சைலன்ஸ்,Silence

சைலன்ஸ் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அனுஷ்கா, மாதவன், அஞ்சலி
தயாரிப்பு - பியூப்பிள் மீடியா பேக்டரி, கோனா பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - ஹேமந்த் மதுக்கர்
இசை - கோபி சுந்தர், கிரிஷ்
வெளியான தேதி - 2 அக்டோபர் 2020 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் ஓடிடியில் வெளியாகி உள்ள மற்றுமொரு படம் இந்த சைலன்ஸ். நிசப்தம் எனப் படத்திற்கு முதலில் பெயர் வைத்துவிட்டு வெளியீட்டிற்கு முன்பாக சைலன்ஸ் என மாற்றிவிட்டார்கள். படத்தில் நிசப்தம் என்றெல்லாம் பாடல் வருகிறது. பெயர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

பெயரை கடைசியில் மாற்றியது போல ஆரம்பத்திலேயே படத்தின் கதையையும் மாற்றியிருக்கலாம். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1978ல் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மையக்கருவை அப்படியே இந்தப் படத்திற்காக சுட்டிருக்கிறார்கள். கூடவே, கமல்ஹாசன் நடித்து 1993ல் வெளிவந்த மற்றொரு படமான கலைஞன் படத்தின் சஸ்பென்சையும், கொஞ்சம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், நாம் ஏற்கெனவே சில பல படங்களில் பார்த்த ஒரு காட்டு பங்களா, அதில் ஒரு பேய் என்ற கதையும் சேர்த்து கொஞ்சம் கூட பயம் காட்டாமல் விட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் சியாட்டில் நடக்கும் கதை. திருமண நிச்சயம் ஆன மாதவன், அனுஷ்கா ஒரு பெயின்ட்டிங்கைத் தேடி புறநகர்ப் பகுதியில் உள்ள தனிமையான வில்லா ஒன்றிற்கு வருகிறார்கள். அந்த வீட்டில் உள்ள பேய் ஒன்று மாதவனைக் கொன்று விடுகிறது. அனுஷ்கா மட்டும் தப்பித்து ஓடி வந்துவிடுகிறார். மாதவன் கொலைக்கு என்ன காரணம் என்பதை போலீஸ் அதிகாரியான அஞ்சலி கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். கொலையாளியை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

அமெரிக்கா பின்னணியில் மட்டும் ஒரு படம் இருந்தால் அது ஹாலிவுட் தரத்திற்கு வந்துவிடாது. ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை எப்படி விறுவிறுப்பாகக் கொடுப்பது என்பதில் இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் தடுமாறியிருக்கிறார். திரைக்கதை ஆங்காங்கே பட் பட் என கட்டாகிப் போகிறது. பிளாஷ்பேக் மேல் பிளாஷ்பேக் வைத்து இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தைக் குறைத்திருக்கிறார்.

படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் அனுஷ்கா. வாய் பேச முடியாத, காது கேளாதவர் அவர். சைகை மொழி மூலமும், அடிக்கடி போனில் டைப் செய்து வாய்ஸ் தகவல் மூலமும் தன் உணர்வை வெளிப்படுத்துகிறார். எப்போதும் சோக மயமாகவே இருக்கிறார். அனுஷ்காவை அப்படியெல்லாம் எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பது.

படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மாதவன். மிகவும் பிரபலமான இசைக் கலைஞர். அழகான மாதவனை சில நாட்கள் தாடி, அதிக மேக்கப்பில்லாத முகம் என அழகில் அக்கறையில்லாத ஒருவராகக் காட்டியிருக்கிறார்கள். சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசனைப் பார்த்திருந்தால் மாதவன் இந்தப் படத்திலெல்லாம் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார்.

அமெரிக்கா பெண் போலீஸ் ஆக அஞ்சலி. நன்றாக இளைத்துப் போயிருக்கிறார். போலீசுக்கான கம்பீரம் இல்லை என்றாலும், உண்மையைக் கண்டுபிடிக்க அவர் ஆர்வத்துடன் இறங்குவதில் அது பெரிய குறை இல்லாமல் தெரிகிறது.

அனுஷ்காவின் நெருங்கிய தோழியாக ஷாலினி பாண்டே. அனுஷ்காவின் நண்பராக சுப்புராஜ். போலீஸ் கேப்டனாக மைக்கேல் மேட்சன். அவரவர் கதாபாத்திரங்களில் என்ன தேவையோ அதைக் கொடுத்திருக்கிறார்கள்.

பாடல்களுக்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். புது உணர்வே என்ற பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. கிரிஷ் பின்னணி இசையமைத்திருக்கிறார்.

யார் கொலையாளி என்பதில் மட்டும் ஓரளவிற்கு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். படத்தில் வேறு ஏதாவது, புதிதாக, வித்தியாசமாக ஏதாவது சொல்லியிருக்கிறார்களா என்று பார்த்தால் ஒன்றும் புலப்படவில்லை.

சைலன்ஸ் - சைலன்ஸ்

 

பட குழுவினர்

சைலன்ஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மாதவன்

தமிழ் சினிமாவின் பல இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகர் மாதவன். மேடி என்ற அடைமொழியோடு தமிழ், இந்தி, அங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவிட்டார். 1970ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர் தமிழர் மாதவன். ஆரம்பத்தில் டெலிவிஷன் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த மாதவன், மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், இந்தி தவிர்த்து கன்னடம் மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓