லவ்வர்,Lover
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பிரபு ராம் வியாஸ்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - மணிகண்டன், ஸ்ரீகவுரிப்ரியா
வெளியான தேதி - 9 பிப்ரவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 3/5

இன்றைய இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக ஐ.டி வேலையில் இருக்கும் இளைஞர்கள் இடையே இருக்கும் சிலரது காதலைப் பற்றி சொல்லியிருக்கும் படம். தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆண், தன் விருப்பத்திற்கு வாழ நினைக்கும் ஒரு பெண்; இவர்களுக்கு இடையிலான காதல், மோதல் ஆகியவைதான் இந்தப் படம். இயக்குனர் பிரபுராம் வியாஸ் உணர்வுபூர்வமான ஒரு காதல் கதையைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். அந்த உணர்வுகளை தங்களது சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்தி நம்மிடம் கடத்துகிறார்கள் நடிகர்கள், நடிகைகள்.


ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஸ்ரீகவுரிப்ரியா, காபி ஷாப் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என காத்திருக்கும் மணிகண்டன் இருவரும் கல்லூரியில் படித்த காலத்திலிருந்து ஆறு வருடங்களாய் காதலிப்பவர்கள். கவுரிப்ரியா தன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டுத்தான் செய்ய வேண்டும் என நினைப்பவர் மணிகண்டன். தனது அலுவலக நண்பர்களுடன் வெளியில் செல்வதை சொல்லாமல் கவுரிப்ரியா மறைப்பதுதான் இருவருக்கும் இடையிலான மிகப் பெரிய சண்டையாக அடிக்கடி வருகிறது. ஒரு கட்டத்தில் மணிகண்டனின் 'டார்ச்சர்' தாங்காமல் 'பிரேக் அப்' சொல்கிறார் கவுரிப்ரியா. ஆனால், விடாமல் துரத்துகிறார் மணிகண்டன். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தொடாத காதல், சொல்லாத காதல், பார்க்காத காதல், பழகிய காதல் என பல காதலின் அடுத்த கட்ட வளர்ச்சி சினிமாவிலும் மாறி வந்திருக்கிறது. இந்தப் படத்தின் காதல் இன்றைய '2 கே' காலத்து காதல். இப்படத்தின் காதலர்கள் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள். ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்க்கும் சில பெண்கள் கஞ்சா அடிப்பது, குடிப்பது, ஆண் நண்பர்களுடன் ஊரைச் சுற்றுவது என இருப்பதாகக் காட்டுவது சில பெற்றோர்களுக்கு தவிப்பை ஏற்படுத்தும்.

சந்தேக புத்தியா அல்லது தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற 'பொஸசிவ்' புத்தியா என படம் முழுவதும் காதலி கவுரிக்குக் கோபத்தை வரவழைத்துக் கொண்டே இருக்கிறார் மணிகண்டன். இப்படியும் சில கேரக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், சில இடங்களில் நமக்கும் அவர் மீது எரிச்சல் வரும் அளவிற்கு அந்தக் காட்சிகளும், அவரது நடிப்பும் உள்ளது. கொஞ்சம் ஓவராகப் போயிருந்தால் கூட அவரது கதாபாத்திரமும், நடிப்பும் வில்லத்தனமாக மாறியிருக்கும். அதைச் சமாளிக்க அவரது அம்மா கதாபாத்திரத்தை வைத்து சமாளித்திருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவின் மற்றுமொரு, நடிக்கத் தெரிந்த புதிய வரவு ஸ்ரீகவுரிப்ரியா. முதல் படத்திலேயே இப்படி ஒரு கனமான கதாபாத்திரம், அதைத் தாங்கும் திறமை ஆகியவற்றிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் கிடைக்கும். பல காட்சிகள் அவர் மீது அனுதாபத்தை வரவழைக்கிறது. இப்படியான காதலன் கிடைத்தால் இந்தக் காலத்தில் சீக்கிரமே பிரேக் அப் செய்துவிடுவார்கள். காதலியை அடிக்கடி அழ வைத்துப் பார்க்கும் காதலர்கள்தான் இந்தக் காலத்தில் அதிகம் இருக்கிறார்களோ.

மற்ற கதாபாத்திரங்களில் மணிகண்டன் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், கவுரிப்ரியாவுடன் வேலை பார்க்கும் கண்ணா ரவி, ஹரிஷ்குமார், ரினி, நிகிலா சங்கர் அவரவர் கதாபாத்திரங்களில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். இந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் இவர்கள் அனைவரின் நடிப்பும் சரியான சப்போர்ட்.


ஷான் ரோல்டன் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் உயிரோட்டம் தந்திருக்கிறது. அடிக்கடி பாடல்கள் வருகிறது, ஒரு சில பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் தன் பிரேமிற்குள் தக்கபடி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஷ் கிருஷ்ணா.

படம் முழுவதும் பல காட்சிகளில் போதைப் பொருட்களின் பயன்பாடு, மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது என வந்து கொண்டேயிருக்கிறது. சமீபத்திய சில படங்களில் இப்படியான காட்சிகள் அதிகம் வருவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. மணிகண்டன், கவுரிப்ரியா சண்டைகள் திரும்பத் திரும்ப 'ரிபீட்' ஆவது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

காதலிப்பது 'டார்ச்சர்', காதலிக்காமல் இருப்பதே 'பியூச்சர்' என பாடம் நடத்துகிறதா இந்த 'லவ்வர்'?

லவ்வர் - லெசன்…

 

லவ்வர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

லவ்வர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓