நடிகர்கள் : மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமீதா, ஜெகபதிபாபு, கிஷோர், பாலா, லால், சுராஜ் வெஞ்சாரமூடு
டைரக்சன் : வைசாக்
தன்னை சார்ந்த மனிதர்களுக்கு தீங்கிழைப்பது காட்டுக்குள் நடமாடும் நாலுகால் மிருகமானாலும், நாட்டுக்குள் நடமாடும் இரண்டு கால் மிருகமானாலும் சரி... அவற்றை அழித்து தன்னை நம்பியவர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் ஒருவனின் கதை தான் இந்த புலி முருகன்'.
காட்டின் அருகே உள்ள கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர் தான் மோகன்லால். சிறுவயதில் தன் தந்தையை கண்முண்ணே புலியிடம் பறிகொடுத்ததில் இருந்து, 'புலி' அவருக்கு பரம எதிரியாகிறது.. காட்டுக்குள் திரிவதை விட்டுவிட்டு, இரைதேடி ஊருக்குள் வந்து உயிர்களை கொல்லும் புலிகள் தான் அவரது இலக்கு.
தன் ஒரே தம்பியை டவுனில் படிக்கவைக்கும் மோகன்லால், தம்பியின் நண்பன் பாலாவின் நிறுவனத்துக்கு, கேன்சர் சிகிசைக்கான மருந்து கண்டுபிடிக்க தேவையென்று சொன்னதால் மலையில் இருந்து கஞ்சாவை நகரத்துக்கு தனது லாரியில் கடத்தி வந்து கொடுக்கிறார். பாரஸ்ட் ரேஞ்சர் கிஷோரை தாக்கிய வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, பாலாவின் தந்தையான ஜெகபதிபாபு உதவி செய்வதாக வாக்களிக்கிறார். அதனால் அவரது கெஸ்ட் ஹவுசிலேயே தனது மனைவி, மகள், தம்பியுடன் தங்குகிறார் மோகன்லால். அவரது தம்பிக்கு தனது கம்பெனியிலேயே வேலைபோட்டு கொடுக்கிறார் ஜெகபதிபாபு..
ஆனால் கொஞ்சநாளிலேயே மோகன்லாலை சுற்றி வளைக்கும் போலீஸார் ஜெகபதிபாபு போதை மருந்து தயாரிக்கும் உண்மையை அவரிடம் சொல்லி, அவரை பிடிக்க உதவினால் அவரையும் அவரது தம்பியையும் இந்த கேசிலிருந்து தப்பவைப்பதாக சொல்கிறார்கள்.. மோகன்லாலும் இதற்கு உதவி செய்ய, இந்த களேபரத்தில் நடக்கும் சண்டையில் பாலா உயிரிழக்கிறார். ஜெகபதிபாபு போலீஸில் இருந்து தப்புகிறார்.
ஊர் திரும்பும் மோகன்லாலுக்கு மீண்டும் புலி ஒன்று கிராமத்திற்குள் வந்து சில ஆட்களை கொன்ற தகவல் கிடைக்கிறது. கூடவே தன்னை கொல்வதற்காக ஜெகபதிபாபுவும் காட்டில் உள்ள அவரது கூட்டாளியுடன் காத்திருப்பது தெரிய வருகிறது.. இந்த இரண்டு ஆபத்துக்களையும் மோகன்லாலால் ஒரே நேரத்தில் எப்படி சமாளிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.
புல் அன்ட் புல் ஆக்சன் படமொன்றில் மோகன்லாலை பார்த்து எத்தனை வருடங்களாகிறது... அந்த மனக்குறையை தீர்க்கும் விதமாக கமர்ஷியல் பேக்கேஜாக இந்தப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் வைசாக்கை முதலில் பாராட்டி விடலாம்.
மோகன்லால் புலியுடன் மோதும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.. குறிப்பாக அதற்காக கையாளப்பட்டிருக்கும் டெக்னிக்குகளில் மோகன்லால் தன்னை ஒரு அருமையான பொருத்திக்கொண்டு சாகச வேட்டைகாரனாகவே மாறியிருக்கிறார். மனிதர்களுடன் மோதும் சண்டைக்காட்சி, குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டைகாட்சியில் மோகன்லாலின் உழைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. மனைவி கமாலினி முகர்ஜியுடன் ஊடல் கூடல், நண்பன் லாலுடன் நட்பு, தம்பிக்காக என்னவேண்டுமானாலும் செய்யத்துணிவது என தனது ரசிகர்களுக்கு முழு தீனி போட்டுள்ளார் மோகன்லால்.
ஆதிவாசி கிராமத்து பெண்ணாக, மோகன்லாலின் மனைவியாக யதாரத்தமான நடிப்பு கமாலினி முகர்ஜியுடையது. அதிலும் நமீதா தனது கணவனை பார்க்கிறார் என தெரிந்ததும் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் காட்சியில் பிராமதப்படுத்துகிறார் போங்கள்.. மோகன்லாலை பார்த்து வியந்து, கமாலினி முகர்ஜியை வெறுப்பேற்றுவதோடு தனது வேலையை முடித்துக்கொள்கிறார் நமீதா.
வில்லனாக ஜெகபதிபாபு, துணை வில்லனாக அவரது மகன் பாலா, இடையில் வரும் வில்லனாக ரேஞ்சராக வரும் கிஷோர், மோகன்லாலின் நண்பனாக வரும் லால், அவ்வப்போது காமெடி கலாட்டா பண்ணும் சுராஜ் வெஞ்சாரமூடு, நாய்களை வைத்துகொண்டு மோகன்லாலிடம் உதார் காட்டி பல்பு வாங்கும் சுதீர் காரமணா, ஜெகபதிபாபுவின் வலதுகையாக வரும் ஹரீஷ் பெராடி என பலரும் கதைக்கு பொருத்தமான தேர்வு என சொல்லவைக்கின்றனர்.
சண்டைக்காட்சிகளை அதி அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் பீட்டர் ஹெய்ன்.. நகரத்தில் நடக்கும் அரை மணி நேர காட்சிகளை தவிர இரண்டு மணி நேரம் அற்புதமான காட்டுக்குள் நம்மை சுற்றிவர செய்த உணர்வை தந்துள்ளது ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு.. காட்சிகளை த்ரில்லுடன் நகர்த்தியுள்ளது கோபிசுந்தரின் பின்னணி இசை..
வழக்கமாக வந்துகொண்டு இருக்கும் சினிமாக்களில் இருந்து சற்றே மாறுபட்டு, அதிலும் மோகன்லாலை வைத்து இப்படி ஒரு படத்தை இயக்கியுள்ள வைசாக், இந்தப்படத்தின் காரணமாகவே சினிமா வரலாற்றில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் என்று சொல்லலாம்.
புலி முருகன் - அடுத்ததாக பார்ப்பதற்கு உடனே டிக்கெட் போடவேண்டிய படம் இது.