பறந்து போ
விமர்சனம்
தயாரிப்பு : ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : ராம்
நடிப்பு : சிவா, கிரேஸ்ஆண்டனி, மிதுல்ராயன், அஞ்சலி, அஜூவர்கீஸ்
இசை : சந்தோஷ்தயாநிதி
வெளியான தேதி : ஜூலை 4, 2025
நேரம் : 2 மணி 12 நிமிடம்
ரேட்டிங் : 3.5/5
எப்போதும் துறுதுறுவென இருக்கிற, அதிகம் அடம் பிடிக்கிற, நிறைய பேசுகிற, ஊர் சுற்ற ஆசைப்படுகிற ஒரு சேட்டைக்கார சிறுவனிடம் சிக்கி, அவன் அப்பாவும், அம்மாவும் என்னென்ன பாடுபடுகிறார்கள். இதுதான் ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தின் கதை. கிட்டத்தட்ட 6 ஆண்டு இடைவெளிக்குபின் அவர் இயக்கத்தில் வந்திருக்கிற படம்.
சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசிக்கிற சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதியினர் மகன் மிதுல்ராயன். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இஎம்ஐ, கடன் என நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்கள், பணம் சம்பாதிக்க கோவையில் நடக்கும் கண்காட்சியின் புடவை கடை வைத்து இருக்கிறார் கிரேஸ். சென்னையில் ஆர்கானிக் பொருள்கள் விற்கிறார் சிவா. வீட்டில் இருக்கும் மகனோ படு சுட்டி. அப்பாவை நச்சரித்து பைக்கில் ரோடு டிரிப் செல்கிறான். அப்போது என்ன நடக்கிறது என்பதை தனது பாணியில் இருந்து விலகி, காமெடி கலந்த புது ஸ்டைலில் கதையை நகர்த்தி இருக்கிறார் ராம்.
என்னது, ராம் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவா? என்று சந்தேகப்பட்டவர்கள், படம் பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள். தனது வழக்கமான காமெடி பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி கலந்து நடித்து இருப்பதாலும், நடுத்தர குடும்பத்து அப்பாவாக நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார் சிவா. மகன் கேள்விகளுக்கு பதில் சொல்வது, அவன் டார்ச்சரால் புலம்புவது, ரோடு டிரிப்பில் நிறைய அனுபவங்களை பெறுவது என பல இடங்களில் கலக்கி இருக்கிறார். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை சிவா ஓடுகிற ஓட்டம், மரத்தின் மீது ஏறி அடிக்கிற காமெடி, மகனுடன் விவாதம், செல்ல சண்டை என பாசக்கார அப்பாவாக வாழ்ந்து இருக்கிறார். வெல்டன் சிவா!
மலையாளத்தில் பல படங்களில் நடித்த கிரேஸ் ஆண்டனி, தமிழுக்கு வந்து இருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு புடவை கடை, போனில் பேசுவது என இருக்கிறார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் மாற்றம் வருகிறது. தங்கையை பார்த்து கண்கலங்குவது, தனது கடை ஊழியரை சந்தேகப்படும் சீன், பணத்தை மிச்சம் பிடிக்க அவர் செய்யும் விஷயம் அருமை. கிளைமாக்சில் காமெடி கலந்த ஓட்டம் மூலம் ஏகப்பட்ட இடங்களில் கை தட்டல் வாங்குகிறார். கணவரை டேய் கோகுல் என அழைக்கும் இடம், கிளைமாக்சில் தண்ணீர் குடிக்கும் இடங்கள் அல்டிமேட்.
சிவாவும், அவரின் பள்ளி பருவ தோழியான அஞ்சலி சந்திக்கும் சீன்கள்,வாவ். நிஜ வாழ்க்கையுடன் செட்டாகும் அஞ்சலி போர்ஷன் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அஞ்சலி கணவராக வரும் மலையாள நடிகர் அஜூவர்கீசின் அந்த ஓட்டல்கடைக்காரர் கேரக்டர் சோஷியல் மீடியாவில் பேசப்படும். என்னவொரு தியாக சீலர்.
சிறுவனாக வரும் மிதுல்ராயன், நம் குடும்பங்களில், பக்கத்து வீடுகளில் பார்க்கும் துறுதுறு சிறுவனாக கண்ணுக்குள்ளே இருக்கிறார். அவர் நடிப்பை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், அவனுக்கு விருதுகள் பல காத்திருக்கிறது. இவர்களை தவிர, சில சீன்களில் வரும் பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜாரவி, விஜய் ஆண்டனி அந்த எம்பரர் தாத்தா நடிப்பும், அவர்கள் கேரக்டரும் நச். வாத்து முட்டை, டைனோசர் முட்டை, அப்பாக்களின் குணம், மகனின் கேள்வி என பல இடங்களில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. என்.கே.ஏகாம்பரம் கேமரா, மதி எடிட்டிங், சந்தோஷ் தயாநிதியின் 19 பாடல்கள், மதன் கார்க்கி வரிகள் படத்துக்கு கூடுதல் படம். சிகரெட் பழக்கத்தை விட, ராம் வைத்திருக்கும் சீன்கள், அந்த பாடல், அந்த வரிகள் சூப்பர்.
சில குறைகள் இருந்தாலும், கொஞ்சம் ஆங்காங்கே போரடித்தாலும், நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை, பணத்துக்காக ஓடுகிற ஓட்டம், குழந்தைகளின் மனநிலை, எதிர்பார்ப்பு, அவர்களுக்காக பெற்றோர்கள் நேரம் செலவழிக்காதது, அன்றாட வாழ்க்கையில் இயற்கையை வாழ்க்கை ரசிக்காமல் இருப்பது, நகர வாழ்க்கையின் மறுபக்கம் என பல விஷயங்களை உட்பொருளாக, உன்னிப்பாக பேசுகிறது கதை. இன்னொரு தடவை பார்த்தால் நமக்குள் பல கேள்விகளை எழுப்பும் நேர்த்தியான திரைக்கதை
பொதுவாக ராம் இயக்கும் படங்களில் ஒருவித சோகம், கோபம், விரக்தி, துன்பியல் இருக்கும். பல காட்சிகள் மனதை பிழியும், படம் முடிந்துவிட்டு வரும்போது கண் கலங்குவோம். பறந்து போ, அதற்கு நேர்எதிர். படம் முழுக்க சிரிப்பு, சிரிப்பு, சிரித்துக் கொண்டே சந்தோஷமாக வெளியே வருகிற மாதிரியான திரைக்கதை. பறந்து போ படம் பார்த்துவிட்டு சில ஆண்கள் சிகரெட்டை விட்டால், பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரம் செலவழித்தால், குடும்பத்துடன் சின்னதாக டிரிப் கிளம்பினால் அதுவே படைப்புக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.
பறந்து போ - சிரித்து, ரசித்துவிட்டு போ