இட்லி கடை
விமர்சனம்
தயாரிப்பு: டான் பிக்சர்ஸ்
இயக்கம்: தனுஷ்
நடிப்பு: தனுஷ், ராஜ்கிரண், அருண்விஜய், நித்யாமேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ்
ஒளிப்பதிவு: கிரண் கவுசிக்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி: அக்டோபர் 1, 2025
நேரம்: 2.27 மணி நேரம்
ரேட்டிங்: 3
ஒரு சின்ன கிராமத்தில் தொழில் பக்தியுடன் இட்லி கடை நடத்துகிறார் அப்பா. அந்த இட்லியின் ருசிக்கு ஊரே அடிமை. வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் மகன், ஒரு கட்டத்தில் சொந்த ஊர் திரும்பி அப்பாவின் இட்லி கடையை கையில் எடுககிறார். அவர் ஊர் திரும்ப வேண்டிய அவசியம் என்ன? அப்பா மாதிரி மகனால் இட்லி கடையை வெற்றிகரமாக நடத்த முடிந்ததா? அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை இட்லி மாவுடன் எமோஷனல் கலந்து தனுஷ் இயக்கி, நடித்து கொடுத்திருக்கும் படம் 'இட்லி கடை'. அப்பாவாக நடித்தவர் வேறு யாரு நம்ம ராஜ்கிரண்தான், மகன் தனுஷ்.
தலைப்புதான் கதை. முழு கதையும் பத்துபேர் கூட அமர்ந்து சாப்பிட முடியாத அந்த சின்ன இட்லி கடையை சுற்றி நகர்கிறது. நான் கோடை விடுமுறைக்கு எங்க சொந்த ஊர் செல்லும்போது சாப்பிட்ட இட்லி கடை பற்றி நினைவுகளை, கற்பனை கலந்து கொடுத்து இருக்கிறேன் என்று இயக்குனராக படம் ஆரம்பிக்கும்போதே டைட்டில் கார்டு போட்டுவிடுகிறார் இயக்குனர் தனுஷ். ஸோ, இது அவரின் சொந்த கதை.
அப்பாவாக நடித்த ராஜ்கிரண் நம் ஊரில் பார்த்த பல ஓட்டல்கடைக்காரர்களை நினைவுப்படுத்துகிறார். காலையில் 3 மணிக்கு எழுந்து கடையை திறந்து, மாவு அரைக்கும் அவரின் தொழில் பக்தி, பாசிட்டிவ்வான கேரக்டர், நல்ல உணவு கொடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் உண்மையிலே சினிமாவை தாண்டி ரசிக்க வைக்கிறது. அவர் மனைவியாக வரும் கீதா கைலாசமும் பாசக்கார அம்மாவாக மனதில் நிற்கிறார். சின்ன வயது ராஜ்கிரணாக வரும் தமிழ், பிரிகிடா ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகளும் உணர்ச்சிபூர்வமானவை.
தனுஷே இயக்கி, நடிக்கும் படம், அவர் கேரக்டரில் ஏகப்பட்ட பில்டப் இருக்கும், நிறைய ஹீரோயிசம், ஆடல், பாடல், அதிரடி பைட் இருக்கும் என்று நினைத்தால், முருகன் என்ற அந்த கேரக்டருக்கு தேவையானதை மட்டும் செய்துவிட்டு, இயக்குனர் தனுஷ் தெளிவாக இருந்து இருக்கிறார். பாசக்காட்சிகளில், காதல் காட்சிகளில், பல எமோசன் காட்சிகளில் தான் பெரிய ஹீரோ என்பதை மறந்து, இயல்பாக அமைதியாக நடித்து இருக்கிறார்.
அவரின் ஓபனிங் காட்சி கூட சிம்பிள். அடுத்து பாங்காக்கில் அவர் பணியாற்றுவதாக கதை செல்கிறது. அங்கே தொழிலதிபர் சத்யராஜ், அவர் மகன் அருண்விஜய், சத்யராஜ் மகளை மணக்கப்போகும் தனுஷ் என கதை செல்ல, என்னடா இப்படி போகிறதே என்று யோசிக்கும்போது, கதை மீண்டும் தேனி கிராமத்துக்கு வந்து சூடுபிடிக்கிறது. பாங்காக் காட்சிகளில் தனுஷ் நடிப்பு, இயக்கம் ரொம்பவே சுமார். நிறைய இடங்களில் செயற்கைதனம்.
அப்பா இறந்தபின் சொந்த ஊர் வரும் தனுஷ் மீண்டும் இட்லி கடையை டேக்ஓவர் பண்ண, தங்கையின் திருமணம் நின்றதால் பாங்காக்கில் இருந்து தேனி கிராமம் வந்து வில்லன் அருண் விஜய் டார்ச்சர் கொடுக்க, மீதி கதை நகர்கிறது. இடையில் தனுஷ், நித்யாமேனன் காட்சிகள் க்யூட். நித்யாவின் சின்ன, சின்ன குறும்புகள், கோபம், அவர் பேசும் மொழி எல்லாமே படத்துக்கு பிளஸ்.
தனுசுக்கு உதவி செய்கிற கேரக்டரில் வரும் இளவரசு சீன்கள், வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர் குடும்பத்தில் சந்திக்கும் பிரச்னைகள் உருக்கம். ஆனாலும், பல கேரக்டர்கள் ஓவர் ஆக்டிங் செய்து படத்தை பின்னோக்கி இழுத்து இருக்கிறார்கள். சத்யராஜ் கூட, தொழிலதிபர் கேரக்டரில் எங்கேயும் ஜொலிக்கவில்லை. அவர் பேச்சு, கெட்அப் எல்லாமே 'நடிப்பு'. வில்லனாக வரும் சமுத்திரக்கனி நடித்து தள்ளுகிறார். ஏன், போலீசாக வரும் பார்த்திபனிடம் எதிர்பார்த்தது நிறைய. அவரையும் இயக்குனர் தனுஷ் சரியாக பயன்படுத்தவில்லை. ராஜ்கிரண் நண்பராக வரும், இட்லியை ருசி பார்க்கும் அந்த பெரியவர் கேரக்டர் செம.
வில்லத்தனமான வேடத்தில் வரும் அருண் விஜய் ஸ்டைலாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார், சண்டை போடுகிறார். ஆனால், அவரின் ஒரிஜினல் இமேஜ்க்கும், அந்த கேரக்டருக்கும் செட்டாகவில்லை. தனுசுக்கும், அவருக்குமான சண்டை, போட்டி அழுத்தமாக இல்லை. எதற்கு அருண் விஜய்? என்ற கேள்வியும் எழுகிறது. சாதாரண புதுமுக வில்லன், மும்பை நடிகரை அதில் நடிக்க வைத்து இருக்கலாமே? அவரின் கிளைமாக்ஸ் பனிஷ்மென்ட் மட்டும் புது விஷயம்.
ஜி.வி.பிரகாஷின் என்ன சுகம் பாடலில் மெலோடி ஈர்க்கிறது. என் பாட்டன் சாமி கதையுடன் இணைந்து உயிர்ப்புடன் இருக்கிறது. பின்னணி இசை ஓகே. கிரண் கவுசிக் ஒளிப்பதிவு தேனி கிராமத்தை, இட்லி கடை காட்சிளை, பாடல் காட்சிகளை அழகாக காண்பிக்கிறது. குல தெய்வ கோயில் மகிமை டயலாக், காந்தியின் அகிம்சை பாலிசி, ராஜ்கிரண் சம்பந்தப்பட்ட பாசிட்டிவ் சீன்கள், அப்பா, மகன் பாசம், சின்ன தொழிலாக இருந்தாலும் அதை பக்தியுடன், நேர்த்தியுடன் செய்ய வேண்டும் போன்ற இடங்களில் இயக்குனர் தனுஷ் திறமையை காண்பித்து இருக்கிறார்.
முதற்பாதியில் பாங்காக் சம்பந்தப்பட்ட காட்சிகள் போராடிக்கிறது. பின்னர், தனுஷ் சொந்த ஊர் திரும்பியதும் சூடு பிடிக்கிறது. ஆனால், இடைவேளைக்குபின் வழக்கமான சீன்கள், ஓவர் எமோஷன், சில சண்டைகாட்சிகளால் படம் இழுக்கிறது. அதிலும் தனுசுக்கு அடிபடுவது, ஆஸ்பிட்டல் சீன்கள், ஊர் மக்கள் போராடுவது போர். கிளைமாக்ஸ் இப்படிதான் அமையும் என எதிர்பார்த்தது நடக்கிறது. பலமான எதிராளி, வலுவான சண்டைக்காட்சிகள் இல்லாததது படத்தை பலவீனமாக்குகிறது. ஷாலிணி பாண்டே சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளிலும் அவ்வளவு செயற்கை தனம்.
ஆனாலும், ராஜ்கிரண் கேரக்டரின் பாசிட்டிவ் எண்ணம், தனுஷின் நடிப்பு, சின்ன இட்லி கடை பின்னணியிலான உணர்ச்சிபூர்வமாக, அழுத்தமான சீன்கள், சண்டை வேணாம், எல்லாம் நல்லா இருக்கணும். தொழிலை கடவுளை பார்ப்போம் என்ற சிந்தனை சிறப்பு. நம் சொந்த ஊர் நினைவுகள், அங்கே சாப்பிட்ட சின்ன ஓட்டல், அதன் ருசியை படம் நினைவுப்படுத்துகிறது. குடும்பத்துடன் பார்க்கலாம்.
இட்லி கடை - சுவையான இட்லி, கொஞ்சம் சூடு குறைவு
இட்லி கடை தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
இட்லி கடை
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
தனுஷ்
டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.
Subscription

















நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
ராயன்











