பட்டாம்பூச்சி
விமர்சனம்
தயாரிப்பு - அவனி டெலி மீடியா
இயக்கம் - பத்ரி
இசை - நவ்நீத் சுந்தர்
நடிப்பு - சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ்
வெளியான தேதி - 25 ஜுன் 2022
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தமிழ் சினிமாவில் இது த்ரில்லர் சீசன் போலிருக்கிறது. தொடர்ந்து த்ரில்லர் படங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. அதிகமான நகைச்சுவைப் படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர் சி, இந்த த்ரில்லர் படத்தில் கதாநாயகனாக மட்டுமே நடித்திருக்கிறார். பத்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் வில்லனாக ஜெய் நடித்துள்ளார்.
ஹாலிவுட் படங்களில் தான் சீரியர் கில்லர்களைப் பற்றிய படங்களைப் பார்க்க முடியும். தமிழில் எப்போதோ ஒரு முறை அப்படிப்பட்ட படங்கள் வரும். இது அப்படி வந்துள்ள படம். 1989களில் நடக்கும் கதை. படம் முழுவதும் அந்த காலகட்டத்திலேயே நடக்கிறது. அதற்காக மிகவும் கவனமுடன் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பத்ரி.
கொலைக் குற்றவாளியாக தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் ஜெய். திடீரென, தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த 'பட்டாம்பூச்சி' என்கிறார். பல கொலைகளைச் செய்துவிட்டு அங்கு பட்டாம்பூச்சி ஓவியத்தை வரைந்துவிட்டு வந்ததால் அப்படி ஒரு பெயர். ஜெய் சொன்னதை வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதற்கான விசாரணையை இன்ஸ்பெக்டரான சுந்தர் சி மேற்கொள்கிறார். ஆனால், புத்திசாலித்தனமாக, அந்த பட்டாம்பூச்சி தானில்லை என தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து விடுதலை ஆகிறார் ஜெய். இருந்தாலும் ஜெய்தான் 'பட்டாம்பூச்சி' என நிரூபிக்கப் போராடுகிறார் சுந்தர் சி. அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக் கொள்ளும் விதத்தில் கம்பீரமாகவே நடித்திருக்கிறார் சுந்தர் சி. ஆனாலும், மகள், மனைவியைப் பறி கொடுத்த துக்கம் அவரை அடிக்கடி பயமுறுத்துகிறது. அதிலிருந்து மீண்டு ஜெய் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்கப் போராடுகிறார். அவருக்கும் ஜெய்க்குமான போராட்டம் பூனை, எலி போராட்டமாக நீண்டு கொண்டு போகிறது. காக்கிச் சட்டை அணியாத காவல் துறை அதிகாரியாக காவல் துறையின் கண்ணியத்தைக் காக்கப் பாடுபடுகிறார் சுந்தர் சி.
சாப்ட் ஆன கதாபாத்திரங்களில் அதிகம் நடித்தவர் ஜெய். அவரை முதன் முறையாக வில்லனாகப் பார்ப்பதே ஆச்சரியம்தான். தன்னை ஒரு கொடூர கொலைகாரனாக காட்டிக் கொள்ள உடல்மொழியை மாற்றி நடித்திருக்கிறார். சைக்கோ கொலைகாரன் என்பதால் என்ன செய்தாலும் அது கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக அமைந்துவிடும். ஏதோ ஒரு 'சின்ட்ரோம்' காரணமாக அடிக்கடி கழுத்தையும், கையையும் திருப்பித் திருப்பி என்னமோ பண்ணுகிறார். அதை ஒரே மாதிரியாக படம் முழுவதும் சரியாகவே செய்திருக்கிறார்.
படத்தில் கதாநாயகி இருக்க வேண்டும் என்பதற்காக ஹனி ரோஸ் கதாபாத்திரம் இடம் பெற்றிருக்கிறது. பத்திரிகையாளரான ஹனி ரோஸ்தான் ஜெய் செய்த 'பட்டாம்பூச்சி' கொலைகள் பற்றி செய்திகளை எழுதியவர். கணவரைப் பிரிந்து மகளுடன் வசிக்கும் ஹனி ரோஸ், சுந்தர் சி இடையில் அப்படியே காதலை வரவைத்து விடுகிறார் இயக்குனர். நல்ல வேளையாக காதல் காட்சிகளை வைக்கவில்லை.
நவ்நீத் சுந்தரின் படத்தின் விறுவிறுப்புக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது. 80களின் கால கட்டத்தை கண்முன் காட்ட ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசுவாமி, கலை இயக்குனர் பிரேம்குமார் நிறையவே உழைத்திருக்கிறார்கள்.
படத்தின் இடைவேளை வரை பரபரப்பும், விறுவிறுப்புமாக திரைக்கதை நகர்கிறது. அதற்குப் பிறகு ஜெய்யை சுந்தர் சி விரட்டுவது பற்றிய காட்சிகளே அதிகம் இருக்கிறது. இருவரும் ஓடி பிடித்து விளையாடுவது போல திரும்பத் திரும்பக் காட்சிகள் ஒரே மாதிரியாக வந்து கொண்டிருக்கின்றன. சீக்கிரம் ஜெய்யைக் கண்டுபிடித்து சுந்தர் சி போட்டுத் தள்ள மாட்டாரா என கேட்க வைக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜெய் செய்யும் கொலைகள் மிகவும் கொடூரமாக இருக்கின்றன. இப்படி ஒரு கொடூரக் கொலைகளை தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்தது இல்லை. இந்த அளவிற்கான கொடூரத்தைக் காட்ட வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.
பட்டாம்பூச்சி - பதட்டத்துடன்…
பட்டாம்பூச்சி தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பட்டாம்பூச்சி
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்