டர்போ (மலையாளம்),Turbo

டர்போ (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : மம்முட்டி கம்பெனி
இயக்கம் : வைசாக்
இசை : கிறிஸ்டோ சேவியர்
நடிகர்கள் : மம்முட்டி, அஞ்சனா ஜெயபிரகாஷ், சபரீஷ் வர்மா, சுனில், ராஜ் பி.ஷெட்டி, கபீர் துஹான் சிங், திலீஷ் போத்தன், பருத்திவீரன் சரவணன், நமோ நாராயணன், அருள்தாஸ்
வெளியான தேதி : 23 ஏப்ரல் 2024
ஓடும் நேரம் : 2 மணி 35 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

புலிமுருகன் என்கிற வெற்றி படத்தை கொடுத்த, மம்முட்டியை வைத்து ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மம்முட்டி மீண்டும் நடித்துள்ளார் என்பதால் அதிகபட்ச எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் டர்போ. அந்த எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு ஈடு கட்டி உள்ளது பார்க்கலாம்.

கேரளாவில் தன்னுடைய ஊரில் எப்போதும் அடிதடி செய்து பரபரப்பிலேயே இருக்கும் மம்முட்டி தனது நண்பர் சபரீஷ் வர்மாவுக்காக அவரது காதலி அஞ்சனா ஜெயபிரகாஷை கடத்தி வருகிறார். வந்த இடத்தில் காதலனே தன்னை யார் என்று அறியாதது போல வீட்டார் முன் நடிக்க அவன் மீது கோபப்பட்டு சென்னைக்கு கிளம்புகிறார் அஞ்சனா. ஆள் கடத்தல் குற்றத்திற்காக மம்முட்டியை போலீஸார் தேடுகின்றனர். சென்னையில் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்க்கும் அஞ்சனாவை மீண்டும் கேரளாவிற்கு அழைத்து வந்து அவரது குடும்பத்திடம் ஒப்படைத்து போலீஸ் வழக்கில் இருந்து விடுபட நினைக்கிறார் மம்முட்டி.

ஆனால் அஞ்சனா மறுக்கவே, சென்னையிலேயே மம்முட்டியும் தங்குகிறார். இதற்கிடையே இன்னொரு தனியார் வங்கியில் வேலை பார்க்கும் சபரீஷ் வர்மா தனது வங்கியில் நடக்கும் மிகப்பெரிய மோசடி ஒன்றை கண்டுபிடிக்கிறார். அந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கும் தன்னுடைய காதலியிடம் சமாதானம் ஆவதற்கும் முயற்சிக்கும் நிலையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டு, அதையும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஜோடித்து வழக்கை முடிக்கின்றனர். அவருடன் பணிபுரிந்த சக பெண் ஊழியர் மூலமாக இந்த விபரம் மம்முட்டிக்கு தெரிய வருகிறது.

இதன் பின்னணியில் மிகப்பெரிய தாதாவான ராஜ் பி.ஷெட்டி இருப்பதும் இந்த உண்மை தெரிந்த இன்னொரு நபரான அஞ்சனாவை அவர்கள் கொலை செய்ய துடிப்பதும் தெரிய வருகிறது. அது மட்டுமல்ல இப்படி வங்கி மூலமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய சதி வேலையை செய்ய அவர் முயற்சிப்பதும் தெரிய வருகிறது. தன்னை எதிர்க்கும் நபர்களை எல்லாம் உடனடியாக கொன்று தீர்க்கும் ராஜ் பி.ஷெட்டியிடம் இருந்து அஞ்சனாவை மம்முட்டி காப்பாற்றினாரா ? இந்தப் போராட்டத்தில் இன்னும் வேறு என்ன இழப்புகளை சந்திக்கிறார் என்பது மீதிக்கதை.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே கதை சென்னையில் மையம் கொள்வதுடன் மம்முட்டியும் அஞ்சனாவும் ஏதோ கால எந்திரத்தில் ஏறி தமிழ் படத்திற்குள் நடிக்க வந்து விட்டார்களோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு அக்மார்க் கேங்ஸ்டர் அரசியல் தமிழ் படமாகவே இது உருவாகி இருக்கிறது. அந்த அளவிற்கு படத்தில் மம்முட்டி, அஞ்சனா உள்ளிட்ட ஒரு சில கதாபாத்திரங்கள் தவிர்த்து படத்தில் நடித்துள்ள அனைவருமே தமிழில் தான் பேசுகிறார்கள். அதேபோல படம் முழுவதும் பிரபலமான தமிழ் நட்சத்திரங்கள் ஏராளமான பேர் நடித்துள்ளனர்.

மம்முட்டி ஏற்கனவே பலமுறை செய்து நமக்கே சலித்துப்போன ஆக்ஷன் ஹீரோ அவதாரம் தான். படத்தின் இடைவேளை வரை சாதாரணமாக பெரிய அளவில் திருப்பங்கள் எதுவும் இல்லாமல் செல்கிறது. இடைவேளைக்குப்பின் மம்முட்டியின் ஆக்ஷன் அவதாரம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக பஸ் சண்டை காட்சி. போலீஸ் ஸ்டேஷன் சண்டை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டை இவை மூன்றும் முதல் பாதியில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை ஓரளவுக்கு ஈடு கட்டுகின்றன.

மம்முட்டிக்கு இணையாக படம் முழுவதும் அதிக அளவு திரையில் தோன்றும் அஞ்சனா ஜெயப்பிரகாஷுக்கு காதலனுடன் கூடல், எதிரிகளுடன் வாக்குவாதம் எதிரிகளுக்கு பயந்து மம்முட்டியுடன் ஓட்டம் என கமர்சியல் கதாநாயகிகளுக்கான அத்தனை வேலைகளையும் சரியாக செய்திருக்கிறார். மம்முட்டிக்கு உதவும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில்,, மிகப்பெரிய தாதா போல பில்டப் கொடுத்து காமெடியனாக மாறுவது சரியான கலாட்டா.. வில்லனாக கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி.. வில்லனுக்கு ஏற்ற தோற்றம் என்றாலும் கூட ஒரு மிகப்பெரிய தாதாவாக இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அஞ்சனாவின் காதலனாக வரும் சபரீஷ் வர்மா உண்மையைக் கண்டுபிடிக்கப் போராடி காதலியிடம் மீண்டும் பேச முடியாமலேயே சாவை தழுவும்போது பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார். ராஜ் பி ஷெட்டியின் வலது கை அடியாளாக பாலிவுட் நடிகர் கபீர் சிங்க் ஓகே. தமிழக முதல்வர் கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன், அவரது அமைச்சர்களாக பி.எல் தேனப்பன், போஸ்டர் நந்தகுமார், போலீஸ் அதிகாரியாக அருள்தாஸ் என பல தமிழ் நட்சத்திரங்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியர் மம்முட்டிக்கான பில்டப் காட்சிகளில் பின்னணி இசையில் கைவரிசை காட்டியுள்ளார். கிளைமாக்ஸ் சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா இரு மடங்கு உழைப்பை கொடுத்துள்ளார்.

லைப் டைம் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து வருவார்கள். மீண்டும் அதேபோல தீனி போட்டாக வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு உண்டு. இயக்குனர் வைசாக்கும் புலி முருகன் என்ற கமர்சியல் ஆக்ஷன் படத்தைக் கொடுத்தவர் என்பதால் அதில் பாதி அளவாவது இந்த படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் என முயற்சித்திருக்கிறார். ஆனால் வழக்கமான கதை, பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, அவருக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கின்றன. சரியாக சொல்ல வேண்டுமென்றால் தூள் படத்தை மீண்டும் ஒருமுறை மலையாளத்தில் பார்த்த உணர்வு தான் ஏற்படுகிறது.

அதேசமயம் இடைவேளைக்குப் பிறகு வரும் ஆக்ஷன் காட்சிகளின் மூலம் அதை ஓரளவு சரிக்கட்டி இருக்கிறார் இயக்குநர் வைசாக். அஞ்சாம் பாதிரா என்கிற விறுவிறுப்பான படத்தை கொடுத்த இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்தப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்து படத்தை முடித்திருப்பதை பார்க்கும்போது இரண்டாம் பாகம் வேறு வருமா என்கிற அயர்ச்சியும் ஏற்படுகிறது.

டர்போ : கடுகு பெருசு.. காரம் குறைவு..

 

பட குழுவினர்

டர்போ (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மம்மூட்டி

மலையாள திரையுலகினர் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுவர் மம்மூட்டி, 1951-ம் ஆண்டு செப்., 7ம் தேதி, கோட்டயம் அருகே உள்ள வைகோமில் முகமது குட்டியாக பிறந்தவர். சினிமாவுக்காக மம்மூட்டி என பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சல்பாத் என்ற மனைவியும், சுருமி, துல்கர் சல்மான் என்ற மகனும் உள்ளார். தற்போது இவரது மகனான துல்கர் சல்மானும் நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.

மேலும் விமர்சனம் ↓