மான்ஸ்டர் (மலையாளம்),Monster (Malayalam)

மான்ஸ்டர் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஆசிர்வாத் சினிமாஸ்
இயக்கம் : வைசாக்
நடிகர்கள் : மோகன்லால், ஹனிரோஸ், லட்சுமி மஞ்சு, சுதேவ் நாயர், லேனா மற்றும் பலர்
வெளியான நாள் : 21.10.22
நேரம் : 2 மணி 2 நிமிடம்
ரேட்டிங் : 3/5

புலிமுருகன் என்கிற பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு மோகன்லால், இயக்குனர் வைசாக் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் இந்த மான்ஸ்டர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் இந்த படம் எந்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டி உள்ளது.. பார்க்கலாம்.

காலில் அடிபட்டு பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே குழந்தையை கவனித்துக்கொண்டு இருக்கும் கணவன் சுதேவ் நாயர். கால் டாக்ஸி ஓட்டி குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தும் மனைவி ஹனிரோஸ். தங்கள் முதல் திருமண நாளை வீட்டில் கொண்டாட ஏற்பாடு செய்து வைத்திருக்கும் ஹனிரோஸ், எதிர்பாராத விதமாக தனது நிறுவனத்தின் பார்ட்னர்களில் ஒருவரான மோகன்லாலை ஏர்போர்ட்டில் இருந்து பிக்கப் செய்து வரவேண்டிய மறுக்க முடியாத சூழலுக்கு ஆளாகிறார்.

தான் வந்த வேலை முடிந்ததும் ஊர்சுற்றி பார்க்க நினைக்கும் மோகன்லால், ஹனிரோஸிடம் இந்த விபரத்தை கேட்டறிந்ததும் தானும் அவர்களது திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறேன் என கூறி அழையா விருந்தாளியாக அவர்கள் வீட்டுக்கு வருகிறார். இடையில் ஏற்கனவே சந்தித்த லாயர் ஒருவரிடம் கமிஷன் தொகையை கொடுத்துவிட்டு வருமாறு ஹனிரோஸை அனுப்பி வைக்கிறார். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது கணவர் சுதேவ் நாயரை சுட்டுக் கொல்கிறார் மோகன்லால். அவரது உடலை ஒரு பையில் மறைவாக எடுத்து வைத்து ஹனிரோஸுக்கு தெரியாமல் அவரது கார் டிக்கியிலேயே மறைத்து வைத்துவிட்டு, ஏர்போர்ட்டிலும் சென்று இறங்கி கொள்கிறார்.

இந்த விபரம் தெரியாத ஹனிரோஸ் வீட்டிற்கு வந்து கணவனை காணாமல் தேடி. போலீஸில் புகார் அளிக்க, போலீஸ் விசாரணையில் ஹனிரோஸின் காரில் அவரது கணவரின் பிணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார். அவருக்கு மோகன்லால் மீது சந்தேகம் வந்து அவர் வந்து போன விஷயங்களை கூற, அப்படி ஒருவர் வந்து போனதற்கான தடயங்கள் எதுவுமே இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைகிறார் ஹனிரோஸ்.

அப்படியானால் லக்கி சிங் என்கிற பெயரில் வந்த மோகன்லால் யார் ? தான் பார்த்து பழகிய ஒரே நாளில் ஒரு பெண்ணின் கணவரை கொன்று விட்டு அந்த பழியை அந்த பெண் மீது சுமத்தி சிறைக்கு அனுப்பும் அளவிற்கு அவருக்கு என்ன நோக்கம் ? ஹனிரோஸ் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிக்கிறார் ? மோகன்லால் போலீஸிடம் சிக்கினாரா என பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகான மீதிக்கதை விட சொல்கிறது.

இடைவேளைக்கு முன்பு வரை லக்கி சிங் அவதாரத்தில் வழவழவென பேசிக்கொண்டு கலகலப்பையும் அதேசமயம் ஹனிரோஸ் குடும்பத்திற்கு ஏற்பது ஏற்படுவது போன்று கொஞ்சம் நமக்குமே எரிச்சலையும் ஏற்படுத்துகிறார் மோகன்லால். அப்படி எரிச்சலை ஏற்படுத்துவதற்கான காரணம் பின்னர் தெரிய வரும்போது அடடே இதுதான விஷயம் என நாம் சமாதானம் அடைகிறோம். இடைவேளைக்கு பிறகு வழக்கமான கமர்சியல் மோகன்லாலை பார்க்க முடிவது ஆறுதல். மோகன்லால் எதற்காக அப்பாவியான ஹனிரோஸை இப்படி சிக்கலில் மாட்டி விட்டார் என்பதற்கான விடை தெரியும்போது நம்மால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.

படத்தின் முழு கதையிலும் பயணிக்கும் நாயகியாக ஹனிரோஸுக்கு மிக வெயிட்டான கதாபாத்திரம். எதார்த்தமாக செய்வதாக நினைத்து மோகன்லால் செய்யும் செயல்களால் சங்கடப்படுவதும் அதேசமயம் தனது முதலாளி என்பதால் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத தர்ம சங்கடத்தை வெளிப்படுத்துவதும் என வேலைக்கு போகும் சராசரி பெண்ணின் மனநிலையை அழகாக பிரதிபலித்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு அப்பாவித்தனமான நடிப்பை ஒதுக்கிவிட்டு அடப்பாவி என்று சொல்லும் விதமாக ஹனிரோஸ் மாறும்போது நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

ஹனி ரோசின் வீட்டு வேலைக்காரியாக வரும் லட்சுமி மஞ்சு பேசுவதற்கு கூட கூலி கேட்கும் வகையில் வார்த்தைகளை பார்த்து பார்த்து பேசும்போது இவரது கதாபாத்திரம் ஏன் இப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் இடைவேளைக்குப் பிறகு அதற்கான விடை தெரியும்போது நமக்கான அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வைசாக். இவர்கள் இருவரின் துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும்.

அப்பாவி கணவனாக வந்து பரிதாபம் அள்ளிக்கொள்ளும் கதாபாத்திரத்தில் தேசியவிருது பெற்ற நடிகர் சுதேவ் நாயர் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இவர்கள் தவிர வக்கீலாக வரும் இயக்குனர் ஜானி ஆண்டனி, விசாரணை அதிகாரியாக வரும் லேனா மற்றும் கணேஷ்குமார் ஆகியோருக்கு ஓரளவு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பாதி முழுவதுமே ஹனிரோஸ் மோகன்லால் சந்திப்பு, மோகன்லால் அவர்கள் வீட்டுக்கு வருவது, வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகள், சுதேவ் நாயரை சுட்டுக்கொல்வது என மூன்று விதமான லொகேஷன்களில் நான்கைந்து நீளமான காட்சிகளில் முடிந்துவிடுகிறது. அதேபோல இடைவேளைக்கு பின்பு ஹனிரோஸை போலீஸ் விசாரிப்பது, இரண்டு சண்டைக் காட்சிகள், உயர் அதிகாரிகளுக்கு மோகன்லால் விளக்கம் சொல்லும் காட்சி என மொத்தமே நான்கு லோகேஷன்களில் மீதி படம் முடிவடைந்து விடுகிறது.

இதில் என்ன ஆறுதல் என்றால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் படம் போரடிக்காமல் வேகமாக செல்வதை மறுக்க முடியாது. எதிர்பாராத சில திருப்பங்களும் இதில் இருக்கின்றன. அதேசமயம் புலி முருகன் என்கிற மாபெரும் விருந்தை பரிமாறிய இயக்குனர் வைசாக்கிடம் அதே போன்று இன்னொரு விருந்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, சுவையான தக்காளி சாதத்தை பரிமாறினால் எப்படி இருக்கும்.. அதைத்தான் மான்ஸ்டரில் செய்திருக்கிறார் இயக்குனர் வைசாக். இருக்கிறார் என்று தான் சொல்ல முடியும்

அந்த வகையில் ஓடிடிக்காக எடுக்கப்பட்ட படத்தை தியேட்டரில் தவறுதலாக வெளியிட்டு விட்டார்களோ என்று தான் நினைக்க தோன்றுகிறது.

மான்ஸ்டர் : பலம் குறைந்தவன்

 

பட குழுவினர்

மான்ஸ்டர் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மோகன்லால்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓