எல்2 : எம்புரான்
விமர்சனம்
தயாரிப்பு : ஆஷிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : பிருத்விராஜ் சுகுமாரன்
நடிகர்கள் : மோகன்லால், டொவினோ தாமஸ், பிருத்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யு சிங், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சர்வதேச நடிகர்களான ஜெரோம் பிளின், எரிக் எபோனி
இசை : தீபக் தேவ்
வெளியான தேதி : 27.03.2025
நேரம் : 2 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் : 3/5
கதைக்களம்
2019-ம் ஆண்டு வெளியான லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகம் 'எல்2: எம்புரான்'. முதல் பாகமான லூசிபர் படத்தின் கதையை முதலில் பார்க்கலாம். கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது ஐ.யூ.எப். இக்கட்சியின் தலைவர் பி.கே.ஆர் உடல்நலம் சரியில்லாமல் காலமாகிறார். பி.கே.ஆருக்கு ஒரு மகள் (மஞ்சு வாரியர்) மற்றும் மகன் (டொவினோ தாமஸ்) இருக்கிறார்கள். இவர்கள் இருவரைத் தாண்டி தன்னுடன் விசுவாசமாக இருக்கும் மோகன்லால் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் பி.கே.ஆர்.
இந்த நிலையில் மஞ்சுவாரியாரின் கணவரான விவேக் ஓபராய், தனது மாமனாரின் பதவியை பயன்படுத்தி போதைப் பொருள் கும்பலோடு சேர்ந்து கேரளாவில் போதைப்பொருள் சப்ளை செய்கிறார். இதனால் பிரச்சனை ஏற்படுகிறது அப்போது மோகன்லால், டொவினோ தாமஸை முதல்வர் பதவியில் அமர வைக்கிறார். அதோடு விவேக் ஓபுராய்யை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிறார். மோகன்லாலின் பாதுகாவலராக இருக்கும் பிருத்விராஜ் உடன் வெளிநாட்டுக்கு செல்கிறார். அதோடு முதல் பாகம் முடிந்தது. இனி இரண்டாம் பாகமான எல்2: எம்புரான் கதைக்கு வருவோம்.
குஜராத் மாநிலத்தில் நடக்கும் கலவரத்தின் போது அங்குள்ள ஒரு அரண்மனைக்கு ஆசைப்பட்டு அதிலிருந்த அத்தனை பேரையும் அபிமன்யு சிங் மற்றும் சுகந்த் கோயல் இருவரும் சேர்ந்து கொன்று குவிக்கின்றனர். அந்த கூட்டத்தில் சிறுவனாக இருந்த பிருத்விராஜ், அவரது தந்தை உதவியுடன் தப்பிக்கிறார்.
இந்த நிலையில் கேரளாவில் ஐ.யூ.எப் கட்சியின் தலைவராகி முதல்வர் பொறுப்பேற்ற டொவினோ தாமஸ், பணம் மற்றும் தேசிய அரசியலுக்கு ஆசைப்பட்டு தந்தையின் ஐ.யூ.எப் கட்சியை விட்டு விலகி அபிமன்யு சிங் உடன் சேர்ந்து புதிய கட்சி தொடங்குகிறார். அதோடு தனது சகோதரி மஞ்சுவாரியாரை கட்சிக்கு வரக்கூடாது எனவும் தடுக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்திரஜித் சுகுமாரன் மூலம் வெளிநாட்டில் இருக்கும் மோகன்லாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை வரவழைக்கின்றனர். மோகன்லால் வந்த பிறகு நடந்தது என்ன? டொவினோ தாமஸின் முதல்வர் பதவி என்ன ஆனது? மஞ்சு வாரியார் கட்சிக்கு வந்தாரா இல்லையா? தனது குடும்பத்தை அழித்த அபிமன்யு சிங்கை பழிதீர்த்தாரா பிருத்விராஜ்? என்பதே படத்தின் மீதி கதை.
முரளி கோபி எழுதிய கதைக்கு அழகான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி பாகங்களாக படத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன். லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக எல்2: எம்புரான் கதையை பிருத்விராஜ் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். அதேபோன்று விறுவிறுப்பான திரைக்கதையுடன், ஹாலிவுட் தரத்தில் படத்தை நேர்த்தியாக எடுத்துள்ளது சிறப்பு. மேலும் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி புதிய காட்சி அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளை மாஸாக படமாக்கி உள்ளார். ஹீரோயிசம் காட்டும் படம் என்பதால் மோகன்லால் வரும் காட்சிகளை செம மாஸாக காட்டி ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர். கிளைமாக்ஸில் மூன்றாம் பாகத்திற்கான லீடும் தந்து விடுகிறார். அதில் தான் மோகன்லால் குறித்த பிளாஷ்பேக் சொல்லப்பட உள்ளது.
முதல் பாகத்தில் ஸ்டீபன் கேரக்டரில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த மோகன்லால் இதில் குரோஷி அபிராம் கேரக்டரில் அசத்தியுள்ளார். சர்வதேச டான் ஸ்டைலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் காட்சிகள் அதகளம். சண்டைக் காட்சிகளிலும் அதிரடி காட்டி நடித்துள்ளார்.
அடுத்ததாக பிருத்விராஜ் கேரக்டர் முதல் பாகத்தை விட இதில் கொஞ்சம் அதிக நேரம் உள்ளது. அதோடு ரிவெஞ்ச் எடுக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பு பாராட்டும்படி உள்ளது. அரசியல்வாதியாக வரும் மஞ்சு வாரியார் கெத்தான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அரசியல் கட்சி தலைவராக மாறும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார். டொவினோ தாமஸ் கேஷுவலான் நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்கிறார்.
வில்லனாக நடித்துள்ள அபிமன்யு சிங் மிரட்டி இருக்கிறார். இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் வெஞ்சரமூடு, சுகந்த் கோயல் மற்றும் கிஷோர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். இவர்களோடு சர்வதேச நடிகர்களான ஜெரோம் பிளின், எரிக் எபோனி ஆகியோரின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
சுஜித் வாசுதேவன் ஒளிப்பதிவில் திரைப்படம் பிரம்மாண்டமாக உள்ளது. அற்புதமான லைட்டிங் செய்து படத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். தீபக் தேவின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசைக்கு சபாஷ் போடலாம்.
பிளஸ் & மைனஸ்
படத்தில் முதல் பாதி ரசிகர்களை சற்று நெளிய வைக்கிறது. எங்கெங்கோ செல்லும் திரைக்கதையால் டயர்ட் ஆகிவிடுகிறது. அதோடு குஜராத் கலவரம் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து சொல்லும்போது கதை தடுமாறுகிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் சுதாரித்துக் கொண்டு விறுவிறுப்பான கதையை சொல்லி படத்தை நிறுத்தியுள்ளார் இயக்குநர். சர்வதேச தரத்தில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படத்தை எடுத்திருப்பது கூடுதல் சிறப்பு. பல இடங்களில் மோகன்லாலை மாஸாக காட்ட வேண்டும் என்பதற்காக காட்சிகள் வைத்திருப்பது ஓவர் டோஸ் ஆக உள்ளது. முதலமைச்சரையும், மத்திய அரசை கட்டுப்படுத்தும் அதிகாரப் புள்ளியையும் அசால்டாக தூக்குவது என்பதெல்லாம் லாஜிக் மீறலாக தெரிகிறது.
எல்2 : எம்புரான் - நம்பி போகலாம்
பட குழுவினர்
எல்2 : எம்புரான்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
மோகன்லால்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.