விமர்சனம்
தயாரிப்பு - மில்லியன் ஸ்டுடியோ
இயக்கம் - குகன் சென்னியப்பன்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - வசந்த் ரவி, சத்யராஜ், தன்யா ஹோப்
வெளியான தேதி - 7 ஜுன் 2024
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2/5
ஹாலிவுட் படங்களைப் பார்த்து அது போல நாமும் கதையை உருவாக்கி படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இங்குள்ள பல இயக்குனர்களுக்கு இருக்கிறது. ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது அதை கோளாறு இல்லாமலும் கொடுக்க வேண்டும். படத்திற்கு 'வெப்பன்' எனப் பெயர் வைத்துவிட்டு வெறுப்பாகும் அளவிற்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
கதையின் முன் கதையாக ஹிட்லரை எல்லாம் இழுத்துவிட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காதில் பூ சுற்றுவதை விடவும் மாலையையே சுற்றியிருக்கிறார் இயக்குனர்.
'சூப்பர் ஹியூமன்'கள் அதாது சாதாரண மனிதனை விடவும் அதிக ஆற்றல் படைத்த மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள் என நம்புபவர் வசந்த் ரவி. யு டியூப் சேனல் ஒன்றை நடத்தில் அதில் அதிசய நிகழ்வுகளைப் படம் பிடித்து போடுபவர். தேனியில் உள்ள நியூட்ரினோ மையத்தில் அசம்பாவிதம் ஒன்று நடக்க அந்த இடத்தில் இருந்த வசந்த் ரவியை தேசிய பாதுகாப்பு படையினர் கைது செய்கிறார்கள். அவர் வெறும் யு டியூபர் மட்டுமல்ல அவருக்குப் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது என அவரை துருவித் துருவி விசாரிக்கிறார்கள். வசந்த் ரவி யார், அவர் என்ன செய்கிறார், எதற்காக நியூட்ரினோ மையத்திற்கு வந்தார், ஏன் கைதானார் என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.
ஆரம்பத்தில் வசந்த் ரவியின் கதை என காட்டிவிட்டு பின்பு பிளாஷ்பேக் மேல் பிளாஷ்பேக் காட்டி திரைக்கதையில் குழப்பி இருக்கிறார்கள். ஒரு தெளிவான திரைக்கதையுடன் கொஞ்சம் பிரம்மாண்டத்தையும் சேர்த்திருந்தால் படத்தில் ஒரு சுவாரசியம் இருந்திருக்கும்.
விசாரணைக் காட்சிகளில் வசந்த் ரவி ஓவர் ஆக்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். எதற்காக அவ்வளவு பொங்க வேண்டும் என்று தெரியவில்லை. பிளாஷ்பேக் காட்சிகளில் என்னென்னமோ செய்கிறார், எங்கெங்கோ போகிறார், ஆனால், அவையெல்லாம் எதற்காக என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இடைவேளைக்குப் பின்புதான் சத்யராஜ் வருகிறார். படத்தில் அவர்தான் சூப்பர் ஹியூமன். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல காட்சிகளை அமைத்தாலும் அவரை ஒரு தாத்தா போன்ற தோற்றத்தில்தான் எளிமையாகக் காட்டியிருக்கிறார்கள்.
படத்தில் இன்னொரு கிளைக் கதையும் உண்டு. இந்தியப் பொருளாதாரத்தையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'பிளாக் சொசைட்டி' என்ற ஒரு அமைப்பு. அதன் தலைவராக ராஜீவ் மேனன். அந்த சொசைட்டியில் உள்ள சிலர் என ஒரு கதையை அளந்துவிட்டிருக்கிறார்கள். ராஜீவ் மேனனை வில்லனாக பார்க்க முடியவில்லை, அதற்கு துளி கூட பொருத்தம் இல்லாமல் இருக்கிறார்.
வசந்த் ரவியின் காதலியாக தன்யா ஹோப். வசந்த் ரவியுடனேயே சுற்றி வருகிறார். ஆனால், வசந்த் ரவி யார் என்பது பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது என்பதெல்லாம் பூச்சுற்றல் விவகாரம். அதிலும் வில்லன் ராஜீவ் மேனனின் மகளாக இருந்து கொண்டு அது கூடத் தெரியாது என்பதையெல்லாம் நம்ப முடியவில்லை.
ஜிப்ரான் பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவில் வேறு ஒரு தோற்றத்தைப் படத்திற்குக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்.
ஹிட்லர், ஸ்வஸ்திக், சூப்பர் ஹியூமன் சீரம், குண்டலினி சக்தி, ஆரா என நிறைய கதைகளைச் சொல்கிறார்கள். யோசித்ததெல்லாம் சரி, ரசிகர்களுக்குப் புரியும்படியான படத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஏன் யோசிக்கவில்லை.
வெப்பன் - வெப்பம்