ஜோஷ்வா : இமை போல் காக்க,Joshua Imai Pol Kaakha

ஜோஷ்வா : இமை போல் காக்க - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கவுதம் மேனன்
இசை - கார்த்திக்
நடிப்பு - வருண், ராஹி, கிருஷ்ணா
வெளியான தேதி - 1 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

சர்வதேச போதைப் பொருள் கும்பல் ஒன்றின் தலைவனுக்கு எதிராக வாதாட இருக்கும் பெண் வக்கீல் ஒருவரை கதாநாயகன் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை. சர்வதேசம் என்றாலே கதாபாத்திரங்களிலும் அந்த 'இன்டர்நேஷனல்' என்கிற சர்வதேசம் வந்துவிடும். அப்படித்தான் இந்தப் படத்திலும்.

அமெரிக்க வாழ் பெண் வக்கீல், சர்வதேச கான்டிராக்ட் கில்லர் கதாநாயகன் இருவருக்குமான காதல், மோதல், காப்பாற்றுதல் என இரண்டு மணி நேரப் படத்தை ஆக்ஷன் காட்சிகளின் மூலமே நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். இவரது இயக்கத்தில் வரும் ஆக்ஷன் படம் என்றாலே அது தனி ஸ்டைலுடன் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படி ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ் திருப்பம் தவிர படத்தில் கதை என்று அழுத்தமாக எதுவும் இல்லை.

ஒரு போதைப் பொருள் கடத்தல்காரனை கொல்லச் சென்ற இடத்தில் படத்தின் நாயகி ராஹி-யைப் பார்த்து காதல் கொள்கிறார் கான்டிராக்ட் கில்லர் ஆன வருண். சில சந்திப்புகளுக்குப் பின் ராஹியும் காதலில் விழுகிறார். ராஹி அமெரிக்கா செல்லும் போது தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்கிறார் வருண். அதனால், கோபமடையும் ராஹி, இனி காதல் வேண்டாம் எனப் போய்விடுகிறார். இதனிடையே, மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல்காரனை அமெரிக்க போலீஸ் கைது செய்கிறது. அந்த வழக்கில் ஆஜராக உள்ள ராஹியைக் கொல்ல கடத்தல்காரன் ஆட்களை அனுப்புகிறான். தனது காதலியைக் காப்பாற்ற வருண் களமிறங்குகிறார். ராஹியை சென்னைக்கு வரவழைத்து பாதுகாப்பு வளையத்தில் வைக்கிறார். அதையும் மீறி சில கும்பல் அவரைக் கொல்ல முயற்சிக்கிறது. இதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆறடி உயரத்தில் வலிமையாக இருப்பதால் அந்த சர்வதேச கான்டிராக்ட் கில்லர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே இருக்கிறார் வருண். சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பது தெரிகிறது. கில்லர் என்பதால் ஒரே பாவனையில் இருந்தாலே போதும். அதை சரியாகவே செய்திருக்கிறார். முன்னாள் காதலியைக் காப்பாற்ற தயாராக இருப்பவர், அந்த முன்னாள் இந்நாள் ஆன பின் சும்மா விடுவாரா, எதிரிகளைப் பந்தாடுகிறார். ஜோஷ்வா கதாபாத்திரத்தைக் காப்பாற்றித் தந்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு ஜோடி மோதிரத்தைப் பரிசாகத் தர வேண்டும் வருண்.

ராஹி, படத்தின் கதாநாயகி. அமெரிக்க வாழ் வக்கீல் என்பதெல்லாம் ஓகே. ஆனால், படத்தின் நாயகன் வருணுக்கு அக்கா போல தெரிகிறார். ஜோடிப் பொருத்தம் சரியில்லை. இருந்தாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை ராஹி.

வில்லன்களால் களமிறக்கப்படும் கூலிப் படையினர்தான் நாயகனின் எதிரிகள். அப்படி ஒரு கூலிப்படையின் லோக்கல் ஆளாக கிருஷ்ணா நடித்திருக்கிறார். ஸ்டைஷிலாகக் சென்று கொண்டிருந்த படம் திடீரென லோக்கலாகவும் மாறுகிறது. கொஞ்சமாகவே வந்தாலும் கிருஷ்ணா துறுதுறுப்பாக நடித்துள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட்டுக்கு உட்கார்ந்த இடத்திலிருந்தே கட்டளைகள், ஆலோசனைகளைச் சொல்லும் 'எம்' கதாபாத்திரத்தில் நடித்த ஜுடி டென்ச் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தில் திவ்யதர்ஷினி நடித்துள்ளார். ஆச்சரியப்படும் விதத்தில் அக்கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.

படத்தில் ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் யான்னிக் பென் ஆகியோருக்கு நிறைய வேலைகளைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அவர்கள் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கார்த்திக்கின் இசையில் பாடல்கள் சுமார் ரகமே. பின்னணி இசையிலும் வாசித்துக் கொண்டேயிருக்கிறார். ஆங்காங்கே அமைதி காத்திருக்கலாம்.

ஏர்போர்ட், டோல்கேட், தெருக்கள் என பல இடங்களில் பல கொலைகள் நடக்கிறது. ஆனால், மருந்துக்குக் கூட போலீஸ் என்று யாருமே வரவில்லை. இப்படியாக சில அபத்தங்கள் படத்தில் ஆங்காங்கே இருக்கிறது. கொஞ்சம் காதல், நிறைய ஆக்ஷனுடன் நகர்கிறது படம். பரபரவென நகர்ந்தாலும் வழக்கமான கவுதம் மேனன் படம் போல இல்லாமல் சிம்பிளான கவுதம் மேனன் படம் போல இருக்கிறது.

ஜோஷ்வா இமை போல் காக்க - ஆக்ஷன் மட்டுமே காக்க..

 

பட குழுவினர்

ஜோஷ்வா : இமை போல் காக்க

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓