
குபேரா
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்
இயக்கம் - சேகர் கம்முலா
நடிகர்கள் - தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, கே.பாக்யராஜ், ஜிம் சர்பு
இசை - தேவி ஸ்ரீ பிரசாத்
வெளியான தேதி - 20.06.2025
நேரம் - 3 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் -3/5
கதைக்களம்
நேர்மையான சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனா செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். பொலிட்டிக்கல் பவருடன் மும்பையில் பெரிய தொழிலதிபராக இருக்கும் ஜிம் சர்பு, சிறையில் இருந்து நாகார்ஜுனாவை விடுவிக்கிறார். அதற்கு கைமாறாக தன்னிடம் உள்ள 50 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி தரும்படி சொல்கிறார். இதற்காக நாகார்ஜுனா ஒரு திட்டம் போட்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தனுஷ் உள்ளிட்ட 4 பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு போலியாக ஆவணங்களை தயார் செய்து அவர்கள் பெயரில் சுவிஸ் பேங்கில் கணக்கு தொடங்கி கருப்பு பணத்தை ட்ரான்ஸ்பர் செய்கிறார். அதன் பிறகு மீண்டும் அந்தப் பணத்தை இங்கு வெள்ளையாக மாற்றிவிட்டு ஒவ்வொருவராக தீர்த்து கட்டுகிறார். அதிலிருந்து தப்பிக்கும் தனுஷுக்கு ராஷ்மிகா உதவி செய்கிறார். ஒருபுறம் நாகார்ஜுனா ஆட்கள் தனுஷை வலைவீசி தேடத் தொடங்குகின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்தாரா? பத்தாயிரம் கோடியுடன் ஓடிய தனுஷ் முடிவில் குபேரர் ஆனாரா? என்பதே படத்தின் மீதி கதை.
பெரிய தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் செய்யும் ஊழல், வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் முதலீடு செய்து அதை வெள்ளையாக மாற்றுவது போன்ற கரண்ட் மேட்டர்களில் கை வைத்திருக்கார் சேகர் கம்முலா. அரசியல் பலத்துடன் பண பலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை சரியான திரைக்கதையுடன் படமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவை நடிக்க வைத்தது படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. இந்த படத்திலும் பிச்சைக்காரராகவும், பணக்காரராகவும் இரண்டு கேரக்டர்களிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.
குறிப்பாக அவரது பாடி லாங்குவேஜ் பல சீன்களை எலிவேட் செய்கிறது. அவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் நாகார்ஜுனா. ஒருவித கிரே ஷேடு கலந்த கேரக்டரில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நடுவில் பேலன்ஸிங்கான ஆக்டிங்கில் ஸ்கோர் செய்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் ஜிம் சர்பு பயத்தை கடத்துகிறார். அவருடைய தோற்றம் பல மும்பை பிரபலங்களை நினைவுபடுத்துகிறது.
நிகித் பொம்மியின் ஒளிப்பதிவில் ஹைதராபாத், திருப்பதி, மும்பை போன்ற நகரங்கள் அழகாக தெரிகின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. 3 மணி நேர படத்தின் பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்கிறார்.
பிளஸ் & மைனஸ்
குபேரா என்ற டைட்டில் ரோலில் நடித்துள்ள தனுஷ், படத்தில் மெயின் பில்லர் ஆக இருக்கிறார். ஏற்கனவே வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்த தனுஷ், குபேரா மூலம் அங்கு நங்கூரம் இட முயற்சித்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்கள் படத்தை பெரியளவில் கொண்டாட வேண்டும் என்பதற்காக நாகார்ஜுனாவை சரியான கேரக்டரில் போட்டு நியாயம் சேர்த்து இருக்கிறார் இயக்குனர். இவர்கள் இருவரோடு ராஷ்மிகா மந்தனாவும் அசத்தியிருக்கிறார். நாட்டை ஊழல் மூலம் சுரண்டும் பண முதலைகளை திரையில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா. ஆனால் படத்தின் நீளம் ரசிகர்களுக்கு சோர்வை தருகிறது. குறிப்பாக இடைவேளைக்கு முன்பு படத்தில் தேக்கம் தொடங்கி விடுகிறது. இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கும் திரைக்கதை மீண்டும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஸ்லோ ஆகிவிடுகிறது. இரண்டாம் பாதியை விளக்கமான கமர்ஷியல் கதையாக காண்பித்திருக்கிறார். இருபது நிமிட காட்சிகளை குறைத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
குபேரா - உன் பணம் என் பணம்
குபேரா தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
குபேரா
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
தனுஷ்
டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.