
நண்பகல் நேரத்து மயக்கம் (மலையாளம்)
விமர்சனம்
தயாரிப்பு : மம்முட்டி கம்பெனி
இயக்கம் : லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
நடிகர்கள் : மம்முட்டி, ரம்யா பாண்டியன், பூ ராமு, ஜி.எம்.சுந்தர், நமோ நாராயணன் மற்றும் பலர்
வெளியான நாள் : 19.01.2023
நேரம் : 1 மணி 45 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
வித்தியாசமான கதைக்களங்களையும் மனிதர்களின் வித்தியாசமான குணாதிசயங்களையும் மையமாக வைத்து தொடர்ந்து இயங்கி வருபவர் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. இதுவரை பெரிய அளவில் பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி முதல் முறையாக மம்முட்டியை வைத்து இயக்கி இருப்பதாலும் மம்முட்டியே தனது சொந்த நிறுவனத்தில் இந்த படத்தை தயாரித்திருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு படம் துவங்கிய நாளிலிருந்து அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஈடுகட்டி உள்ளதா ? பார்க்கலாம்.
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு தனது மனைவி, மகன் மற்றும் உறவினர், நண்பர்களுடன் ஒரு வேனில் சுற்றுப்பயணம் செல்கிறார் மம்முட்டி. ஊர் திரும்பும் வழியில் நண்பகல் நேரத்தில் தமிழக எல்லையோரத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் வேன் வந்து கொண்டிருக்கும்போது திடீரென உறங்கிக் கொண்டிருக்கும் மம்முட்டி கண் விழித்து வேனை நிறுத்த சொல்கிறார். வேனில் இருந்து இறங்கி அங்கிருக்கும் பாதை வழியாக அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்தே செல்கிறார். அங்கே உள்ள ஒரு வீட்டிற்கு சென்றதும் தனது உடைகளை மாற்றிவிட்டு சாதாரண லுங்கி சட்டை அணிந்து கொண்டு, அந்த வீட்டில் நெடுநாள் உரிமை உள்ளவர் போல அனைவரிடமும் பேசுகிறார். ஒரு கட்டத்தில் அங்கு இருக்கும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். ஊர்க்காரர்களோ யாரோ ஒரு புதிய ஆள் வண்டியை திருடிக்கொண்டு செல்வதாக நினைத்து துரத்துகிறார்கள்.
இந்த நிலையில் மம்முட்டி சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் வேனில் உள்ளவர்கள் அவரைத்தேடி அந்த கிராமத்திற்கு வருகிறார்கள். கோவில், மதுக்கடை என எங்கெங்கோ சென்று சுற்றிய மம்முட்டி இருட்டும் நேரத்தில் மீண்டும் கிராமத்தில் உள்ள அந்த வீட்டிற்கு திரும்புகிறார். அவரை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்ட அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை ஊருக்கு கிளம்புமாறு அழைக்கிறார்கள். அவரோ நீங்கள் யார் என கேட்டு அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். நான் இந்த கிராமத்துக்காரன், என்னை எதற்காக நீங்கள் அழைக்கிறீர்கள் என கிராமத்தில் உள்ளவர்களின் பெயர்களை கூற கிராமத்தில் இருப்பவர்களுக்கும் அதிர்ச்சி. இதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
மம்முட்டி யார் ? எதற்காக திடீரென அவர் தான் யார் என்பதை மறந்து தனக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு ஊரைச் சேர்ந்த மனிதராக நடந்து கொள்கிறார் ? மீண்டும் அவர் பழையபடி மாறினாரா இல்லையா என்பதற்கு பேண்டஸி கோட்டிங் கொடுத்து முடித்து வைத்திருக்கிறார் இயக்குனர் ஜோஸ் பள்ளிசேரி.
ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் இயக்குனர் என்பதை இந்த படத்திலும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி மீண்டும் நிரூபித்துள்ளார். படம் துவங்கியதில் இருந்து வேனில் ஊர் திரும்பும் காட்சி வரை வேறு ஏதோ நடக்கப்போகிறது என்று நம்மை யூகிக்க வைத்துவிட்டு, நாம் யூகிக்க முடியாத ஒரு திருப்பத்தை கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
கோவில் வழிபாட்டுக்கு சென்று திரும்பும் ஒரு சாதாரண கேரள மனிதராகவும் அதேபோல ஒரு தமிழக கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிய மனிதராகவும் என இரண்டு வித கதாபாத்திரங்களிலும் மம்முட்டி அழகாக அண்டர்பிளே செய்து நடித்துள்ளார். படத்தில் அவர் பேசும் வசனங்கள் மொத்தமே நான்கு பக்கங்களுக்குள் தான் இருக்கும். மற்றபடி பல காட்சிகளிலும் தனது நடிப்பாலேயே கதையை தாங்கிப் பிடித்திருக்கிறார் மம்முட்டி. அதிலும் ஊரை விட்டு போகமாட்டேன் என வீதியில் படுத்து அடம்பிடிக்கும் காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார்.
இந்த படத்தில் மலையாள முகங்களை தாண்டி தமிழ் நடிகர்களான ரம்யா பாண்டியன், பூ ராமு, ஜிஎம் குமார், நமோ நாராயணன், ராம்ஸ் என பலரும் நடித்திருப்பது மற்றும் தமிழக கிராமத்தில் கதை நிகழ்வது என எல்லாமே ஒரு தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வையே ஏற்படுகிறது.
ரம்யா பாண்டியனுக்கு சில காட்சிகளில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தாலும் வசனம் எதுவும் பேசாமல் முகபாவங்களிலேயே தனது விதம்விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு தமிழ்ப்படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என யாரும் இல்லை. படத்தில் எங்குமே புதிய பாடல்களோ, பின்னணி இசையோ பயன்படுத்தப்படவில்லை. அதேசமயம் படத்தில் முக்கால்வாசி காட்சிகளின் பின்னணியில் தமிழ் படங்களின் பாடல்களும் வசனங்களும் ஒலிக்கும் விதமாக ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் லிஜோ ஜோஸ். பெரும்பாலான காட்சிகளில் படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை, பின்னணியில் டிவி, ரேடியோவில் அதிக சத்தத்தில் ஒலிக்கும் வசனங்கள் சரியாக கேட்க முடியாமல் செய்து விடுவது மிகப்பெரிய குறை. படம் முழுவதும் அதே பாணியை பின்பற்றி இருப்பது ஒரு கட்டத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
விஷயம் புதிது என்றாலும் இதெல்லாம் ஒரு கதையா என்றோ அல்லது இப்படியும் கூட கதை சொல்லலாமா என்றோ கலவையான எண்ணத்தை படம் பார்த்துவிட்டு வெளி வருவோர் மனதில் நிச்சயம் இந்த படம் ஏற்படுத்தும்.
நண்பகல் நேரத்து மயக்கம் : எனக்குள் ஒருவன்.. ஆனால் நான் அவன் இல்லை..
பட குழுவினர்
நண்பகல் நேரத்து மயக்கம் (மலையாளம்)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்