நடிகர்கள் : மம்முட்டி, ஜெய், மஹிமா நம்பியார், பூர்ணா, ஜெகபதி பாபு, ஆர்கே சுரேஷ், நெடுமுடி வேணு, சரண்ராஜ், நரேன் மற்றும் பலர்.
கதை : உதயகிருஷ்ணா
ஒளிப்பதிவு : ஷாஜி குமார்
இசை : கோபிசுந்தர்
இயக்கம் : வைசாக்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் படமான 'போக்கிரி ராஜா'வின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இந்த 'மதுர ராஜா'. முதல் பாகத்தை மிஞ்சும் விதமாக இது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறதா பார்க்கலாம்.
கேரளாவில் தனித்தீவு போல உள்ள ஒரு பகுதியில் தனி ராஜாங்கம் நடத்துகிறார் ஜெகபதி பாபு. அங்கே இருக்கும் பள்ளி அருகில் மதுபானக்கடை நடத்தி குழந்தைகளுக்கு இடைஞ்சல் தருகிறார்கள் அவரது ஆட்கள். இதை விசாரிக்க பள்ளியை நடத்தும் நிறுவனம், மம்முட்டியின் தந்தையான நெடுமுடி வேணுவை அனுப்பி வைக்கிறது. ஆனால் அவரை மிரட்டி பொய்யான அறிக்கை கொடுக்க வற்புறுத்துகிறார்கள்.
இந்த நேரத்தில் மம்முட்டியின் வளர்ப்பு தம்பியான ஜெய் அந்த ஊருக்கு வந்து அவர்களை தட்டிக்கேட்கிறார். அவரையும் பொய்வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறார்கள். இப்போது மதுர ராஜாவான மம்முட்டியே, தனது படை பரிவாரங்களுடன் அந்தத் தீவுக்கு வந்து கோதாவில் குதிக்கிறார் அங்கிருக்கும் மதுபானக்கடைகளை மூட வைக்கிறார். இந்தநிலையில் ஜெய்யும் அதே தீவில் உள்ள மகிமாவும் காதலிக்க அவர்களை திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்கிறார் மம்முட்டி.
இந்த நேரத்தில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வர, அதில் வேட்பாளராக நிற்கும் ஜெகபதி பாபுவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுகிறார் மம்முட்டி. தனது சாம்ராஜ்யத்தையே தரைமட்டமாக்கிய மம்முட்டியை பழிவாங்க விபரீத முடிவு எடுக்கிறார் ஜெகபதிபாபு. அது என்ன முடிவு..? அவரது திட்டத்தை மம்முட்டி முறியடித்தாரா என்பது கிளைமாக்ஸ்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் படத்தை பார்த்தவர்களுக்கு இந்த இரண்டாம் பாகத்தை பார்க்கும்போது மம்முட்டியின் தோற்றத்தில் எந்தவித மாறுதலும் இல்லாமல் அப்படியே இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம் தரும். இன்டர்வெல், கிளைமாக்ஸ் என இரண்டு இடங்களில் தனி ஒரு ஆளாக சண்டைக்காட்சிகளிலும் அதிரவைக்கிறார் மம்முட்டி. வழக்கம் போல தப்பும் தவறுமாக அவர் ஆங்கிலம் பேசுவதையே மொத்தப்படத்திற்கும் நகைச்சுவை காட்சியாக மாற்றியுள்ளார்கள். அதனால் சலீம் குமார், அஜு வர்கீஸ் ஆகியோரின் காமெடி அவ்வளவாக எடுபடாமல் போய்விடுகிறது.
இன்னொரு கதாநாயகனாக ஜெய். முதன்முறையாக மலையாளத்தில் நுழைந்திருக்கிறார். சண்டைக்காட்சி, சன்னி லியோனுடன் ஐட்டம் டான்ஸ் என அவருக்கான எந்த முக்கியத்துவமும் குறையாமல் சகலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.. சரியாக செய்திருக்கிறார்.. இனி மலையாளத்தில் இவரை தேடி நிறைய வாய்ப்புகள் வரலாம்.
தென்னிந்திய சினிமாவிற்கே காஸ்ட்லியான ஹைடெக் வில்லனாக வலம் வரும் ஜெகபதி பாபு இந்த படத்திலும் வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்பு புலிமுருகன் படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட வலுவான கதாபாத்திரத்தை இந்த படத்தில் கொடுக்கத் தவறி இருக்கிறார் இயக்குனர் வைசாக். நாய்களை ஏவி தனது எதிரிகளை அவர் கொல்லும் பாணி பழைய படங்களில் பார்த்ததுதான் என்றாலும் பதைபதைக்க வைக்கிறது.
படத்தில் மஹிமா நம்பியார், பூர்ணா, அனுஸ்ரீ ரேஷ்மா ராஜன் என ஒன்றுக்கு நான்காக கதாநாயகிகள் இருந்தாலும் ஆண்களுக்கு சிம்மசொப்பனமாக காட்சியளிக்கும் அனுஸ்ரீ நம்மை கவர்கிறார். துணை வில்லனாக கெட்ட போலீஸ் அதிகாரியாக ஆர்கே.சுரேஷ் வில்லத்தனத்தில் வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பரிதாபம் அள்ளிக் கொள்கிறார் நரேன். நெடுமுடி வேணு, விஜயராகவன், சித்திக், சலீம் குமார், சரண்ராஜ் என முந்தைய படத்தின் கதாபாத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் அப்படியே தொடர்கின்றன. கவர்ச்சி பிரியர்களுக்கு கல்கண்டாக இனிக்கும் சன்னி லியோனின் நடனம்..
இசையமைப்பாளர் கோபிசுந்தர் இன்னும் புலிமுருகன் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பது பின்னணி இசையில் நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் பல இடங்களில் தன் இசையால் மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஒரே ஒரு தனித்தீவில் மொத்த படத்தையும் அழகியலோடு படமாக்கி முடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்..
புலிமுருகன் என்கிற பிளாக்பஸ்டர் படத்திற்கு பின்னர் இயக்குனர் வைசாக் இயக்கும் படம் என்பதாலோ என்னவோ படத்தின் மீது இயல்பாகவே அதிக எதிர்பார்ப்பு விழுந்துவிட்டது. ஆனால் அதை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாறி இருக்கிறார் இயக்குனர் வைசாக். இடைவேளை வரை படம் போவதே தெரியாமல் கதையை நகர்த்தியிருக்கும் வைசாக் இடைவேளைக்கு பிறகு தேர்தல், போட்டி என படத்தின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைத்திருக்கிறார். ஒரே பகுதியில் கதை நடப்பதும் சலிப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஜெய் விஷயத்தில் ஒரு மாறுபட்ட முடிவை இயக்குனர் எடுத்திருந்தால் சற்று திருப்தியாக இருந்திருக்கும். மொத்தத்தில் இயக்குனர் வைசாக் முன்பு இயக்கிய முதல் பாகமான போக்கிரி ராஜா படத்துடன் ஒப்பிடும்போதும், அவர் இறுதியாக இயக்கிய புலிமுருகன் படத்துடன் ஒப்பிடும் போதும் சரி.. இந்த மதுர ராஜா அவற்றில் பாதி உயரத்தையே தொட்டிருக்கிறது.