சிந்துபாத்
விமர்சனம்
நடிப்பு - விஜய் சேதுபதி, அஞ்சலி
தயாரிப்பு - கே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ்
இயக்கம் - எஸ்யு அருண்குமார்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி - 27 ஜுன் 2019
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள முன்னணி நடிகர்களில் கொஞ்சம் லாஜிக்கான சினிமாக்களில் நடிப்பவர் என்று பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. அவரும், இயக்குனர் அருண்குமாரும் இதற்கு முன் கூட்டணி சேர்ந்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த படங்களாக இருந்தன.
யதார்த்த மீறல்கள் இல்லாத படங்களைக் கொடுத்த அந்தக் கூட்டணி மூன்றாவதாக இணைந்த இந்த சிந்துபாத் படத்தை லாஜிக் மீறல்களுடன் நம்ப முடியாத காட்சிகளை வைத்து அவர்கள் மீதான நம்பிக்கையை சிதைத்துவிட்டார்கள்.
விஜய் சேதுபதியும், சிறுவன் சூர்யாவும் ஊரில் ஒன்றாக திருட்டு வேலைகளைச் செய்பவர்கள். மலேசியாவிலிருந்து ஊருக்குத் திரும்பி வந்த அஞ்சலியைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். மீண்டும் அஞ்சலி, மலேசியா செல்லும் போது ஏர்போர்ட்டில் அவருக்கு திடீர் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறார். இரண்டு நாளில் வருகிறேன் என்று சொன்ன அஞ்சலி, தாய்லாந்தில் எங்கோ சிக்கிவிட்டதாக விஜய் சேதுபதியிடம் போனில் பேசுகிறார். மனைவி அஞ்சலியைத் தேடி விஜய் சேதுபதி தாய்லாந்து செல்கிறார். அவர் மனைவியைக் கண்டுபிடித்து மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அப்படியே மாறிவிடுபவர் விஜய் சேதுபதி. இந்தப் படத்திலும் காது அதிகம் கேட்காதவராக நடித்திருக்கிறார். அஞ்சலியிடம் ரொமான்ஸ் பார்வை பார்க்கும் அந்த ஸ்டைலும், அஜித், விஜய் ஆகியோரின் பன்ச் டயலாக்கைப் பேச முயலும் காட்சியிலும் ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குகிறார். இடைவேளை வரை ஒரு யதார்த்தமான நமக்குப் பிடித்த விஜய் சேதுபதியைப் பார்க்கலாம். இடைவேளைக்குப் பின்னர் அவரை ராமாயணம் ராமர் போல காட்டுவார் என எதிர்பார்த்தால், மாடி விட்டு மாடி தாவும் அனுமார் போல காட்டியிருக்கிறார் இயக்குனர்.
நடிகர்களில் எப்படி விஜய் சேதுபதியோ, நடிகைகளில் அஞ்சலி. எந்தக் கதாபாத்திரமாக இருநதாலும் அதில் தன்னை பொருத்திக் கொள்வார். கொஞ்சம் உடல் இளைத்திருந்தாலும் நடிப்பில் இளைக்கவில்லை அஞ்சலி. விஜய் சேதுபதிக்கும், அஞ்சலிக்கும் ஜோடிப் பொருத்தம் அற்புதமாக உள்ளது. இவர்கள் இருவரையும் இன்னும் யாரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
விஜய் சேதுபதியின் தம்பி போன்று அவருடைய சொந்த மகன் சூர்யா. முதல் படம் என்றே சொல்ல முடியவில்லை. அப்பாவைப் போலவே யதார்த்த நடிப்பில் அசத்துகிறார். இவரையும் படம் முழுவதும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.
படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் பவர்புல்லான ஒன்று. அக்கதாபாத்திரத்தில் லிங்கா என்பவர் நடித்திருக்கிறார். அவருக்கு விஜய் சேதுபதியைத் துரத்துவது மட்டும்தான் வேலை. வேறு எந்த வில்லத்தனமும் செய்யவில்லை.
யுவனின் பின்னணி இசை வழக்கம் போல் ஓகே. ஆனால் பாடல்களில் கவனம் செலுத்தவில்லை. மலேசியா, தாய்லாந்து என்று கதை நகர்ந்தாலும் அதற்கான வெளிப்புறக் காட்சிகள் குறைவுதான்.
இடைவேளை வரை யதார்த்த பாணியில் கதையை நகர்த்திய இயக்குனர், இடைவேளைக்குப் பின் அப்படியே ஒரேயடியாக ஜம்ப் அடித்திருக்கக் கூடாது. அதற்குப் பின் வரும் காட்சிகள் எதிலும் துளி கூட யதார்த்தம் என்பதே இல்லை. மாறாக நம்ப முடியாத காட்சிகளில் நிறைந்திருக்கிறது. இது வேறு ஏதோ படங்களில் இருந்தால் பரவாயில்லை. ஆனால், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
அதிலும் 40 அடுக்கு மாடி உயரத்தில் இருந்து சூர்யா, டிரம் மூலம் பக்கத்தில் இருக்கும் மாடிக்கு தப்பிப்பதும், விஜய் சேதுபதி அதை நீளம் தாண்டுவது போல் சாதாரணமாகத் தாண்டிக் குதிப்பதும் ரஜினிகாந்த் படத்தில் கூட நடந்திருக்காது. பிறகு தாய்லாந்தையை ஆட்டிப்படைக்கும் ரவுடி வீட்டுக்குள் புகுந்து ஷீல்டுகளைத் திருடுவதும், பின்னர் அவரையே கொலை செய்வதும் காதில் பூந்தோட்ட வகையறா காட்சிகள்.
சிந்துபாத் - சிக்கல்
பட குழுவினர்
சிந்துபாத்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்