திருக்குறள்
விமர்சனம்
தயாரிப்பு : ரமணா கம்யூனிகேஷன்ஸ்
கதை : செம்பூர் கே.ஜெயராஜ்
இயக்கம் : ஏ.ஜே.பாலகிருஷ்ணன்
நடிகர்கள் : கலைச்சோழன், தனலட்சுமி, குணா பாபு, பாடினி குமார், சுகன்யா, சுப்பிரமணிய சிவா, கொட்டாச்சி, ஒ ஏ கே சுந்தர், சந்துரு, அருவி ஆனந்தன்.
வெளியான தேதி : 27.06.2025
நேரம் : 2 மணி நேரம் 18 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதைக்களம்
வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வரும் திருவள்ளுவர் திருக்குறளை எழுத தொடங்குகிறார். மேலும் குழந்தைகளுக்கு தமிழையும் பயிற்றுவித்து வருகிறார். இந்நிலையில் துரோகத்தால் ஆட்சியை பிடிக்கும் அரசருக்கும், வள்ளுவர் வாழ்ந்து வரும் ராஜ்ஜியத்திற்கும் இடையே போர் உருவாகிறது. போரில் வெற்றி பெற்றது யார்? திருக்குறளை வள்ளுவர் எழுதி முடித்தாரா? இல்லையா?அதன்பிறகு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
'காந்தி' மற்றும் 'காமராஜர்' போன்ற வரலாற்று மேதைகளின் வாழ்க்கையை உணர்வோடு திரைக்கதையாக்கியவர் இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். தற்போது திருவள்ளுவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார். திரைப்படம் தொடங்கியதும் நம்மை 2000 ஆண்டுகள் முந்தைய யுகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். செம்பூர் ஜெயராஜின் திரைக்கதை மற்றும் உரையாடல்கள் நெளிவு, சுளிவோடு நயமும் நிறைந்து இருக்கிறது. அரசியல் தாக்கம் ஏதும் இல்லாமல், உண்மையையும், அதேநேரம் உயர்ந்த சிந்தனையையும் வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அழகாக அமைத்திருந்தார்.
திருவள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன் மிகவும் மெல்லிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பல காட்சிகளில் அழகான நடிப்பை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுத்திருந்தார். அதேபோல் அவரது மனைவி வாசுகி கேரக்டரில் நடித்திருந்த தனலட்சுமி, பாண்டிய மன்னனாக நடித்துள்ள ஓஏகே சுந்தர், புலவராக வரும் கொட்டச்சி, பரிதியாக வரும் குணா பாபு உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் வள்ளுவர் காலத்தில் படமாக்கப்பட்டது போல் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இளையராஜா இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசை உயிரோட்டமாக அமைந்துள்ளது.
பிளஸ் & மைனஸ்
திருக்குறளில் நம் வாழ்க்கை தத்துவம் அனைத்தும் அடங்கும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு திரைப்படம் வாயிலாக காட்டி இருக்கிறார் இயக்குனர். படத்தின் முடிவில் வரும் போர்க்களக் காட்சிகள் மற்றும் மதுரை இலக்கியச் சங்கத்தில் திருவள்ளுவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை இயக்குநர் பாலகிருஷ்ணன் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு வெறும் நூலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக நம் அனைவரின் மனதிற்குள் நுழையும் வகையில் திரைப்படமாக கொடுத்திருக்கிறார். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைக்கு தேவையான கலை பொருட்கள் மற்றும் இடம், நடிகர்கள் தேர்வு ஆகியவற்றில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதோடு வசனங்கள் சங்க காலத்தை போன்றும் இல்லை, நவீன காலத்தைப் போன்றும் இல்லாமல் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. திரைக்கதை மற்றும் வசன உச்சரிப்புகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
' திருக்குறள்' - உணர வேண்டிய ஆன்மிகப் பயணம்.
திருக்குறள் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
திருக்குறள்
- இயக்குனர்