2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : பிரேவ்மேன் பிக்சர்ஸ்
இயக்கம் : அனல் அரசு
நடிப்பு : சூர்யாசேதுபதி, வரலட்சுமி, சம்பத், அபி நட்சத்திரா, தேவதர்ஷினி,
இசை : சாம் சி.எஸ்.
வெளியான தேதி : ஜூலை 4, 2025
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 2.5/5

தனது அண்ணனை கொன்ற எம்எல்ஏ சம்பத்தை, கொடூரமாக கொலை செய்ததால் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார் ஹீரோ சூர்யா சேதுபதி. அவரை போட்டு தள்ள டஜன் கணக்கில் அடியாட்களை அனுப்புகிறார் எல்எல்ஏ மனைவியான வரலட்சுமி. என்ன நடந்தது, இதுதான் பீனிக்ஸ் ; வீழான் படத்தின் கதை. இந்தியளவில் முன்னணி பைட் மாஸ்டரான அனல் அரசு இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். ஹீரோ சூர்யா சேதுபதி, விஜய்சேதுபதி மகன் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அனல் அரசு இயக்கும் படம் என்பதால் அவருக்கு பிடித்த ஆக் ஷன் பேக்ரவுண்டில் கதை நடக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சிறார் சிறை, வட சென்னை பின்னணியில் நகர்கிறது. படம் தொடங்கி இடைவேளை வரை சண்டை, துரத்தல், ரத்தம், கொலை என செல்கிறது. பிற்பாதியில் எம்.எல்.ஏ.,வை சூர்யா சேதுபதி கொல்ல காரணம், அண்ணன், தம்பி பாசம், மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டி, காதல், பழிவாங்கல், அரசியல் என இன்னும் சில விஷயங்களை சொல்கிறார் இயக்குனர்.

பைட் மாஸ்டர் படம் என்பதால் சண்டைக் காட்சிகளுக்கு எந்த குறையும் இல்லை. சிறார் சிறைக்குள்ளே, வெளியே, கோர்ட்டில் என ஏகப்பட்ட சண்டை, சேசிங் காட்சிகள். தான் சிறந்த பைட் மாஸ்டர் என்பதை நிரூபித்து இருக்கிறார் அனல் அரசு. அதிலும் வட இந்திய ரவுடிகள், ஹீரோ சண்டைக்காட்சி, அனல் பறக்கும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மாஸ். அதில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஹீரோ.

சரி, விஜய் சேதுபதி மகன் படமாச்சே? அவர் நடிப்பு எப்படி? முதற்பாதியில் அவர் சில வார்த்தைகள்தான் பேசுகிறார். ஆக் ஷனில் மட்டுமே தீவிரம் காண்பித்து இருக்கிறார். அதுவே ஏமாற்றமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் அவருக்கும், அண்ணனுக்குமான சீன், எம்எல்ஏ டீமுடன் மோதுகிற சீன் ஓகே. மற்றபடி பெரிதாக கவரவில்லை. சண்டைகாட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

அவர் அம்மாவாக வரும் தேவதர்ஷினி நடித்து தள்ளுகிறார். வில்லனாக வரும் சம்பத், வில்லி வரலட்சுமி, அரசியல்வாதி அஜய் ஜோஷ் என எல்லாருமே இயல்பை மீறி, நடித்து கொட்டுகிறார்கள். யாரும் மனதில் நிற்கவில்லை. சூர்யா சேதுபதி அண்ணன், அபிநட்சத்திரா காதல் மட்டும் ஆறுதல். முதல் படத்தில் ஹீரோவுக்கு லவ் இல்லை. அழகான பாடல் இல்லை. ஒரு குத்து டான்ஸ் மட்டுமே இருக்கிறது. அதுவும் பல படங்களில் பார்த்து சலித்தது. ஒரு அறிமுக ஹீரோ இப்படிப்பட்ட கதையில் நடிக்க சம்மதித்தது ஏன், முன்னணி நடிகரான அவர் அப்பா எப்படி ஓகே சொன்னார் என்ற சந்தேகம் வருகிறது.

வழக்கம்போல் வட சென்னையை தமிழ் சினிமா ரவுடிகளின் கூடாரமாக காண்பித்து இருக்கிறார்கள். மார்ஷியல் ஆர்ட்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் தெளிவு, ஒரு பரபரப்பு இல்லை. நரேன், ஹரீஷ் உத்தமன் வழக்கமான போலீசாக வந்து செல்கிறார்கள். படம் முழுக்க அத்தனை ரவுடிகள், அனைவரும் ஹீரோவிடம் அடி வாங்கியபடி ஓடுகிறார், ப்பா முடியலை. படத்தில் அரசியல்வாதியாக வரும் முத்துகுமார் பாடிலாங்குவேஜ், அவரின் கிண்டல்தனமான வசனங்கள், சிறை அதிகாரியாக வரும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயல்பான நடிப்பு மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. நாங்க முன்னேற கூடாதா என்ற வசனம் ஓகே. அதற்கான பின்னணி அழுத்தமாக இல்லை.

மகன் படம் என்பதால், விஜய் சேதுபதி வருவார். மாஸ் ஆக ஒரு இடத்தில் என்ட்ரி ஆவார், ஒரு பாடலிலாவது தோன்றுவார் என்று எதிர்பார்த்து இருந்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உன் வாழ்ககை, உன் கையில் என வேறு படத்தில் நடிக்கபோய்விட்டார் போல. சாம் சி.எஸ்சின் பின்னணி இசை ஓகே, பாடல் காட்சிகளில் விஷயம் இல்லை.

அவ்வளவு பெரிய சிறார் ஜெயிலில் இப்படியெல்லாம் கொலை முயற்சி நடக்குமா? உள்ளே பாதுகாப்பு போலீசார் இல்லையா? கிளைமாக்சில் சிறைக்குள் வந்து இத்தனைபேர் வந்து அட்டாக் பண்ண முடியுமா? ஒருவரால் அத்தனைபேரை சமாளிக்க முடியுமா? கதையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று இயல்பாக எழும் கேள்விகள் படத்துக்கு பெரிய மைனஸ்.

ஆக் ஷன் பிரியர்களுக்கு படம் கொஞ்சம் பிடிக்கலாம். விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு சூர்யா சேதுபதியை கொஞ்சம் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு சுமாரான படம்

பீனிக்ஸ் ; வீழான் : சண்டை போடுவதால் மட்டும் ஜெயிக்க முடியாது தம்பி

 

பீனிக்ஸ் வீழான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பீனிக்ஸ் வீழான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓