
டெஸ்ட்
விமர்சனம்
தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோ
இயக்கம் - சஷிகாந்த்
நடிகர்கள் - மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், முருகதாஸ், காளி வெங்கட், மோகன்ராம், ஷாம்.
வெளியான தேதி - 04.04.2025 (நேரடியாக நெட்பிளிக்ஸ் ரிலீஸ்)
இசை - பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன்
நேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்
ரேட்டிங் - 3/5
கதைக்களம்
டெஸ்ட் என்றாலே படிப்பா இருந்தாலும், விளையாட்டா இருந்தாலும், வாழ்க்கையா இருந்தாலும் வெற்றியா, தோல்வியான்னு தான் கேட்போம். இந்த டெஸ்ட் படமும் மூன்று பேருக்குள் வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு என்று நடக்கும் கேம் தான்.
டெஸ்ட் கிரிக்கெட் வீரரான சித்தார்த் சமீபத்திய போட்டிகளில் சோபிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் சொந்த மண்ணில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. அதில் எப்படியாவது பங்கெடுத்து திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என துடிக்கிறார் சித்தார்த். இதற்காக தனது மனைவி மீரா ஜாஸ்மின் மற்றும் மகனை கூட கவனிக்காமல் கிரிக்கெட் மட்டுமே தனது வாழ்க்கை என இருந்து வருகிறார்.
மற்றொருபுறம் எரிபொருளுக்கு மாற்றாக நீராவி மூலம் இயங்கும் என்ஜினை கண்டுபிடித்து விட்டு, அதற்கு அங்கீகாரம் வேண்டி அரசிடம் போராடி வருகிறார் மாதவன். இதனால் தனது மனைவி நயன்தாராவின் முக்கிய ஆசையை கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அந்த போட்டியை பயன்படுத்தி மேட்ச் பிக்சிங் செய்யும் சூதாட்டங்கள் நடக்கின்றன. அந்த சூதாட்டத்தில் சிக்கினாரா சித்தார்த்? தன்னுடைய கனவை எட்டுவதற்காக மாதவன் என்ன செய்தார்? நயன்தாராவின் கனவு என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்களின் பங்களிப்பு
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மாதவனுக்கு இந்த படம் நல்ல தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. தன்னுடைய நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை தாங்கி பிடித்துள்ளார். லட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் மிடில் கிளாஸ் மாதவன் ஆக வாழ்ந்துள்ளார். அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ளார் நயன்தாரா. குழந்தைக்காக ஏங்கும் காட்சிகளில் எமோஷனல் ஆன நடிப்பை தந்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார் சித்தார்த். ஒரு கிரிக்கெட் வீரரின் மேனரிசத்தை அப்படியே திரையில் காட்டி நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகியுள்ள மீரா ஜாஸ்மின் தனது இயல்பான நடிப்பால் மனதில் பதிகிறார். குழந்தையைப் பிரிந்த ஒரு தாயின் பரிதவிப்பை அசால்டாக நடித்து கைதட்டல் பெறுகிறார். இவர்களோடு ரவுடியாக வரும் ஆடுகளம் முருகதாஸ், காவல்துறை அதிகாரியாக வரும் ஷாம் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளனர்.
மூன்று கேரக்டர், ஒரு கிரிக்கெட் மைதானம் என கதையை அழகாக சொல்லி உள்ளார் அறிமுக இயக்குனர் சஷிகாந்த். திரைக்கதையில் கொஞ்சம் கூட பவுண்டரி லைனை தாண்டாமல் அதே நேரம் ஆடியன்ஸ்க்கு சிக்ஸர் அடித்த அனுபவத்தையும் அவ்வப்போது கொடுக்கிறார். இருப்பினும் டக் அவுட் ஆகும் சோகத்தையும் ஒரு சில காட்சிகளில் வைத்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் மேட்ச் (கதை) சற்று தடுமாறியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு கடைசி ஓவரில் சிக்ஸர் அடிப்பது போல் கிளைமாக்ஸ் வைத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் சஷிகாந்த்.
தற்போது டுவென்டி-20 கிரிக்கெட் போல் சினிமாவிலும் ரசிகர்களின் ரசனை மாறிவரும் வேளையில் டெஸ்ட் மேட்ச்சையும் சுவாரசியமாக ஆடினால் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்துள்ளார். அறிமுக இசை அமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையில் பாடல்கள் மார்கழி கச்சேரி போல் இருந்தாலும், பின்னணி இசையில் ஸ்ருதி கூட்டி உள்ளார். வீராஜ் சின் கோஷில் ஒளிப்பதிவில் சேப்பாக்கம் மைதானம் மற்றும் காட்சிகள் பிரம்மாண்டமாக தெரிகின்றன.
பிளஸ் அண்ட் மைனஸ்
மாதவன், நயன்தாரா, சித்தார்த் மூவரும் கதைக்கு பலமாக அமைந்துள்ளனர். அதோடு வாழ்க்கை என்பதே ஒரு டெஸ்ட் தான். அதில் நம்பிக்கையும் விடாமுயற்சியும் அதோடு நேர்மையும் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதை கிரிக்கெட் மூலமாக சொல்லியிருப்பது சிறப்பு. 2கே கிட்ஸ்கள் பார்க்காத டெஸ்ட் கிரிக்கெட்டை பெரிய திரையில் காட்டி இருப்பது ரசிக்கும்படியாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு நாளும் போட்டி முடியும் போது அம்பயர் அந்த பைல்ஸ்களை கீழே தள்ளிவிடும் காட்சிகளை நுணுக்கமாக புகுத்தி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை நிச்சயம் கவரும்.
ஸ்மார்ட் போன், நவீன டெக்னாலஜி உள்ள இந்த காலகட்டத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் குழந்தையை வீட்டில் அசால்ட்டாக மறைத்து வைப்பது என்பதெல்லாம் சினிமாத்தனம். இவ்வளவு பெரிய ஸ்டார்களை வைத்துக்கொண்டு சுவாரஸ்யம் இல்லாத காட்சிகளை வைத்து இருப்பது படத்திற்கு பலவீனம். இரண்டாம் பாதியில் திரைக்கதையில் தேக்கம் இருப்பது ரசிகர்களை டைவர்ட் செய்கிறது.
டெஸ்ட்- பாசிட்டிவ்
டெஸ்ட் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
டெஸ்ட்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்