தி வெர்டிக்ட்,The Verdict

தி வெர்டிக்ட் - சினி விழா ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : அக்னி என்டர்டைன்மென்ட்
இயக்கம் : கிருஷ்ணா சங்கர்
நடிகர்கள் : வரலட்சுமி சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ்
வெளியான தேதி : 30.05.2025
நேரம் : 1 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

கதைக்களம்
2019, மே 20ம் தேதி அமெரிக்காவில் பணக்கார பெண்மணியான சுஹாசினி இறந்து விடுகிறார். மூச்சுத் திணறலுக்காக ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறி உயிரிழந்தார். அது இயற்கை மரணமா? கொலையா? என்று போலீஸ் சந்தேகிக்கிறது. இறப்பதற்கு முன்பு அங்கே இருந்த சுருதி ஹரிஹரன் போலீசின் சந்தேக வலைக்குள் சிக்கிக் கொள்கிறார். அவரின் கைரேகைகள் தான் சம்பந்தப்பட்ட இடத்தில் பதிவாகியுள்ளன. வேறு யாரின் மீதும் சந்தேகம் எழாத அளவிற்கு ஆதாரங்களோடு மாட்டிக் கொள்கிறார்.

கணவனை இழந்து தனியே வசித்து வந்த சுஹாசினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது ஸ்ருதி ஹரிஹரன் தான். அவர் மீது கொண்ட அன்பினால் சுஹாசினி, தனது 150 மில்லியன் டாலர் சொத்தை அவளுக்கு எழுதி வைத்திருந்தார். எனவே பணத்துக்காக ஸ்ருதி இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீஸ் நினைக்கிறது. மேலும் சுஹாசினி உதவிக்கு ஒரு வேலையாள் இருந்தார். அவரும் அந்த நேரத்தில் அங்கே இல்லை. ஆனாலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் ஸ்ருதிக்கு எதிராக இருக்கிறது. இந்த நிலையில் சுஹாசினியின் வழக்கறிஞர் வரலட்சுமி சரத்குமார் இந்த வழக்கில் வாதாட கோர்ட்டில் ஆஜராகிறார். சாட்சிகள் விசாரணைக்கு பிறகு நடுவர் மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஸ்ருதி நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனையடுத்து வழக்கில் இருந்து ஸ்ருதி விடுதலை ஆகிறார். ஆனாலும் வழக்கறிஞர் மாயா என்பவருக்கு ஒரு சந்தேகப் பொறி தட்டுகிறது. அவரின் சந்தேகம் பெரிதாகி இந்த வழக்கு வேறொரு திசைக்கு மாறுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? உண்மையான குற்றவாளி யார்? இந்த வழக்கில் ஸ்ருதியை சிக்க வைத்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தின் கதை அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் என்ற பகுதியில் நடக்கிறது. வெர்டிக்ட் என்றால் தீர்ப்பு என்று பொருள். இது ஒரு கொலை சார்ந்த விசாரணை என்கிற ரீதியில் கதை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா சங்கர். கோர்ட்டில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, கொலைப்பழியில் இருந்து அந்த கேரக்டர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு வேறு என்ன கதை இருக்க முடியும் என்று யோசித்தால், அதற்குப் பிறகு தான் படத்தின் பிரதான திருப்பங்களும் முடிச்சுகளும் இருக்கின்றன. கடைசி நிமிடம் வரை அந்தப் பரபரப்போடு பார்வையாளர்களுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார் இயக்குனர்.

படத்தில் பணக்காரப் பெண்மணியாக சுஹாசினி வயதான கேரக்டரில் நடித்துள்ளார். அவர் உட்கார்ந்த படியும், படுத்தபடியும் இருந்து கொண்டே நடித்து ஸ்கோர் செய்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட அவரது அனுபவ நடிப்பு தெரிகிறது. அவருடன் நெருங்கிப் பழகும் பெண்ணாக ஸ்ருதி ஹரிஹரன் வருகிறார். குற்றவாளியாக பல்வேறு தருணங்களை நல்ல நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வரலட்சுமி பளிச்சிடுகிறார். அவரது தோற்றமும் ஆண்மை கலந்த குரலும் அதற்குப் பக்கபலமாக உள்ளன. இன்னொரு வழக்கறிஞராக வரும் வித்யுலேகா ராமன், தனது கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார்.

மலருக்கு மலர் தாவும் பட்டாம்பூச்சியின் மனநிலை கொண்ட கேரக்டரில் வருண் நடித்து அசத்தியுள்ளார். பசுத்தோல் போர்த்திய புலி போன்ற சுபாவம் கொண்ட அந்தக் கதாபாத்திரத்தில் பிரகாஷ் மோகன் தாஸ் சிறப்பாக நடித்துள்ளார்.

அரவிந்த் கிருஷ்ணாவின் துல்லியமான ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு நல்ல காட்சி அனுபவத்தை தருகிறது . அதேபோல் ஆதித்யா ராவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

பிளஸ் & மைனஸ்
பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் பார்த்த நீதிமன்றக் காட்சிகளில் நீளமான ஆவேசமான வாதப், பிரதிவாதங்கள் செயற்கையாக இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறான வகையில் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றக் காட்சிகள் இருக்கின்றன. அந்த நடைமுறைகள் துல்லியமாக காட்டப்பட்டுள்ளன. படத்தின் ஆரம்பத்தில் வரும் நீதிமன்ற விவாத வசனங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கின்றன. தமிழில் சப்டைட்டில் போடப்பட்டாலும் அவற்றையும் தமிழில் பேச வைத்திருந்தால் புரிதலுக்கு எளிதாக அமைந்திருக்கும்.

'தி வெர்டிக்ட்' - நல்ல தீர்ப்பு

 

தி வெர்டிக்ட் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தி வெர்டிக்ட்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓