2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், தங்கம் சினிமாஸ்
இயக்கம் - எஸ்ஜே அர்ஜுன்
இசை - எட்வின் லூயிஸ் விஸ்வநாத், ஹரி எஸ்ஆர்
நடிப்பு - மிர்ச்சி சிவா, ஹரிஷா, கருணாகரன்
வெளியான தேதி - 13 டிசம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் இரண்டு பாகத் திரைப்படங்கள் வருவது வாடிக்கையான ஒன்றுதான். முதல் பாகத்தில் நடித்தவர்கள்தான் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள். ஆனால், சில இரண்டாம் பாகப் படங்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை மாற்றிவிடுகிறார்கள். இந்தப் படத்தில் அதே மாதிரியான கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு நடிகர்களை மாற்றியுள்ளார்கள். முதல் பாகத்தில் இருந்த ஒரு சிலர் மட்டுமே இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள்.

மாபெரும் வரவேற்பைப் பெற்ற முதல் பாகப் படங்களின் பெயரைக் கெடுக்கும்படியாக இரண்டாம் பாகப் படங்கள் வரக் கூடாது. ஆனால், பெரும்பாலான படங்கள் அப்படித்தான் வருகின்றன. இந்த இரண்டாம் பாகப் படத்தில் முதல் பாகத்தின் தரத்தில் பாதி கூட இல்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

மிர்ச்சி சிவா தலைமையிலான கூட்டணி ஆட்களைக் கடத்தி பணம் சம்பாதிப்பதைத் தொழிலாக வைத்திருக்கிறது. நிதியமைச்சர் கருணாகரன், தானாகவே சிவாவின் கடத்தலில் சிக்கிக் கொள்கிறார். நடக்க உள்ள தேர்தலில் கருணாகரன் தான் ஆன்லைன் மூலம் மக்களுக்கு வாக்குக்கு பணம் அளிக்க வேண்டும். அவர் கடத்தப்பட்டதால் அது தடைபடுகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முதல் பாகக் கதையையும் இதில் கொஞ்சம் சேர்த்து, கூடுதலாக அமைச்சர் கடத்தல், அடுத்து நடக்க உள்ள தேர்தல், கட்சித் தலைவரின் புதிய கட்சி, சிவா கூட்டத்தைத் தேடும் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் என படத்தில் என்னென்னவோ கிளைக் கதைகள் ஓடுகிறது. தொடர்ச்சியாக இதுதான் கதை, திரைக்கதை என சொல்ல முடியாத அளவிற்கு குழப்பி வைத்திருக்கிறார் இயக்குனர்.

மிர்ச்சி சிவா அவருக்கே உரிய ஒன் லைன் வசனங்கள் மூலம் மட்டும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். படத்தை அது மட்டும்தான் காப்பாற்றுகிறது. மற்ற விஜய் சேதுபதி நடித்ததில் கால் பங்கு கூட நடிக்க அவரால் முடியவில்லை. அப்படி மனதில் பதிந்த ஒரு கதாபாத்திரத்தில் சிவாவை நினைத்துப் பார்ப்பதே முடியாத விஷயமாக உள்ளது. முதல் பாகத்தில் சஞ்சிதா ஷெட்டி தனி கிளாமரில் அசத்தியிருந்தார். இந்தப் படத்தில் அவருக்குப் பதில் ஹரிஷா நடித்திருக்கிறார். சாரிஷா என்று சொல்லுமளவிற்குத்தான் அவரது நடிப்பு.

கல்கி ராஜா, கவி இருவரும் சிவாவின் கூட்டணியில் உள்ளவர்கள். கூடவே அவ்வப்போது அருள்தாஸ் சேர்ந்து கொள்கிறார். இந்தக் கூட்டணி குடித்துக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டும்தான் இருக்கிறது. படம் முழுவதும் திரையில் எச்சரிக்கை வாசகங்கள் தவறாமல் இடம் பெறும் அளவிற்கு இருக்கிறது.

நிதியமைச்சராக கருணாகரன், அவரது அப்பாவாக எம்எஸ் பாஸ்கர், முதல்வராக ராதாரவி, கட்சியின் நிறுவனராக சந்திரசேகர், முன்னாள் காவல் துறை அதிகாரியாக யோக் ஜபீ என பல கதாபாத்திரங்கள் வந்து போகிறார்கள்.

முதல் பாகத்தில் இருந்த மேக்கிங் ஸ்டைல் இதில் மொத்தமாக மிஸ்ஸிங். முதல் பாகத்தைப் போட்டு போட்டு பார்த்தாவது அதைப் போலவே இந்த இரண்டாம் பாகத்தையும் கொஞ்சமாவது உருவாக்க முயற்சித்திருக்கலாம். பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாம் சுமார் ரகம்தான்.

வெற்றி பெற்ற முதல் பாகத்தின் இரண்டாம் பாகம் என சொல்லிவிட்டு என்ன எடுத்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனநிலைதான் படம் முழுவதும் இருக்கிறது.

சூது கவ்வும் 2 - சும்மா இருங்கப்பு…

 

சூது கவ்வும் 2 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சூது கவ்வும் 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓