2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரி
இயக்கம் - வினோத்குமார்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - விஷால், சுனைனா, ரமணா
வெளியான தேதி - 22 டிசம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5


தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் இதுவரை வந்திருந்தாலும் இன்னம் சொல்லப்படாத கதைகள் நிறையவே இருக்கின்றது. வழக்கமான போலீஸ், ரவுடி மோதல் கதைதான் இந்த 'லத்தி'யிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் கொஞ்சம் 'மாத்தி' யோசிப்போமே என யோசித்திருக்கிறார் இயக்குனர் வினோத் குமார்.

போலீஸ் கதை என்றாலே கதாநாயகனை இன்ஸ்பெக்டர், அசிஸ்டென்ட் கமிஷனர், கமிஷனர், டிஎஸ்பி, எஸ்பி இப்படித்தான் காட்டுவார்கள். சாதாரண கான்ஸ்டபிளாக படத்தின் கதாநாயகனை, அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பவரைக் காட்டவும் ஒரு தைரியம் வேண்டும். அதை ஏற்று நடிக்கவும் ஒரு துணிச்சல் வேண்டும். அது இரண்டுமே இப்படத்தின் இயக்குனர் வினோத்துக்கும், கதாநாயகன் விஷாலுக்கும் இருந்திருக்கிறது.

மனைவி சுனைனா, மகன் என எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் சஸ்பென்ட் ஆகி இருக்கும் கான்ஸ்டபிள் விஷால். ஒரு உயரதிகாரியின் சிபாரிசில் மீண்டும் வேலைக்குச் சேர்கிறார். அந்த உயரதிகாரி கேட்டுக் கொண்டதற்காக பிரபல ரவுடியின் மகனான ரமணாவை தனது 'லத்தி'யால் லாடம் கட்டுகிறார். முகத்தை மூடி வைத்து அடித்தாலும் தன்னை அடித்தது விஷால் தான் என ஓரளவிற்குத் தெரிந்து கொள்கிறார் ரமணா. பின்னர் அது விஷால்தான் என்பதையும் உறுதி செய்து விஷாலை பழி வாங்கத் துடிக்கிறார். கட்டப்பட்டு வரும் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தில் விஷால், ரமணா நேரடி மோதல் உருவாகும் சூழல் வருகிறது. அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் இடைவேளை வரை புதுப்புதுக் காட்சிகளால் விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர். இடைவேளை வந்ததே தெரியவில்லை. அதன்பிறகுதான் படத்தை எப்படி நகர்த்துவது எனக் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். வழக்கமான போலீஸ், ரவுடி மோதல் என வைத்தே படத்தைக் கொடுத்திருக்கலாமோ என யோசிக்க வைத்துவிட்டார். இரண்டாம் பாதி முழுவதும் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தில் விஷால், ரமணா மோதலிலேயே முடிந்து போவது அலுப்பைத் தருகிறது. இடைவேளை வரை 'மாத்தி' யோசித்த இயக்குனர் இடைவேளைக்குப் பின்னர் இப்படி 'மாத்தி' யோசித்திருக்க வேண்டாம்.

ஹீரோயிசம் இல்லாத ஒரு படத்தில், கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருப்பது ஆச்சரியம்தான். பன்ச் டயலாக் பேசக் கூடிய பல காட்சிகள், ஹீரோயிசம் வெளிப்படக் கூடிய பல காட்சிகளை படத்தில் வைத்திருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் தவித்திருக்கிறார்கள். ஒரு இயல்பான போலீஸ் கதையாக நகர்த்தியிருக்கிறார்கள். விஷாலும், அந்த கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திற்கேற்றபடி 'செட்டில்டு' ஆக நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின்னர் ஒரு 500 பேரையாவது அடித்திருப்பார் போலிருக்கிறது. அவ்வளவு பேரையும் 'சும்மாவாக' சினிமாவிற்காக அடிப்பதற்குக் கூடத் தனிப் பயிற்சி வேண்டும். அதற்காக ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்னை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


விஷாலின் அன்பான மனைவியாக சுனைனா. இடைவேளை வரையில் சில காட்சிகளில் மட்டுமே 'கொஞ்சிப்' பேசிட வேலை. வில்லன்களாக அப்பா கதாபாத்திரத்தில் சன்னி, அவரது மகன் கதாபாத்திரத்தில் ரமணா. சன்னி தமிழ் சினிமாவுக்குப் புதியவர், சென்னையின் பிரபல தாதா என்ற கெத்தில் இருக்கிறார். அவரது மகனாக வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ரமணா. விஷாலுக்கு சரியான 'டப்' கொடுக்கிறார். இவர்களின் கையாளாக வினோத் சாகர். பிரபு, தலைவாசல் விஜய் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். விஷால் மகனாக லிரிஷ் ராகவ் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் படத்தில் அதிகப் பாடல்கள் இல்லை, அவை படத்திற்குத் தேவைப்படவும் இல்லை. பின்னணி இசையில் வழக்கம் போல தனி கவனம் செலுத்தியிருக்கிறார். பாலசுப்ரமணியம், பாலகிருஷ்ணா இருவரது ஒளிப்பதிவும் லைட்டிங்குகளுக்காகவே பேசப்படும். என்பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு, பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்கம் படத்தில் பரபரப்பாக அமைந்துள்ளது.

இடைவேளைக்கு முன் புதிதாக யோசித்த அளவிற்கு இடைவேளைக்குப் பின் இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் வேறு விதமான ஆக்ஷன் படமாக வந்திருக்கும்.

லத்தி - சக்தி

 

லத்தி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

லத்தி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓