3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : மம்முட்டி கம்பெனி
இயக்கம் : கவுதம் மேனன்
இசை : தர்புகா சிவா
நடிப்பு : மம்முட்டி, கோகுல் சுரேஷ், சுஷ்மிதா பட், வினீத், விஜி வெங்கடேஷ்
வெளியான தேதி : 23 ஜனவரி 2025
நேரம் : 2 மணி 32 நிமிடம்
ரேட்டிங் : 3/5

இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக மலையாளத்தில் இயக்கியுள்ள படம் இது. ஏற்கனவே தமிழில் போலீஸ் படங்களை இயக்கியுள்ள அவர் இந்த முறை மலையாளத்திற்காக ஒரு டிடெக்டிவ் கதையை கையில் எடுத்துள்ளார்.

போலீஸில் பணியாற்றி விட்டு சில காரணங்களால் அந்த வேலையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றவர் மம்முட்டி (டொமினிக்). அதன்பிறகு தனியாக டிடெக்டிவ் நிறுவனம் துவங்கி நடத்தி வருகிறார். அவரிடம் உதவியாளராக இளைஞன் கோகுல் சுரேஷ் சேர்கிறார். வயதான பெண்மணியான விஜி வெங்கடேஷ் என்பவரின் வீட்டில் ஒரு பேயிங் கெஸ்ட் போல தங்கி இருக்கிறார் மம்முட்டி. ஏதேச்சையாக ஒரு நாள் விஜி வெங்கடேஷ் மருத்துவமனையில் கண்டெடுத்த ஒரு லேடீஸ் பர்ஸ் ஒன்றை மம்முட்டியிடம் கொடுத்து இது யாருடையது என கண்டுபிடித்து உரியவரிடம் சேர்த்து விடு, உனக்கு பீஸாக எனக்கு தர வேண்டிய வாடகை பாக்கியை தர வேண்டாம் என சொல்கிறார்.

மம்முட்டியும் அந்த பர்ஸில் கிடைக்கும் சில துப்புகளை வைத்து அந்த பர்ஸ் ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் பூஜா என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கிறார். அந்த பூஜாவை தேடி அவள் தங்கியிருந்த முகவரிக்கு செல்லும்போது, கடந்த நான்கு நாட்களாகவே அதாவது பர்ஸ் தொலைந்த தினத்திலிருந்து பூஜாவை காணவில்லை என்றும் இரண்டு வருடத்திற்கு முன்பே பிரேக் அப் ஆன தனது காதலன் கார்த்திக் என்பவரை சந்திக்க போவதாக கிளம்பி சென்றவள் என்ன ஆனாள் தெரியவில்லை என்றும் உடன் தங்கியிருக்கும் தோழிகள் சொல்கிறார்கள்.

இப்போது அந்த கார்த்திக் யார் என கொஞ்சம் கொஞ்சமாக மம்முட்டி நூல் பிடித்து விசாரித்து செல்கிறார். ஆனால் சரியாக பூஜா-கார்த்திக் பிரேக்கப் ஆன அன்றைய தினத்திலிருந்து இரண்டு வருடங்களாக கார்த்தி ஆளே மிஸ்ஸிங் என்பதும், அவரது ஒரே தங்கையான சுஷ்மிதா பட் அண்ணன் வந்து விடமாட்டானா என அவருக்காக காத்துக் கொண்டு இருப்பதும் தெரிய வருகிறது. அப்படியானால் பூஜா இரண்டு வருடத்திற்கு பிறகு கார்த்திகை சந்திப்பதாக எதன் அடிப்படையில் தேடி சென்றாள் ? கார்த்தி உயிருடன் தான் இருக்கிறாரா ? அப்படியானால் அவரை தேடி சென்ற பூஜாவுக்கு என்ன ஆனது ? இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன என்பது தான் மீதிக்கதை.

போலீஸ் துப்பறியும் படங்கள் என்றால் அதிரடி ஆக்சன், சேசிங் என ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். இது தனியார் டிடெக்டிவ் புலனாய்வு செய்யும் கதை என்பதால் அதற்கு ஏற்ற மாதிரி படம் சற்று மெதுவாகவே நகர்கிறது. ஆனால் எந்த தொய்வும் இல்லாமல் சீரான வேகத்திலேயே செல்கிறது.

டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் அந்த வயதுக்கே உரிய பக்குவம், கோபம், வாழ்க்கையில் கடந்து வந்த விரக்தி என அனைத்தையுமே மம்முட்டி அழகாக பிரதிபலித்துள்ளார். சண்டைகாட்சியிலும் பாடல் காட்சியிலும் இளைஞானகவே மாறிவிடுகிறார். தான் விசாரிக்கும் ஒவ்வொரு நபரையும் அவர் விதம் விதமாக விசாரிக்கும் பாணியே சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அந்த வழக்கில் ஏதாவது ஒரு சிறு துரும்பை வைத்து அவர் முன்னேறுவது கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது.

ஜாடிக்கேத்த மூடியாக அவரது சிஷ்யனாக நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் நடித்துள்ளார். சுரேஷ் கோபியை சின்ன வயதில் பார்ப்பதை போலவே இருக்கிறார். படம் முழுவதும் மம்முட்டியுடன் இணைந்தே பயணிப்பதால் இந்த படம் மூலம் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை வைத்து அவர் சினிமாவில் இனி அடுத்து தனியாக படம் நடிக்கும் முயற்சியில் இறங்கலாம்.

கதாநாயகியாக, காணாமல் போன கார்த்தியின் தங்கையாக நடித்திருக்கும் சுஷ்மிதா பட் அழகில் அப்படியே நம்மை வசீகரித்து விடுகிறார். அவரது நடிப்பு செயற்கையாக இருக்கிறதே என நமக்கு அவ்வப்போது தோன்றினாலும் படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெறும் ஒரு விஷயம் ஓ இதனால் தானா என்றும் அவரது நடிப்பு சரிதான் என்றும் பேலன்ஸ் செய்து விடுகிறது. படம் முழுதும் அவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. குறிப்பாக கிளைமாக்ஸில் ரசிகர்களை அதிர வைக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பு பிரிந்து போன மகன் திரும்பவில்லையே என்ற ஏக்கத்தில் இருப்பதாலோ என்னவோ, இப்படித்தானே யாரோ ஒரு பெண்ணைப் பெற்ற தாய் தன் பெண்ணை காணோம் என வருந்துவார் என என்கிற நல்ல எண்ணத்தில் மம்முட்டியிடம் இந்த வழக்கை கண்டுபிடிக்கும்படி சொல்லி தூண்டிவிடும் விஜி வெங்கடேஷ் கதாபாத்திரம் ரொம்பவே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடைவேளைக்கு பின்பு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் வினீத் படத்தின் திருப்புமுனைக்கு முக்கிய காரணமாக அமைகிறார். சற்றே நெகடிவ் கலந்த கதாபாத்திரம் அவருடையது. காணாமல் போனதாக மம்முட்டி தேடும் பூஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ள மீனாட்சி உன்னி கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போவதால் மனதில் பதிய தவறுகிறார்கள்.

தர்புகா சிவாவின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு வலு சேர்க்கிறது. அதேபோல விஷ்ணு தேவின் ஒளிப்பதிவு நகரத்து அழகையும் மலைப்பகுதியின் அழகையும் ஒருசேர அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. கதையுடன் நாம் இணைந்து பயணிப்பதற்கு ஒளிப்பதிவு இன்னொரு முக்கிய காரணம்.

இயக்குனர் கவுதம் மேனன் இந்த டிடெக்டிக் கதையை மருத்துவர் நீரஜ் ராஜன் என்பவரிடம் இருந்து வாங்கி இருந்தாலும் திரைக்கதையில் தனது பாணியை அழகாக புகுத்தியுள்ளார். சர்ப்ரைஸ் ஆக ஒரு காட்சியில் தலையும் காட்டியுள்ளார். படத்தின் ஒருசில வித்தியாசமான திருப்பங்கள் நிஜமாகவே நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அதிலும் அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் கிளைமாக்ஸ் நெருங்கும் வரை நம்மால் யூகிக்க முடியாத ஒன்றுதான். அதற்காக நிச்சயம் கவுதம் மேனனை பாராட்ட வேண்டும். அதுமட்டுமல்ல எந்த ஒரு அதிர்ச்சியும் தராமல் இடைவேளை விட்ட கவுதம் மேனன், ஒரு சண்டைக்காட்சி துவங்கும் அடுத்த நொடியே இடைவேளை விடுகிறார். ஆனால் இடைவேளைக்கு பின் அரைமணி நேரம் கழித்து வேறொரு இடத்தில் அந்த சண்டைக்காட்சியை முழுவதுமாக காட்டியிருப்பது சினிமாவுக்கு புதுசு. கவுதம் மேனன் ஸ்டைல் என்றுகூட சொல்லலாம்.

ஆனாலும் சில காட்சிகளில் தானாகவே வலிந்து துப்பு கிடைப்பது அது எப்படிங்க என்றும் நம்மை கேட்க வைக்கிறது. அது மட்டுமல்ல குறிப்பாக அவ்வளவு புத்திசாலியான மம்முட்டி கிளைமாக்ஸ் காட்சியில் குற்றவாளியை நெருங்கி விட்டாலும் தனக்கு எந்தவிதமான ஆபத்து வரும் என்கிற எந்த எண்ணமும் இல்லாமல் ரொம்பவே அசட்டையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை இன்னும் கொஞ்சம் கவனித்து சரி செய்திருக்கலாம். மற்றபடி பூஜாவுக்கும் கார்த்திக்கும் என்ன ஆச்சு என்று கடைசி வரை நம்மளையும் ஆவலுடன் கூடவே சேர்ந்து தேட வைத்ததில் இயக்குனராக கௌதம் மேனன் வெற்றி பெற்றுள்ளார்

டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் - தேவையான கனத்துடன்

 

பட குழுவினர்

டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மம்மூட்டி

மலையாள திரையுலகினர் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுவர் மம்மூட்டி, 1951-ம் ஆண்டு செப்., 7ம் தேதி, கோட்டயம் அருகே உள்ள வைகோமில் முகமது குட்டியாக பிறந்தவர். சினிமாவுக்காக மம்மூட்டி என பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சல்பாத் என்ற மனைவியும், சுருமி, துல்கர் சல்மான் என்ற மகனும் உள்ளார். தற்போது இவரது மகனான துல்கர் சல்மானும் நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.

மேலும் விமர்சனம் ↓