மலைக்கோட்டை வாலிபன் (மலையாளம்),Malaikottai Vaaliban
Advertisement
3

விமர்சனம்

Advertisement

இயக்கம் : லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
இசை : பிரசாந்த் பிள்ளை
தயாரிப்பு : ஜான் மேரி கிரியேடிவ் & செஞ்சுரி பிலிம்ஸ்
நடிப்பு : மோகன்லால், சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி. தனிஷ் சேட் மற்றும் பலர்
வெளியான தேதி : 25 ஜனவரி 2024-01-26
நேரம் : 2 மணி 37 நிமிடங்கள்
ரேட்டிங் : 3/5

மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும், மோகன்லாலும் முதன் முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் இது. இந்த வித்தியாசமான காம்பினேஷனுக்காகவே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமும் கூட. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை இந்த படம் நிறைவேற்றி உள்ளதா ? பார்க்கலாம்.

மலைக்கோட்டை வாலிபன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் மோகன்லால் யாராலும் வீழ்த்த முடியாத மல்யுத்த வீரராக வலம் வருகிறார். தாய் தந்தை யாருமில்லாத அவருக்கு அவரது ஆசான் ஹரீஷ் பெராடி மற்றும் ஆசானின் மகனான தம்பியை போன்ற சின்னா இருவரும் தான் உறவுகள். ஊர் ஊராக மாட்டுவண்டியில் பயணம் செய்து தனது பராக்கிரமத்தை நிரூபிக்கும் மோகன்லாலை நடன ராணியான சோனாலி குல்கர்னி விரும்புகிறார். இன்னொரு பக்கம் சின்னாவுக்கும் இன்னொரு கிராமத்து பெண்ணுக்கும் காதல் ஏற்பட அந்த பெண்ணையும் தங்கள் பயணத்தில் இணைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சோனாலி தனது காதலை மோகன்லாலிடம் தெரிவிக்க அவரோ அதை ஏற்க மறுக்கிறார். சோனாலியின் பணிப்பெண்ணான திருநங்கை, மோகன்லால், சின்னாவின் காதலியை விரும்புவதால் தான் உன்னை ஏற்க மறுக்கிறார் என கோள் மூட்டுகிறார். அதற்கேற்றாற்போல் சின்னாவால் கர்ப்பமான அவனது காதலி அந்த சந்தோஷ செய்தியை முதன் முறையாக மோகன்லாலிடம் தான் சொல்கிறார். இதை பார்த்த சோனாலி உண்மையிலேயே மோகன்லாலுக்கும் சின்னாவின் காதலிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக நம்புகிறார்.

இந்த விஷயம் சின்னாவின் காதுகள் வரை செல்கிறது. இன்னொரு பக்கம் சோனாலியை அடைய முயற்சிக்கும் தனிஷ் சேட் என்பவர், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் மோகன்லால் மூலமாக தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கும் முயற்சியாக அவரை கொல்வதற்காக சமயம் பார்த்து காத்திருக்கிறார். அதேபோல தனது எஜமானியின் காதலை மோகன்லால் புறக்கணித்ததால் எஜமானிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய பணிப்பெண்ணான திருநங்கை தயாராக இருக்கிறார். இதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக இரண்டு உயிர்கள் பலியாகின்றன. இவர்களில் யார் அந்த இருவர் ? யார் காரணமாக யார் உயிரிழந்தார்கள் ? இதன் பின்னால் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வட மாநிலங்களில் நடப்பது போன்ற ஒரு கதை. மல்யுத்த வீரராக ஆஜானுபாகுமான தோற்றத்தில் ஏகப்பொருத்தமாக மோகன்லால். நடிப்பில் மட்டுமல்ல வழக்கம் போல சண்டைக்காட்சிகளிலும் அசத்துகிறார். அதேசமயம் இன்னும் கூடுதலாக சில சண்டைக்காட்சிகளை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி அவரை ஒரு வரலாற்றுக்கால மனிதராக வித்தியாசமான தோற்றத்தில் பார்ப்பதே புதிதாக இருக்கிறது.

நடன ராணியாக வரும் சோனாலி குல்கர்னி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸுக்கு முன்னதாக அவர் மூலம் கதையில் திருப்புமுறை ஏற்படுவது எதிர்பாராத ஒன்று. மோகன்லாலின் ஆசானாக ஹரீஷ் பெராடி நிஜமான மல்யுத்த ஆசானை நினைவூட்டும் விதமாக தோற்றத்திலும் நடிப்பிலும் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.

சின்னா கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரும் அவரது ஜோடியாக வரும் இளம்பெண்ணும் காதல் காட்சிகள் இல்லாத குறையை போக்குகிறார்கள். இவர்கள் இருவருக்கும் எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் இடைவேளைக்கு பிறகான கதையே இவர்களை மையப்படுத்தி தான் நகருகிறது. அதேபோல மோகன்லாலால் அவமானப்படுத்தப்பட்டு ஒரு பக்க மீசை, ஒரு பக்க தலைமுடியை இழந்து அவரை பழிவாங்க துடிக்கும் கன்னட நடிகர் தனிஷ் சேட் தனது வித்தியாசமான நடிப்பால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

படத்தின் முதல் பாதி முழுவதும் மோகன்லாலின் வீரதீர பராக்கிரமங்கள் குறித்த பில்டப் காட்சிகளாகவே ஓடி விடுகிறது. அதிலும் நாம் எதிர்பார்த்த அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் இல்லாதது மிகப்பெரிய குறை. அதேபோல இடைவேளைக்குப் பிறகு குடும்பக்கதையாக மாறுவது எதிர்பாராதது என்றாலும் அந்த கடைசி அரை மணி நேரம் விறுவிறுப்பாக செல்வதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். காட்சிகள் சுவாரஸ்யமின்றி நகர்வது போல சில சமயம் தோன்றினாலும் படம் என்னவோ வேகமாகவே நகர்கிறது.

வரலாற்று பின்னணி கொண்ட மென்மையான குறிப்பாக படம் முழுவதும் விரவிக்கிடக்கும் புல்லாங்குழல் இசையால் வருடியுள்ளார் இசையமைப்பாளர் பிரசாத் பிள்ளை. பல நூற்றாண்டுகள் முன்பான காலகட்டத்திற்கே தனது ஒளிப்பதிவால் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன். ஆயிரக்கணக்கில் துணை நடிகர்கள், அவர்கள் மத்தியில், மோகன்லால் ஆகியோரை வைத்து படமாக்கிய வைத்ததில் பிரமிக்கவும் வைக்கிறார்.

சிறிய ஹீரோ, பெரிய ஹீரோ என எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை மட்டுமே கதையாக மாற்றும், படமாக இயக்கும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி வழக்கம் போல இந்த படத்தையும் வித்தியாசமாகவே கொடுத்திருக்கிறார். மோகன்லாலுக்கும் அவரது திரையுலக பயணத்தில் இந்த படத்தில் நடித்தது கூட வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும். ஆனால் மலைக்கோட்டை வாலிபன் என்றதுமே ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இருவரும் சேர்ந்து மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்துள்ளனர்.

மலைக்கோட்டை வாலிபன் : குறளி வித்தை

 

பட குழுவினர்

மலைக்கோட்டை வாலிபன் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மோகன்லால்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓