ரெஜினா,Regina

ரெஜினா - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எல்லோ பியர் புரொடக்ஷன்
இயக்கம் - டொமின் டிசில்வா
இசை - சதீஷ் நாயர்
நடிப்பு - சுனைனா, நிவாஸ் ஆதித்தன்
வெளியான தேதி - 23 ஜுன் 2023
நேரம் - 1 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

பழி வாங்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ வந்திருக்கிறது. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு படம் இது. காதலனைக் கொன்றவர்களைத் தேடிப் பிடித்து காதலி பழிக்குப் பழி வாங்கி கொலைகள் செய்யும் கதைதான் இந்த 'ரெஜினா'.

சிறு வயதில் அப்பாவைக் கண்முன்னே கொல்லப்பட்டத்தைப் பார்த்தவர் சுனைனா. அதனால் பல கஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையில் எப்படியோ ஒரு நிம்மதியான இடத்திற்கு வருகிறார். அதற்குக் காரணம் அவருடைய காதல், காதலன். ஆனால், அப்படிப்பட்ட காதலனை வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றில் கொன்றுவிடுகிறார்கள். காதலனைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க காவல் துறையிடம் தொடர்ந்து சென்று கோரிக்கை வைக்கிறார். அங்கு அலைக்கழிக்கப்பட கடைசியில் சுனைனாவே களத்தில் இறங்குகிறார். காதலனைக் கொன்ற அந்தக் கொள்ளையர்களைத் தேடிப் பிடித்து கொல்கிறார். அது எப்படி நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

தமிழில் ஒரு சில படங்களின் மூலம் ஓரளவிற்குப் பெயர் பெற்ற சுனைனா, இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் அப்பாவியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடக்கிறார். அங்கு அவமானப்படுத்தப்படுகிறார். அவருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. தனக்கான நீதியைத் தானே தேடிக் கொள்ள அவரே புறப்படுகிறார். அதுவரையில் ஏதோ ஒரு மாறுபட்ட பழி வாங்கும் கதையைப் பார்க்கப் போகிறோம் என்று எதிர்பார்த்தால் படத்தின் திரைக்கதை தடம் மாறி எங்கெங்கோ பயணித்து ஒரு வழியாய் முடிகிறது.

திடீரென சுனைனா, கடற்கரை அருகில் ஒரு 'பார்'ஐ நடத்திக் கொண்டிருக்கும் ரித்து மந்த்ரா உடன் 'நெருங்கிப்' பழகும் போது நிறையவே அதிர்ச்சி வருகிறது. இது வேற மாதிரியான படமோ என சந்தேகிக்க வைக்கிறது. அதன்பின் அதுவும் ஒரு பழி வாங்கும் யுத்தி எனத் தெரிய வரும் போதுதான் கொஞ்சம் நிம்மதி வருகிறது. ரித்து மந்த்ராவை கொஞ்சமான கவர்ச்சிக்காக தேர்வு செய்திருக்கிறார்கள். தம் அடித்துக் கொண்டு, தண்ணி அடித்துக் கொண்டு வரும் பெண் கதாபாத்திரங்கள் சினிமாக்களில் அதிகம் வர ஆரம்பித்துவிட்டார்கள்.

ரித்து மந்த்ராவின் கணவராக நடித்திருப்பவர் நிவாஸ் ஆதித்தன். இவரை பிளாக்மெயில் செய்துதான் சுனைனா அவரது பழி வாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறார். சுனைனாவிடம் சிக்கிய எலியாக தவிக்கிறார் நிவாஸ். இவர்கள் மட்டுமல்லாது படத்தில் வேறு சில கதாபாத்திரங்களும் உண்டு. அவர்கள் எல்லாம் எதற்காக வருகிறார்கள், கதையில் அவர்களுக்கு என்ன முக்கியத்துவம் என்றெல்லாம் கேள்வி வருகிறது.

இயக்குனர் டொமின் டிசில்வா பரபரப்பான, மாறுபட்ட த்ரில்லர் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்கான திரைக்கதை இல்லாமல், அழுத்தமான காட்சிகள் இல்லாமல், தேவையற்ற கதாபாத்திரங்களுடன் தடுமாறியிருக்கிறார். சதீஷ் நாயர் பின்னணி இசை மட்டும் கொஞ்சம் பாராட்ட வைக்கிறது.

கிளைமாக்சுக்கு முன்பாக திடீரென அத்தனை 'டுவிஸ்ட்'களை படத்தில் கொடுக்கிறார்கள். அதற்கேற்றபடி முன்னரே திரைக்கதையை சரி செய்திருந்தால் அந்த 'டுவிஸ்ட்'களுக்கான அழுத்தம் நன்றாய் பதிவாகியிருக்கும். புது மாதிரியாக கதை சொல்கிறோம் என ரசிகர்களைக் குழப்பியதுதான் மிச்சம். வில்லன்களைத் தேடிப் போவது கடினமாக இருந்தாலும் அவர்களைப் பார்த்த பின் எளிதில் தீர்த்து விடுகிறார் ரெஜினா, எப்படி ?.

ரெஜினா - 'ரெட்'ஜினா…

 

ரெஜினா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ரெஜினா

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓