விடுதலை 2
விமர்சனம்
தயாரிப்பு - ஆர்எஸ் இன்போடெயின்மென்ட்
இயக்கம் - வெற்றிமாறன்
இசை - இளையராஜா
நடிப்பு - விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி
வெளியான தேதி - 20 டிசம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 3/5
2023ம் ஆண்டில் வெளிவந்த முதல் பாகத்தில் தீவிரவாதக் குழுவின் தலைவரான வாத்தியார் என்றழைக்கப்படும் பெருமாள் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுவது பற்றிய கதையைச் சொன்னார்கள். இன்று(டிச., 20) வெளியாகி உள்ள இந்த இரண்டாம் பாகத்தில் கைது செய்யப்பட்ட பெருமாளை விசாரணைக்கு அழைத்துச் செல்வது பற்றிய கதையைச் சொல்லி உள்ளார்கள்.
முதல் பாகத்தில் இருந்த பரபரப்பு, விறுவிறுப்பு இந்த இரண்டாம் பாகத்தில் ஆங்காங்கே மட்டும் வந்து போகிறது. கிளைமாக்ஸுக்கு முன்பாக ஒரு அரை மணி நேரம் மட்டும்தான் திரைக்கதையில் ஒரு பரபரப்பு இருக்கிறது. மற்றபடி இந்த இரண்டாம் பாகத்தில், வாத்தியாராக இருந்த விஜய் சேதுபதி, அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்காகப் போராடத் துவங்கி, பின் ஆயுதம் ஏந்தி தீவிரவாதச் செயலிலும் ஈடுபடுவது என முழுக்க முழுக்க அவரது பயோபிக்கைச் சொல்வதாகவே அமைந்துள்ளது.
முதல் பாகத்தில் கைது செய்யப்பட்ட விஜய்சேதுபதியின் கைது பற்றி தலைமைச் செயலாளர் ராஜீவ் மேனன் ரகசியமாகவே வைத்திருக்கிறார். முகாமிலிருந்து அவரை அழைத்து வருவதற்காக தனிப்படைத் தலைவரான சேத்தன் அடங்கிய குழு இரவு நேரத்தில் காட்டு வழியே பயணிக்கிறது. பயணத்தில் உடன் வரும் காவலர்களிடம் தனது வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறார் விஜய் சேதுபதி. ஒரு கட்டத்தில் ரகசியமாக வைக்கப்பட்ட அவரது கைது காலைப் பத்திரிகையில் வந்துவிடுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
'விடுதலை 2' திரைக்கதை முழுக்க விஜய் சேதுபதியே ஆக்கிரமித்திருக்கிறார். சாதாரண பள்ளி வாத்தியாராக இருந்து கல்வி கற்றுத் தருகிறார். ஊரில் பண்ணையார் மூலம் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் ஊர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரும் சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் அவரது பயணம் கட்சி, பொறுப்பு, ஆயுதம் என மாறுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் விஜய் சேதுபதியின் நடிப்பு மிக அழுத்தமாய் திரையில் பதிவாகி உள்ளது. அரசியல், சமூகம், அதிகாரம், நியாயம், அநியாயம் சார்ந்து நிறைய வசனங்கள். பக்கம் பக்கமாக பேசிக் கொண்டே இருக்கிறார். விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் காலம் கடந்தும் பேசப்படும்.
விஜய் சேதுபதியின் காதல் மனைவியாக மஞ்சு வாரியர். ஊரில் உள்ள சர்க்கரை ஆலை அதிபரின் மகள். இருந்தாலும் அப்பா, அண்ணன் ஆகியோரது அக்கிரமத்தை எதிர்க்கும் குணம் கொண்டவர். ஒரு அத்தியாயமாக அவர்களது காதல், திருமணம் வந்து போகிறது. அதன் பிறகு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் மஞ்சு.
முதல் பாகத்தின் திரைக்கதை சூரியைச் சுற்றி நகர்ந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அவரும் இருக்கிறார். ஆனால், விஜய் சேதுபதிக்கான முக்கியத்துவத்தில் அவர் காணாமல் போகிறார். இருந்தாலும் கிளைமாக்சை சூரி மீது முடித்து, அவரது கதாபாத்திரம் மீது ஒரு பெருமை சேரும்படி முடித்துவிட்டார் இயக்குனர் வெற்றிமாறன்.
விஜய் சேதுபதிக்கு அரசியல் கற்றுத் தரும் ஆசானாக கிஷோர். முதல் பாகத்தில் இல்லாத அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி முதல் பாகத்தில் வந்த ராஜிவ் மேனன், சேத்தன், கவுதம் மேனன் கொஞ்சமாக வந்தாலும் அவர்களது நடிப்பைப் பற்றிப் பேச வைத்திருக்கிறார்கள்.
படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் கதையோடு சேர்ந்து நகர்ந்து ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் வழக்கம் போல அசத்தியுள்ளார் இளையராஜா. அவருடைய முந்தைய படங்களை விடவும் இந்தப் படத்தில் ஒலிக்கும் இசை தனித்துத் தெரிகிறது. காடு, மேடு, மலை, இரவு என பயணிக்கிறது வேல்ராஜ் கேமரா.
முதல் பாகத்தில் சினிமா என்பதற்கான ரசனை நிறையவே இருந்தது. ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் சினிமா என்பதற்கான ரசனை மிகவும் குறைவே. பாடம் நடத்துவது போல ஆரம்பம் முதல் கடைசி வரை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். படம் பார்க்க வரும் இளைஞர்கள் எத்தனை பேருக்கு இந்த அரசியல், அதிகாரம் புரியும் என்பது சந்தேகமே.
விடுதலை 2 - அரசியல் அதிகாரம்
விடுதலை 2 தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
விடுதலை 2
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்