Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தில்லு முல்லு

தில்லு முல்லு,Thillu Mullu
  • தில்லு முல்லு
  • சிவா
  • இஷா தல்வார்
  • இயக்குனர்: பத்ரி
25 ஜூன், 2013 - 13:43 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தில்லு முல்லு

  

தினமலர் விமர்சனம்


கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்கு முன் 1981-ம் வருடம் வெளிவந்த ‘‘தில்லுமுல்லு’’ திரைப்படம், நீண்ட, நெடிய இடைவெளிக்குப்பின் தமிழ் சினிமா ரசிகர்கள் 32 பற்களும் தெரிய சிரித்து மகிழ, பத்ரி இயக்கத்தில் ‘மிர்சி’ சிவா நடிக்க, மீண்டும் வெளிவந்திருக்கிறது! ‘கோல்மால்’ என்னும் இந்திப்பட ரீமேக்கான ரஜினி நடித்த ‘தில்லுமுல்லு’ சூப்பர் என்றால் ‘மிர்சி’ சிவாவின் ‘தில்லுமுல்லு’ சூப்பரோ சூப்பர் என்பது ஹைலைட்!

முருக பக்தரான பிரகாஷ்ராஜின் பிரபல மினரல் வாட்டர் கம்பெனியின் மூத்த வக்கீல் இளவரசு. ‘மிர்சி’ சிவாவின் தாய்மாமா. ஒரு கேசில் இளவரசின் வ(வா)த திறமையால் தனக்கும் தன் தங்கைக்கும் சேரவேண்டிய 5 கோடி மதிப்பிலான பூர்வீக வீட்டை இடிக்கிறார் சிவா. அதனால் சிவாவிற்கும், அவரது தங்கைக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளவரசு. சிபாரிசு பிடிக்காத பிரகாஷ்ராஜின் வாட்டர் கம்பெனி முக்கிய பொறுப்பு நேர்காணலுக்கு, சிவாவை தன் உறவு என காட்டிக்கொள்ளாமல் அனுப்பி வைக்கிறார்.

முருக பக்தரான பிரகாஷ்ராஜை அவரது ரூட்டிலேயே போய் கவிழ்த்து, கவர்ந்து... நாற்பதாயிரம் சம்பளத்துடன் கூடிய அந்த வேலையை கைப்பற்றும் சிவா, அதை தக்க வைத்துக்கொள்ள போடும்‌ டபுள் ஆக்டிங்கும், நான்வெஜ் பார்ட்டியான தற்காப்பு கலை தெரிந்த தம்பி ‘கங்கு-லீ’ என்னும் டிராமாவும் அவர்மீது பிரகாஷ்ராஜின் மகளும் நாயகியுமான இஷா தல்வாருக்கு ஏற்படும் காதலும் கலாட்டாவும்தான் ‘தில்லுமுல்லு’ படத்தின் லொள்ளு ஜொல்லு கதை மொத்தமும்.

முருகபக்தர் பசுபதி - கராத்தே கங்கு-லீ என இருவேறு கெட்-அப்புகளில் மிர்சி சிவா செம பில்டப் காட்டி நடித்திருக்கிறார். பலே, பலே! அதிலும் தீவிர முருகபக்தரான உங்களுக்கு பசுபதிங்கற பெயர் தமிழ் சினிமா வில்லன் மாதிரி இருக்கிறதே...?! என பிரகாஷ்ராஜ் இன்டர்வியூவுக்கு வந்த சிவாவிடம்  திடீரென  கேட்குமிடத்தில், விக்கித்துப்போகும் சிவா, ஒரு சில நொடிகளில் சமாளித்துக்கொண்டு பசுபதிங்கற பெயருக்குள்ளே முருகனின் ஆறுபடை வீடும் அடங்கியிருக்குன்னுதான் எனக்கு அந்தப்பெயரே வச்சாங்க... என்று ‘‘ப-பழனி, சு-சுவாமிமலை, மீண்டும் ப-பழமுதிர்சோலை, கடைசி தி-யில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி’’ன்னு 3 படை வீடுகளும் ஒட்டு மொத்தமா அடங்கியிருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பீல் - பீல் பண்ணிக்குங்கன்னு கொடுப்பாரு பாருங்க ஒரு விளக்கம். தியேட்டரில் அதில் ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் சீன் பை சீன் தொடர்ந்து க்ளைமாக்சிலும் தொற்றிக்கொள்வது ‘தில்லுமுல்லு’ படத்திற்கு மட்டுமல்ல, சிவாவிற்கும் பிளஸ்!

பழைய ‘தில்லுமுல்லு’வில் தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தை இதில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருக்கிறார். சவாலான பாத்திரம் என்றாலும் சபாஷ் வாங்கிவிடுகிறார் மனிதர். சிவா வீட்டில் வேலைபார்க்கும் குப்பத்து மனுஷி கோவை சரளாவை, சிவாவின் அம்மா, முருக அடிமை என நம்பி அவர் காலில் விழும் இடங்களில் பிரகாஷ்ராஜ், சிவாவை மட்டுமல்ல, தேங்காய் சீனிவாசனையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் என்றால் மிகையல்ல!

கோவை சரளா, அலகும் பேசமுடியாத வாயுமாக கிளப்பி இருக்கிறார். கதாநாயகி இஷாதல்வார் கொஞ்சகாலம் தமிழ் சினிமாவில் கிளாமராக காலம் தள்ளுவார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா எல்லாரும் படம் முழுக்க இருந்தாலும் க்ளைமாக்சில் வரும் சந்தானம் இவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறார்.

லக்ஷ்மணனின் ஒளிப்பதிவு அழகு அருமை! எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ‘தில்லுமுல்லு’ பாடலுக்கு அவர்கள் போடும் ஆட்டமும் இளமை புதுமை! படத்தின் வசனம் மற்றும் காட்சி அமைப்புகளில் பழைய தில்லுமுல்லுவில் இருந்து முற்றிலும் புதுமையாக நிறைய யோசித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருந்தாலும் பழைய ‘ராகங்கள்-16’ பாடலை அப்படியே வைத்திருக்கும் இடத்தில் இயக்குநர் பத்ரி நின்றிருக்கிறார் - ‘வென்றிருக்கிறார்’.

வேந்தர் மூவிஸ் எஸ்.மதனின் நேரடி முதல் தயாரிப்பு ‘‘தில்லுமுல்லு’’ என்றாலும், வசூல் -  ‘‘அள்ளு... தள்ளு...’’ என்றளவில் சூப்பர் டூப்பர் ஹிட்!


----------------------------------------------------------------------------



குமுதம் விமர்சனம்

32 வருடங்களுக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் -பாலசந்தர் காம்பினேஷனில் வெளியான படத்தின் ரீ(ல்) மேக்! வெட்டி ஆபீசரான ஹீரோ. மொள்ளமாரித்தனம் செய்து ஒரு பெரிய அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து முதலாளியின் மகளையே டாவு கட்டும் எவர்கிரீன் கதை!

ரஜினி வேடத்தில் சிவா என்ற அதிர்ச்சியைத் தாங்க முடியாதுதான் என்றாலும் மனிதர் தலைவர் ஸ்டைல் பக்கமே போகாமல் தன் தனி பாணியினால் பாஸ் செய்து விடுகிறார். டிராயரைக் கழற்றச்சொல்லி கராத்தே கற்றுத்தருவது ஹாஹா! அவரது பெயருக்கு முன்னால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று போட்டுக்கொள்வது என்னதான் கிண்டலாக இருந்தாலும் ரொம்ப ஓவர் பாஸ்! இஷா தல்வர், சரியான சப்பாத்தி! அப்பாவித்தன பிரகாஷ்ராஜ் ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரிந்தும், அதிலிருந்து அவர் மீண்டுவர படும் பாடு யதார்த்தம். வாயைத் திறக்கமுடியாமல் ஊசி குத்தி வைத்தாலும் அலப்பரை செய்கிறார் கோவை சரளா. க்ளைமாக்சில் சந்தானம், வழக்கமான சொந்த டயலாக்கில் ஸ்கோர் செய்கிறார்!

எம்.எஸ்.வி.  யுவன் கூட்டணியில் புதிய பாடல்களைவிட பழைய பாடல்களே பரவசப்படுத்துகின்றன.

தில்லுமுல்லு - ஓல்டு இஸ் கோல்டு

குமுதம் ரேட்டிங் - ஓகே.


-----------------------------------------------------------



கல்கி விமர்சனம்


ரஜினியின் ஹியூமரில் கொடிகட்டிப்பறந்த தில்லுமுல்லு, சிவாவின் ரகளையான காமெடியில் மறுமுறையும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. கதையை மட்டும் அப்படியே எடுத்துக்கொண்டு, திரைக்கதையை முற்றிலும் சொந்தமாக மாற்றியிருக்கும் இயக்குனர் பத்ரியின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். புது டிரீட்மென்டிலும் செம நகைச்சுவை.
வேலை தேடும் சிவாவுக்கு பிரகாஷ்ராஜ் நிறுவனத்தில் வேலை கிடைப்பது, முருகன் அருளால், ‘பசுபதி’க்கு சிவா கொடுக்கும் விளக்கத்திலேயே தியேட்டர் களைகட்டுகிறது. கான்டாக்ட் ‌கிளாஸ் போட்டிருப்பவர் தம்பி கந்தன்கங்குலி, அது இல்லாதவர் அண்ணன் பசுபதி என்று பிரித்து, தம்பியை கராத்தே வாத்தியார் ஆக்கி, குழப்பத்துக்கு ரூட் போடுகிறார் டைரக்டர்.
கந்தன் கங்குலி, பிரகாஷ்ராஜ் மகள் இஷாவுக்கு கராத்தே கற்றுக்கொடுக்கும்போது, கூடவே காதலையும் சேர்த்து ஊட்டிவிடுகிறார். சிவா திரையில் வரும்போதெல்லாம் காமெடி எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. ஓடி ஓடியே வில்லன்களைப் பஞ்சடைய வைப்பது, துபாய் பயணத்துக்கு அடிபோடுவது என்பதெல்லாம் ரொம்ப அசால்டாகச் செய்கிறார் சிவா. கடைசியில் என்ட்ரி கொடுக்கும் சந்தானம், குழப்பத்துக்குக் குழப்பம் சேர்த்து, தியேட்டரையே கலக்குகிறார்.
வரிக்கு வரி பஞ்ச் லைன், நக்கல், கிண்டல் என்று படம்நெடுக, சிரிப்பு மழை. பிரகாஷ்ராஜ் தம் பாடி லேங்குவேஜை மாற்றிக்கொண்டு மிக இயல்பாக நகைச்சுவைக்கு வலு சேர்க்கிறார். இளவரசுவும் தேவதர்ஷினியும் கூடுதல் ஹைலைட். பரோட்டா சூரிக்கு கைலி, லுங்கியில் இருந்து ஸ்டைல் பேன்ட், கண்ணாடிக்கு பிரமோஷன். மும்பை இறக்குமதி இஷா தல்வாருக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்ட் காத்திருக்கிறது. நடிப்பைவிட டான்ஸ் நளினம். கோவை சரளாவுக்கு அவ்வளவாக வேலை இல்லை.

‘ராகங்கள் பதினாறு’ பாடல் புது லொகேஷன்களில் வளையவர, ‘தில்லுமுல்லு’ ரீமிக்ஸ் பயங்கர ‌டிரெண்டியாக இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவுக்கே உண்டான பெப்.

இன்றைய டெக்னாலஜி யுகத்திலும்‌ ஆள்மாற்றல் ஏமாற்றல் செய்ய முடியுமா என்று டைரக்டர் யோசித்திருந்தால் இன்னும் லாஜிக்கை மேம்படுத்தி இருக்கலாம். வெறும் கண்கள் வித்தியாசமாக இருப்பது மட்டும் போதுமா என்ன? சந்தேகம் ஏற்பட வழியாக இல்லை? ஆனால், அதைப்பற்றி யோசிக்கத் தேவையில்லை. ஜாலியாக மக்கள் சிரித்தால் போதும் என்பது டைரக்டர் பத்ரியின் எண்ணமாக இருக்க வேண்டும்‌.

தில்லுமுல்லு - பன்ச் சிரிப்புக்குப் பஞ்சமில்லை!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தில்லு முல்லு தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in