அன்னபூரணி,Annapoorani

அன்னபூரணி - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ்
இயக்கம் - நீலேஷ் கிருஷ்ணா
இசை - தமன்
நடிப்பு - நயன்தாரா, ஜெய், சத்யராஜ்
வெளியான தேதி - 1 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் நுழைந்த பின் புதுப்புது கதைகள் ஆரம்பித்துள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை, நாம் பார்த்து வியந்தவை என அவற்றைப் படங்களாகக் கொடுத்து ரசிக்க வைத்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணாவும் புதிய கதையுடன் களத்தில் இறங்கியுள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஐந்து தலைமுறைகளாக தளிகை செய்து வரும் பிராமண குடும்பம் அச்யுத் குமார் குடும்பம். அவரது ஒரே மகள் நயன்தாரா. அவருக்கு சிறு வயதிலிருந்தே 'இந்தியாவின் நம்பர் 1'செப்' ஆக வேண்டும் என்பது ஆசை. அந்த வேலைக்குப் போனால் 'நான் வெஜ்' சமைக்க வேண்டும், ருசி பார்க்க வேண்டும், அதனால் முடியாது என்கிறார் நயன்தாரா அப்பா. ஆனால், அப்பாவை ஏமாற்றி எம்பிஏ படிக்கிறேன் எனச் சொல்லி கேட்டரிங் படிக்கிறார் நயன்தாரா. ஒரு கட்டத்தில் அது அப்பாவுக்குத் தெரிய வர, படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். திருமணத்தன்று சொல்லாமல் கொள்ளாமல் சென்னை போய்விடுகிறார் நயன்தாரா. ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலைக்குச் சேர்கிறார். ஆனால், அங்கு அவர் சில தடைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அவற்றை சமாளித்து தன் வாழ்வின் லட்சியத்தை அடைந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சமையலை வைத்து, சமையல் கலைஞர்களை வைத்து விரல் விட்டு எண்ணக் கூடிய படங்கள்தான் வந்துள்ளன. 5 ஸ்டார் ஹோட்டல், செப் என்பதெல்லாம் சினிமாவில் ஒரு சில காட்சிகளுடன் மட்டுமே வந்து போயுள்ளது. இதில் அதை முழுமையாகக் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். பொருத்தமான நட்சத்திரத் தேர்வே அவருக்கு பாதி வேலையைக் குறைத்துவிட்டது. மீதி வேலையை அந்த நட்சத்திரங்களே திறம்பட செய்து முடித்திருக்கிறார்கள்.

தனி கதாநாயகியாக நயன்தாரா நடித்த படங்கள் த்ரில்லர் படங்களாகவே இருக்கும். அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஒரு இயல்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அன்னபூரணி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பூரணமாக அமைந்துள்ளது. ஆசையும், லட்சியமும் இருந்தால் மட்டும் போதாது அதற்கான முயற்சியும் தீவிரமாக இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்ற அவரது கதாபாத்திரம் புதிதாக முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உதாரணமாய் அமையும்.

சிறு வயதிலிருந்தே நயன்தாராவின் நண்பனாக இருப்பவர் ஜெய். அவரை ஒருதலையாய் காதலித்தாலும் அதை கடைசி வரை சொல்லாமலேயே இருக்கிறார். ஸ்டார் ஹோட்டலுக்கு வேலைக்கு வந்தபின் நயன்தாராவைப் பார்த்து பொறாமையால் எதிர்ப்புகளைத் தரும் வில்லனாக கார்த்திக்குமார். அவரது அப்பாவாக அந்த ஹோட்டலின் தலைமை செப் ஆக சத்யராஜ். சிறுவயதில் சத்யராஜைப் பார்த்துதான் செப் ஆக வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொண்டவர் நயன்தாரா. அதனால், மகனை விடவும், நயன்தாராவுக்கே ஆதரவாக இருக்கிறார் சத்யராஜ். நயன்தாராவின் அப்பாவாக அச்யுத் குமார், அம்மாவாக ரேணுகா, பாட்டியாக சச்சு ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். சமையல் கலைஞராக கேஎஸ் ரவிக்குமார் சில காட்சிகளில் வந்து போகிறார்.

தமன் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் அதன் தாக்கத்தை அதிகமாக்குகிறது. கூடுதலாக இன்னும் ஓரிரு பாடல்களை வைத்திருக்கலாம். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு சூரியனைப் போல பளிச் என இருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு படம் ஒரு முழு டிவி ஷோ-வாக மாறிவிட்டது. 'இந்தியாவின் நம்பர் 1 செப்' யார் என ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை நடத்துவதிலேயே இரண்டாம் பாகம் முழுவதுமாக வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பத்து நிமிடம் காட்ட வேண்டிய ஷோவை ஒரு மணி நேரம் காட்டி டிவி நிகழ்ச்சியைப் பார்ப்பது போல் செய்துவிட்டார்கள்.

பிராமண குடும்பத்து கதாநாயகி என கதையில் வைத்து, அவரது சிறு வயது நண்பர் ஜெய்யின் குடும்பம் முஸ்லிம் குடும்பம் என சர்ச்சை உருவாக வேண்டும் என்பதற்காகவே வைத்திருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது. நயன்தாரா கோழியை அறுப்பது, நான் வெஜ் சமைப்பது என டீடெயிலாகக் காட்டுகிறார்கள். கிளைமாக்சில் இன்னுமொரு சர்ச்சை காட்சியும் உண்டு. இடைவேளைக்குப் பிறகு அடுத்தடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடிவதும் படத்திற்கு மைனஸ்.

அன்னபூரணி - கொஞ்சம் துவர்ப்புடன்…

 

அன்னபூரணி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அன்னபூரணி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ஜெய்

இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் ஜெய். 1985ம் ஆண்டு, ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் பிறந்த ஜெய், சின்ன வயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டவர். விஜய் நடிப்பில் வௌியான பகவதி படத்தின் மூலம் விஜய்யின் தம்பியாக அறிமுகமான ஜெய், அதனைத்தொடர்ந்து சென்னை-28 படம் மூலம் பேசப்படும் நடிகரானார். தொடர்ந்து அவர் நடித்த சுப்ரமணியபுரம் படம் ஜெய்யை ஒரு நடிகராக அடையாளம் காட்டியது. அதன்பின்னர் கோ, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும் படங்கள் ஜெய்யை முன்னணி நடிகராக உயர்த்தியது.

மேலும் விமர்சனம் ↓