பஷூக்கா (மலையாளம்)
விமர்சனம்
தயாரிப்பு : யூட்லி பிலிம்ஸ் & தியேட்டர் ஆப் ட்ரீம்ஸ்
இயக்கம் : டினோ டென்னிஸ்
நடிகர்கள் : மம்முட்டி, கவுதம் வாசுதேவ் மேனன், வினய் போர்ட், பாபு ஆண்டனி, ஷைன் டாம் சாக்கோ, ஐஸ்வர்யா மேனன், திவ்யா பிள்ளை மற்றும் பலர்
வெளியான தேதி : 10.04.2025
நேரம் : 2 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5
கதைக்களம்
கேரளாவின் முக்கிய நகரமான கொச்சியில் அவ்வப்போது பல நூதன கொள்ளைகள் நடக்கின்றன. கோவிலில் சாமி சிலை, கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டிராபி, பாம்பு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள நாகமாணிக்கம் என அங்கு இருக்கும் முக்கியமான பொருட்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்படுகின்றன. இதில் கோவில் தங்க நகைகள் தொடப்படாமல் வெறும் கல் சிலை மட்டும் கடத்தப்படுகிறது. அதேபோல சும்மா பெயரளவுக்கு சில ஆயிரம் ரூபாய் மதிப்பு கூட இல்லாத சாதாரண நாகமாணிக்க கல் திருடப்படுகிறது.
இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த திருட்டை செய்வது யார் என்று போலீஸ் அதிகாரி கவுதம் மேனன் விசாரணையில் தலையை பிய்த்துக் கொள்கிறார். இத்தனைக்கும் ஒவ்வொரு கொள்ளை நடப்பதற்கு முன்பும் அவருக்கு அதுகுறித்த தகவல் நூதனமான கண்டுபிடிக்க சிரமாமான முறையில் புத்திசாலித்தனமாக மெசேஜ், ஈ மெயில், தபால் என ஏதோ ஒன்றின் மூலமாக ஒரு க்ளூவாக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் கொள்ளை நடந்த பின்பே அதை அவரால் உணர முடிகிறது.
இந்த நிலையில் கவுதம் மேனனுக்கு உதவியாக இந்த வழக்கில் மும்பையில் இருந்து வரும் அவரது நண்பர் மம்முட்டி கை கொடுக்கிறார். நான்காவது கொள்ளை பற்றி கொள்ளையர்கள் அனுப்பிய க்ளூவை பயன்படுத்தி கடைசி நேரத்தில் கொள்ளையர்களில் ஒருவரை பிடிக்கிறார்கள். ஆனால் அவனிடமிருந்து எந்த துப்பும் பெற முடியவில்லை. இந்த நிலையில் தான் இந்த கொள்ளைகள் எல்லாமே பஷூக்கா என்கிற ஒரு கேமில் உள்ள ஐந்து விதமான லெவல்களை மையமாக வைத்து நிஜத்திலேயே நடத்தப்படும் கொள்ளைகள் என்று மம்முட்டியும் கவுதம் மேனனும் கண்டுபிடிக்கின்றனர்.
இதனால் ஐந்தாவது கொள்ளை இப்படித்தான் நிகழும் என அந்த பஷூக்கா கேம் மூலமாக தெரிந்து கொண்டு கொள்ளையனை பிடிக்க திட்டம் வகுக்கின்றனர். ஆனால் அதையும் மீறி கொள்ளை நடக்கின்றது, இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் ? எதற்காக இந்த கொள்ளைகள் நடத்தப்பட்டன என்று தெரிய வரும்போது கவுதம் மேனனுக்கு மட்டுமல்ல.. நமக்கும் கூட அதிர்ச்சியாகவே இருக்கிறது.
படம் எப்படி
மம்முட்டியின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு புரியாத புதிர் போல கொண்டு செல்லப்பட்டு பின் அவர் கவுதம் மேனன் நண்பர் என தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சியை விட, கிளைமாக்ஸில் அவரைப்பற்றி உடைக்கப்படும் உண்மை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு குழப்பமான கதாபாத்திரத்தை காட்சிக்கு காட்சி தனது இயல்பான நடிப்பால் பிரமாதப்படுத்தியிருக்கிறார் நடிகர் மம்முட்டி. இதில் பாதி காட்சிகளில் ஒரு பேருந்து பயணத்திலேயே அவர் பயணிப்பது போலவும் சக பயணி ஒருவருடன் உரையாடிக் கொண்டே வருவது போலவும் அமைந்திருப்பது ஆரம்பத்தில் ஆச்சரியத்தையும் கொஞ்சம் அலுப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனாலும் கதைக்கு அது எவ்வளவு முக்கியமான திருப்புமுனையான விஷயம் என்பது படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் தெரிய வரும் போது மனம் சமாதானப்படுகிறது.
மம்முட்டிக்கு கிட்டத்தட்ட இணையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கவுதம் மேனன். தனக்கென ஒரு குழுவை வைத்துக்கொண்டு காக்க காக்க சூர்யா போல அதிரடி காட்ட முயற்சித்து இருக்கிறார் கவுதம் மேனன். கொள்ளைகளுக்கான துப்புகளை அவர் கண்டுபிடிக்கும் விதம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
இவர்களைத் தாண்டி திரையில் அதிக நேரம் எடுத்துக் கொள்வது என்றால் பேருந்தில் பயணிக்கும் கேம் விளையாட்டு பிரியரான வினய் போர்ட் தான். ஆரம்பத்தில் சக பயணிகளுக்கு இடைஞ்சல் தரும் விதமாக சத்தமாக கேம் விளையாடும் போது இவர் மேல் நமக்கே ஒரு எரிச்சல் வருகிறது. ஆனால் மம்முட்டி இவரை சாதுரியமாக கையாள்வதும் தனக்குத் தேவையான காரியத்தை லாவகமாக சாதித்துக் கொள்ளும் போதும் தன்னையறியாமல் மம்முட்டியின் வலையில் இவர் சிக்கும்போதும் அட பாவமே என்று தான் தோன்றுகிறது.
கவுதம் மேனனின் மனைவியாக வரும் திவ்யா பிள்ளைக்கு பெரிய வேலை இல்லை. கதையில் திடீர் ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார் ஐஸ்வர்யா மேனன். கவுதம் மேனனின் குழுவில் இருக்கும் அந்த பெண் போலீஸ் அதிகாரியின் அதிரடியும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. கிளைமாக்ஸில் கொஞ்ச நேரமே வரும் பாபு ஆண்டனி கதாபாத்திரம் அவ்வளவு நேரம் படம் பார்த்த ரசிகர்களுக்கு திடீரென கொடுக்கும் அதிர்ச்சி கலந்த ட்விஸ்ட்டும் நாம் எதிர்பாராதது. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட ஷைன் டாம் சாக்கோ ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து எந்த பரபரப்பையும் ஏற்படுத்தாமல் ஏமாற்றி செல்கிறார்.
சையத் அப்பாஸின் பின்னணி இசை பல இடங்களில் இதயத்துடிப்பை எகிற வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அதேபோல நிமிஷ் ரவி மற்றும் ரூபி வர்கீஸ் ராஜ் இருவருமே ஒளிப்பதிவில் வித்தை காட்டி இருக்கிறார்கள். குறிப்பா லண்டன் பிரிட்ஜ் கொள்ளைக்காட்சி.
பிளஸ் & மைனஸ்
படத்தில் ஒவ்வொரு கொள்ளையும் நடக்கும் விதம் காட்சிப்படுத்தப்பட்டது உண்மையிலேயே பரபரப்பாக தான் இருக்கிறது. குறிப்பாக கோவில் சிலை திருடப்படும் காட்சியும் வங்கி பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிக்க முயலும் காட்சியும். ஒரு மொபைல் கேம் அதை மையப்படுத்திய தொடர் கொள்ளை என புதிய கதைக்களத்தில் இந்த படத்தை முடிந்தவரை குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்ததற்காக இயக்குனர் டினோ டென்னிஸை பாராட்டலாம். அதே சமயம் நான்காவது கொள்ளையில் பிடிபட்ட ஒரு கொள்ளையனை முறையாக விசாரிக்காமல் அப்படியே விட்டுவிட்டது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் இந்த கொள்ளைகளுக்கான காரணம் விளக்கப்படும் போது, அட இதற்காகவெல்லாம் யாராவது கொள்ளையடிப்பார்களா என்ன என்கிற கேள்வியும் மனதிற்குள் எழவே செய்கிறது.
பஷூக்கா : ஹைடெக் பரமபத விளையாட்டு
பட குழுவினர்
பஷூக்கா (மலையாளம்)
- நடிகர்
- இயக்குனர்