வல்லான்
விமர்சனம்
தயாரிப்பு - விஆர் டெல்லா பிலிம் பேக்டரி
இயக்கம் - மணி சேயோன்
இசை - சந்தோஷ் தயாநிதி
நடிப்பு - சுந்தர் சி, தன்யா ஹோப், ஹீபா பட்டேல்
வெளியான தேதி - 24 ஜனவரி 2025
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
ஒரு கொலைக்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு இன்ஸ்பெக்டரைப் பற்றியக் கதை. இப்படியான கதைகளுடன் வந்த பல படங்களில் இந்தப் படமும் ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும் யார் குற்றவாளி என்ற சஸ்பென்ஸை நாம் யூகிக்க முடியாதபடி கிளைமாக்ஸ் வரை காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர்.
உயரதிகாரியை அடித்ததால் சஸ்பென்ட் செய்யப்பட்டவர் இன்ஸ்பெக்டர் சுந்தர் சி. பிரபலமான கிறிஸ்துவ மத போதகர் ஒருவரின் மருமகன் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். அந்தக் கொலைக்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்கும்படி சுந்தர் சியிடம் கேட்டுக் கொள்கிறார் உதவி கமிஷனர். தனது வருங்கால மனைவி காணாமல் போன வழக்குடன் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்ற காரணத்தால் சுந்தர் சியும் கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். கொலை குற்றவாளி யார் என்பதை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
வருங்கால மனைவி காணாமல் போனதால் எப்போதும் ஒரு சோகத்துடனேயே இருக்கிறார் சுந்தர் சி. ஆக்ஷன் காட்சிகளில் அவரது அதிரடி பொருத்தமாக இருக்கிறது. எத்தனை பேரை அடித்தாலும் அது நம்பும்படி இருக்கிறது. ஒரு இயக்குனராக பல படங்களில் பலரை நடிக்க வைத்தவர், தான் நடிக்கும் போது மட்டும் நடிப்பில் தடுமாறுகிறார். ஏதோ கடமைக்குப் பேசி நடிப்பதைப் போல நடிக்கிறார். ஒரு அழுத்தம், ஒரு உணர்வுபூர்வம் என நடிப்பில் எதுவும் இல்லாமல் இருக்கிறது.
சுந்தர் சி ஜோடியாக தன்யா ஹோப் பிளாஷ்பேக்கில் சில காட்சிகளில் வந்து போகிறார். படம் முழுவதும் வரும் நாயகியாக ஹீபா பட்டேல் நடித்திருக்கிறார். சினிமாவில் நாயகியாக நடிக்க ஆசையுள்ளவர் கொலை வழக்கில் சந்தேகத்தில் சிக்கி, சுந்தர் சிக்கு உதவுகிறார். மற்ற கதாபாத்திரங்களில் கொல்லப்படும் இளம் தொழிலதிபராக கமல் காமராஜ், அவரது மனைவியாக அபிராமி வெங்கடாசலம், அவரது மாமானாராக ஜெயக்குமார் நடித்திருக்கிறார்கள்.
கிரைம் திரில்லர் படத்துக்குரிய ஒரு ஓட்டத்துடன் மணிபெருமாள் கேமரா படம் முழுவதும் பயணித்துள்ளது. திரில்லர் படம் என்றாலே பின்னணி இசையமைப்பாளர்களுக்கு வேலை எளிதாகிவிடும். பரபரப்பான ஒரு பின்னணி இசையைக் கொடுத்தாலே போதும், அதைச் சரியாகவே கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.
படத்தில் தேவையற்ற காட்சிகள் என நீட்டி முழக்காமல் இருக்கிறார்கள். பிளாஷ்பேக்கைக் கூட சீக்கிரமே முடித்துள்ளார்கள். வழக்கமான ஒரு திரில்லர் படமாக மட்டுமே இருக்கிறது. படத்தில் வேறு எந்த வித்தியாசமான காட்சிகளையும் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் படம் போரடிக்காமல் நகர்கிறது.
வல்லான் - வழக்கமாய் வகுத்த வாய்க்கால்