப் பேசும் ஒரு கதாபாத்திரம். இப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது. மணிகண்டன் பற்றித் தெரியாமல் அவரைக் காதலித்து, கல்யாணம் வேறு செய்து கொள்ளப் போகிறாரே என்ற ஒரு பதட்டம் படம் பார்க்கும் நமக்கும் வந்தாலும் 'அனு' கதாபாத்திரத்தில் அடுத்தடுத்து அனுதாபங்களை அள்ளிக் கொள்கிறார்.

நாயகன், நாயகி கதாபாத்திரம் மட்டுமல்லாமல் மற்ற துணை கதாபாத்திரங்களையும் நம் மனதில் இடம் பிடிக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள். மணிகண்டன் அம்மா, அக்கா ரேய்ச்சல் ரெபாக்க, மாமா ரமேஷ் திலக், மீதா வீட்டு உரிமையாளர் பாலாஜி சக்திவேல், அவரது மனைவியாக நடித்திருப்பவர் என ஒவ்வொருவரும் அவர்களது கதாபாத்திரங்களில் அவ்வளவு நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையில் முழுமையான பாடல்களாக இல்லாமல் சிறு சிறு பாடல்களாக படம் முழுவதும் வந்து போகிறது. மூன்று வீடுகள், சென்னைத் தெருக்கள் என படத்தின் கதைக்களங்களை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன்.

இடைவேளை வரை மிகவும் சுவாரசியமாக நகர்கிறது திரைக்கதை. ஆங்காங்கே 'ஒன் லைன்' வசனங்கள் நகைச்சுவையில் மிளிர்கிறது. இடைவேளைக்குப் பின் குறட்டைக்காக மணிகண்டன் மேற்கொள்ளும் சிகிச்சை முறை காட்சிகள் அந்த சுவாரசியத்தையும், வேகத்தையும் குறைத்துவிடுகின்றன. அதே சமயம் கிளைமாக்சுக்கு அரை மணி நேரம் முன்பாகவே மீண்டும் டாப் கியரில் செல்கிறது படம்.

தமிழ் சினிமாவில் வாழ்வியலைப் பதிவு செய்து படமெடுக்கும் இயக்குனர்களின் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனும் இடம் பெறுவார். தொடர்ந்து இப்படியான படங்களைக் கொடுக்க வாழ்த்துகள்.

குட் நைட் - ஸ்வீட் டிரீம்ஸ்

 

குட் நைட் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குட் நைட்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓