குடும்பஸ்தன்,Kudumbasthan

குடும்பஸ்தன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சினிமாக்காரன்
இயக்கம் - ராஜேஷ்வர் காளிசாமி
இசை - வைசாக்
நடிப்பு - மணிகண்டன், சான்வீ மேக்னா, குரு சோமசுந்தரம்
வெளியான தேதி - 24 ஜனவரி 2025
நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

காதல் திருமணம் செய்து கொண்ட ஒருவன் குடும்பத்தை நடத்த எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதுதான் படத்தின் கதை. காமெடியாகவும், எமோஷனலாகவும் சொல்ல நினைத்து என்னென்னவோ சொல்லி திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.

கோயம்பத்தூரில் வீட்டு புரோக்கராக இருக்கும் ஆர் சுந்தர்ராஜனின் மகன் மணிகண்டன். பி..சி-யான இவர் எஸ்சி பெண்ணான சான்வீ மேக்னாவை பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். படத்தில் இந்த பி.சி, எஸ்.சி, என்று குறிப்பிடப்படுவது எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது வேறு விஷயம். விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் மணிகண்டனுக்கு வேலை போய்விடுகிறது. ஐஏஎஸ் தேர்வுக்காகப் படிக்கும் மனைவி சான்வீ கர்ப்பமடைகிறார். வேலை போனதை வீட்டில் தெரியாமல் மறைக்கிறார். ஒரு கட்டத்தில் தெரிய வர, பின் பேக்கரி ஒன்றை ஆரம்பிக்கிறார். அதிலும் பிரச்சனை வர அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் ஆரம்பமானது முதல் முடிவு வரை படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நாடகத்தைப் பார்க்கிறோமோ அல்லது யு டியுப் காமெடி வீடியோக்களைப் பார்க்கிறோமோ என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. படம் பார்க்கிறோம் என்ற உணர்வு மட்டும் வரவில்லை. மணிகண்டனின் நடிப்பு மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது. பலவிதமான உணர்வுகள் வெளிப்படும் ஒரு கதாபாத்திரம். பழைய வீட்டை ரிப்பேர் பார்க்கச் சொல்லும் அப்பா, வட இந்தியா டூர் போக பணம் கேட்கும் அம்மா, கர்ப்பமான மனைவி, வேலை இழந்த பிரச்சனை என பலவற்றை சமாளிக்கும் ஒரு கதாபாத்திரம். உண்மையில் பல நடுத்தர, கீழ் நடுத்தர குடும்பங்களில் திருமணமான இளைஞர்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. அவர்களது நிலைமையை யதார்த்தமாக அப்படியே பிரதிபலித்திருக்கிறார் மணிகண்டன்.

மணிகண்டனின் காதல் மனைவியாக சான்வீ மேக்னா. இந்தக் காலத்தில் எஸ்சி என்று சொன்னால் அது படத்திற்கு ஒரு கூடுதல் கவனத்தைக் கொடுக்கும் என்று சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது. தேவையில்லாமல் ஒரு சாதிய சிக்கலை வசனங்கள் மூலம் மேலோட்டமாய் சொல்லி கடந்து போகிறார்கள். சான்வீ மேக்னா முதல் படம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்.

மணிகண்டனின் அக்கா கணவராக குரு சோமசுந்தரம். பலரது குடும்பங்களில் பந்தாவாக இருப்பார்கள் சில மாப்பிள்ளைகள். அப்படியான ஒரு கதாபாத்திரம், பொருத்தமாய் நடித்திருக்கிறார்.மணிகண்டன் அப்பாவாக ஆர் சுந்தர்ராஜன் யதார்த்தமாய் நடித்திருந்தாலும், அம்மாவாக நடித்திருக்கும் கனகம் பேசிப் பேசியே நோகடிக்கிறார். மணிகண்டனின் நட்பு வட்டத்தில் பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன் திவாகர் என சிலர். எப்போதும் குடித்துக் கொண்டே நகைச்சுவை என்ற பெயரில் பொறுமையை சோதிக்கிறார்கள்.

உணர்வுபூர்வமான சில காட்சிகளில் வைசாக் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. கோயம்பத்தூரின் பல இடங்களை நேரில் பார்ப்பது போன்ற ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் சுஜித் என் சுப்பிரமணியம்.

இடைவேளை வரை ஒரு சுவாரசியத்துடன் படம் நகர்கிறது. இடைவேளைக்குப் பின் என்னென்னமோ சொல்லி எங்கெங்கோ சுற்றி முடிக்க வேண்டுமே என திடீரென படத்தை முடித்துவிடுகிறார்கள். இப்படித்தான் படம் முடியப் போகிறது என்ற ஒரு யூகமும் நமக்குள் வந்துவிடுகிறது. பேச்சைக் குறைத்து செயலில் காட்டியிருக்கலாம்.

குடும்பஸ்தன் - இல்லாதவன்…

 

குடும்பஸ்தன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குடும்பஸ்தன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓